ராமேஸ்வரம் பகுதி தங்கச்சி மடத்திலிருந்து நண்டு பிடிக்கச் சென்று காணாமல் போன மீனவர்களை கண்டுபிடிக்க இந்திய கடற்படை தேடும் பணியை மேற்கொண்டுள்ளது என்று மீன் வளத்துறை அமைச்சர் கே.பி.பி.சாமி தெரிவித்தார்.
.
இதுதொடர்பாக சட்டசபையில் இன்று அதிமுக மற்றும் பாமக உறுப்பினர்கள் ஒரு பிரச்சனையை எழுப்பினார்கள். அதிமுக சார்பில் ஜெயக்குமார் பேசியதாவது:
"ஒரு நாள் போவார், ஒரு நாள் வருவார் ஒவ்வொரு நாளும் துயரம்' என்பதுதான் நமது மீனவர்களின் வாழ்க்கை. கடந்த 12 நாட்களுக்கு முன்பு ராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த தங்கச்சி மடம் மீனவர்கள் 19 பேர் நண்டு பிடிப்பதற்காக சென்று கரைக்கு திரும்பவில்லை.
நண்டு பிடிக்கச் செல்லும் மீனவர்கள் திசை தவறி செல்ல வாய்ப்பில்லை. அவர்களை இலங்கை கடற்படையினரோ அல்லது தீவிரவாதிகளோதான் கடத்திச் சென்றிருக்க வேண்டும்.
இலங்கை மீனவர்கள் எல்லை தாண்டி இங்கே வருகிற போது அவர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கப்படுகிறது. ஆனால், நமது மீனவர்கள் விஷயத்தில் பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது.
இப்படியாக ஒரு கண்ணில் வெண்ணையும், ஒரு கண்ணில் சுண்ணாம்பும் வைப்பது என்ன நியாயம்? இதுகுறித்து பிரதமருக்கு முதல்வர் கடிதங்களை எழுதியதால் என்ன பயன் ஏற்பட்டது? தொடர்ந்து பாதிக்கப்படுகிற மீனவர்களை காப்பதற்கு அரசு என்ன நடவடிக்கை எடுத்து வருகிறது? என்று கேட்டார் ஜெயக்குமார்.
அவரைத் தொடர்ந்து பாமக உறுப்பினர் வேல்முருகன் பேசுகையில், கச்சத்தீவை தாரை வார்த்ததில் இருந்தே எல்லா ஆட்சியிலும் இத்தகைய சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இலங்கை மீனவர் பிரச்சனையில் நமது அரசு மனித நேயத்துடன் நடந்து வருகிறது. ஆனால், இலங்கை அரசு நமது மீனவர்கள் மீது இந்த மனித நேயத்தை காட்டுவதில்லை. எனவே இது போன்ற பாதிப்புகள் இனிமேல் நடக்கமால் தடுக்க அரசு நிரந்த தீர்வு காணுமா என்று வினவினார்.
இதற்கு பதில் அளித்து அமைச்சர் கே.பி.பி.சாமி கூறுகையில், உறுப்பினர் சொன்னது போல இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது. முதலமைச்சரும் உரிய நடவடிக்கை எடுத்து அவ்வப்போது மீனவர்கள் விடுவிக்கப்பட்டு வருகிறார்கள். 12 தினங்களுக்கு முன்பு நண்டு பிடிக்கச் சென்று காணாமல் போன தங்கச்சி மட மீனவர்களை கண்டுபிடிக்க இந்திய கடற்படை தொடர்ந்து தேடும் பணியை மேற்கொண்டு வருகிறது என்று தெரிவித்தார்.
Wednesday, May 14, 2008
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment