பாரதூரமான போர்க் குற்றங்களில் ஈடுபட்ட ஒரு குற்றவாளிக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்காது பிரித்தானிய அரசாங்கம் நீதியை நிலைநாட்டத் தவறியுள்ளதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் குற்றம் சாட்டியுள்ளது.
ஐக்கிய இராச்சியத்தில் எந்தவித குற்றச் செயல்களையும் சிறிலங்கா இராணுவத்தின் துணை இராணுவக்குழுவைச் சேர்ந்த கருணா மேற்கொண்டார் என்பதனை நிரூபிப்பதற்கு போதியளவு சாட்சியங்கள் முன்வைக்கப்படாத காரணத்தினால் வழக்குத் தொடர முடியாது என்று நேற்று வெள்ளிக்கிழமை பிரித்தானிய அரசாங்கம் அறிவித்தது.
இது தொடர்பில் மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் ஆசியப் பிராந்தியப் பணிப்பாளர் பிரட் அடம்ஸ் தெரிவித்துள்ளவற்றின் முக்கிய பகுதிகள் வருமாறு:
கருணா போன்ற மிகத் தீவிரமான மனித உரிமை மற்றும் போர்க் குற்றவாளி ஒருவரை தண்டிப்பதற்கான அரிய சந்தர்ப்பமொன்றை பிரித்தானிய அரசாங்கம் கைநழுவ விட்டுள்ளது.
உலகின் எந்தப் பகுதியில் இவ்வாறான குற்றச் செயல்களில் ஈடுபட்டிருந்தாலும் தண்டனை வழங்கப்பட வேண்டியது மிகவும் இன்றியமையாது.
கருணா தண்டனைகளில் இருந்து தப்பித்தால் அது கருணாவினால் துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கப்பட்டோருக்கும், அனைத்துலக சட்டங்களுக்கும் இழைக்கப்படும் மாபெரும் தீங்காகவே நோக்கப்பட வேண்டும்.
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் மூத்த தளபதியாக கருணா கடமையாற்றியுள்ளார். 2004 ஆம் ஆண்டு மார்ச் மாதம் விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து பிரிந்து செயற்படும் காலம் வரையில் இயக்கத்தின் இரண்டாம் நிலைத் தலைவராகவே கருணா கருதப்பட்டார்.
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிற்கு எதிராக கருணா குழுவினர் போராட்டங்களை முன்னெடுத்தமையின் காரணமாக அரசாங்கம் அவருக்கு எதிராக எந்தவித சட்ட நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாறாக அவருக்கு ஆதரவு வழங்கப்பட்டது.
2007 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 2 ஆம் நாள் கருணாவை ஐக்கிய இராச்சிய குடிவரவுத் திணைக்கள அதிகாரிகள் கைது செய்தனர்.
போலிக் கடவுச்சீட்டைப் பயன்படுத்தி பிரித்தானியாவிற்குள் பிரவேசிக்க முற்பட்ட குற்றச்சாட்டிற்காக கருணாவிற்கு 9 மாத சிறைத்தண்டனை வழங்கப்பட்டது.
எனினும், இந்தத் தண்டனைக் காலப்பகுதியில் அரைவாசிக் காலத்திலேயே கருணா விடுதலை செய்யப்பட்டார்.
கடந்த 9 ஆம் நாள் கருணா பிரித்தானிய குடிவரவு- குடியகல்வு முகாமிற்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
இலங்கையில் பாரியளவிலான மனித உரிமை மீறல் சம்பவங்கள் இடம்பெற்று வருவதாக அராசங்கத்தையும், விடுதலைப் புலிகள் அமைப்பையும் பிரித்தானிய அரசாங்கம் குற்றம் சாட்டி வருகின்றது.
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து வெளியேறிய பின்னர் சிறிலங்கா அரச படையினரின் ஒத்துழைப்புடன் தமது இராணுவ நடவடிக்கைகளை கருணா முன்னெடுத்தார்.
வீடுகள், கோவில்கள், மைதானங்கள், வீதிகள், இடைத்தங்கல் முகாம்கள் மற்றும் திருமண வீடுகளிலிருந்து சிறுவர்களை கடத்திச் சென்று தமது படையில் கருணா இணைத்துக்கொண்டார்.
2007 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் மனித உரிமைகள் கண்காணிப்பகம் வெளியிட்ட அறிக்கைகளில் இந்த கடத்தல்கள் தொடர்பான தகவல்கள் தெளிவாக விபரிக்கப்பட்டுள்ளன.
வெளிநாடுகளில் மிக மோசமான மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டோர் அதாவது அனைத்துலக சட்டங்களுக்கு புறம்பான வகையில் செயற்பட்டோருக்கு பிரித்தானிய அரசாங்கம் தண்டனை வழங்கியுள்ளது.
ஆப்கானிஸ்தானின் மிக மோசமான போர்க் குற்றவாளி பாயாடி சர்வார் சார்தாருக்கு ஐக்கிய இராச்சிய நீதிமன்றம் தண்டனை வழங்கியிருந்தமையை இதற்கு மேற்கோளாகக் காட்டலாம்.
கருணாவை பிரித்தானியாவிலிருந்து வெளியேற்றுவதற்கு முன்னர், காவல்துறையினரால் முன்வைக்கப்பட்டுள்ள சாட்சியங்கள் குறித்து மிக உன்னிப்பாக அவதானிக்கப்பட வேண்டும்.
பிரித்தானியாவிலிருந்து கருணா வெளியேற்றப்பட்டால், சிறிலங்கா அரசாங்கம் கருணாவிற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அவ்வாறு சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படா விட்டால் மனித உரிமை விவகாரங்கள் குறித்து சிறிலங்கா அரசாங்கத்திற்கு எதிராக சுமத்தப்பட்டு வரும் குற்றச்சாட்டுகள் மேலும் வலுப்பெறக்கூடிய சாத்தியங்கள் உருவாவதை தவிர்க்க முடியாது என்றார் அவர்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment