எம் இதய அஞ்சலி: கால்நூற்றாண்டு காலம் துணிச்சலுடன் சமூகப்பணியாற்றிய மனுசி
- பத்மநாபா ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி
மகேஸ்வரி வேலாயுதம் அவர்கள் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட தமிழ் அரசியல் கைதிகளின் வழக்கறிஞராக தமது சமூகப் பிரவேசத்தை மேற்கொண்டவர். 80களின் முற்பகுதியில் 1983 இன வன்முறைக்கு முன்னரே அவர் இந்தப் பணியில் கொழும்பில் இருந்து ஈடுபட்டவர்.
தமிழர்கள் மத்தியில் அக் காலகட்டத்தில் இப் பணியை செய்வதற்கு ஒரு சிலரே முன் வந்தார்கள். அவர்களில் மகேஸ்வரி வேலாயுதமும் ஒருவர்.
1983 இன் பின்னரான சூழ்நிலைகளில் தமிழகம் சென்ற மகேஸ்வரி தமிழ் தகவல் மையத்தின் நிர்வாகிகளுள் ஒருவராக பணி புரிந்தார். அந்த நிர்வாகத்தில் இருந்த வேறு சிலருடன் அபிப்பிராய பேதம் கொண்டு மதுரையை மையமாகக் கொண்ட தமிழ் தகவல் மையத்தை இயக்கினார்.
அக்காலத்தில் இடம் பெயர்ந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் அகதி முகாம்களில் வாழ்ந்த மக்களுக்குரிய தேவைகளை நிறைவு செய்வதில் அவர் அல்லும் பகலும் அயராது பாடுபட்டார். தமிழக நிர்வாக மட்டங்களில் அகதி மக்களின் நலன்கள் தொடர்பான விடயங்களை எடுத்துச் சொல்வதிலும், தீர்வு காண்பதிலும் இடையறாது பாடுபட்டார்.
அக்காலகட்டத்தில் தமிழகத்தில் தங்கியிருந்த தமிழ் தலைவர்கள், போராட்டக்காரர்களுடன் உறவுகளைப் பேணி தேசிய ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டத்தில் தனது பிரக்ஞையையும், பங்களிப்பையும் வழங்கிக் கொண்டிருந்தார்.
டெல்லி வரை சென்று ஈழத் தமிழ் மக்களின் பிரச்சினைகளை எடுத்துரைப்பதிலும் அகிம்சை வழியிலான போராட்ட நடவடிக்கைகளை முன்னெடுப்பதிலும் அவர் பங்கேற்றிருந்தார்.
ஆன்மீக ஈடுபாடு கொண்ட மகேஸ்வரி அவர்கள் சமூக இயக்கங்களாக செயற்பட்ட ஆன்மீக நிலையங்களுடன் தொடர்புகளை கொண்டிருந்தார். சின்மயா மிஷனில் அவர் ஈடுபாடு செலுத்தினார்.
1980 களின் நடு;ப்பகுதியில் துரதிஷ்டவசமாக டெலோ இயக்கத்தினுள் ஏற்பட்ட உள் முரண்பாட்டில் பலர் பலியாக நேர்ந்தபோது மகேஸ்வரி அவர்களின் மூத்த சகோதரி அவர்களின் தலைமையில் வடமராட்சியில் இருந்து யாழ் நகரை நோக்கி பிரமாண்டமான ஊர்வலமொன்று நடத்தப்பட்டது. இந்த ஊர்வலம் இயக்கங்களில் வன்முறை, உயிர்ப்பலி என்பவற்றை ஆட்சேபித்து நடத்தப்பட்டது. சகோதரப் படுகொலைகளை ஒத்த செயற்பாடுகளை நிராகரித்த முதலாவது மக்கள் எதிர்ப்பு இயக்கமென்று இதனை நாம் குறிப்பிட முடியும்.
இவருடைய இளைய சகோதரரான கம்பன் டெலோ இயக்கத்தில் செயற்பட்டவர். 80 களின் நடுப்பகுதியில் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சித்திரவதைகளை அனுபவித்தவர். 1987 இந்திய- இலங்கை ஒப்பந்தத்தையடுத்து விடுதலை செய்யப்பட்டவர்.
அன்றைய சமூக சூழ்நிலை, அவலம், ஜனநாயக மறுப்பு ஆகியவற்றால் மன நெருக்கடிக்கு உள்ளாகியிருந்த கம்பன் தூக்கிட்டு தன்னைத்தானே மாய்த்துக் கொண்டார்.
மகேஸ்வரி அவர்களின் குடும்பம் இந்த சமூகத்தில் மானிட விழுமியங்களை பாதுகாப்பதற்காக அர்ப்பணிப்புக்களை செய்துள்ளது.
என் பணி செய்து கிடப்பதே என அவர் வாழ்ந்தார்.
1990களின் பிற்பகுதியில் இலங்கை திரும்பிய மகேஸ்வரி அவர்கள் மனித உரிமை ஸ்தாபனமொன்றை நிறுவி கைது செய்யப்படுவோர், காணாமல் போவோர் தொடர்பான தனது மனித உரிமை பணியை ஆற்றிக் கொண்டிருந்தார்.
அதேவேளை ஈழ மக்கள் ஜனநாயக கட்சியுடன் இணைந்து பணியாற்றினார். இந்து கலாச்சார அமைச்சு, சமூக சேவைகள் அமைச்சு ஆகியவற்றினூடாக சமூகப்பணி ஆற்றுவதற்கான வாய்ப்புக்களை பயன்படுத்திக் கொண்டார்.
ஆலயங்களின் மறுநிர்மாணம், சீரமைப்பு ஆன்மீக அறிஞர்களை இந்தியாவிலிருந்து அழைத்து நிகழ்ச்சிகளை நடத்துதல் இன்னோரன்ன பணிகளை அவர் ஆற்றியிருக்கிறார்.
சுமூகங்களிடையே அதிகார பகிர்ந்தளிப்பு தொடர்பில் காத்திரமான கருத்துக்களை அவர் பல கருத்தரங்குகளில் வழங்கியிருக்கிறார். அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் குழுவிலும் அவர் பங்களித்திருக்கிறார்.
மனித உரிமை தொடர்பான சர்வதேச மாநாடுகளிலும் அவர் பங்குபற்றியிருக்கிறார்.
ஈழத் தமிழர் வாழ்வு செம்மையுற இலங்கையில் சமூக வாழ்வு நாகரீகமானதாக அமைவதற்கான அவர் தனது பன்முக ஆளுமையை பயன்படுத்தியிருக்கிறார். கால் நூற்றாண்டுகாலம் அவர் ஓய்வொழிச்சலின்றி உழைத்திருக்கிறார்.
அவர் கொழும்பு பல்கலைகழகத்தின் சட்டமாணி பட்டதாரி. (டுடுடீ)
மகேஸ்வரி வேலாயுதம் அவர்கள் சமூகத்தை மறந்து சொந்த வாழ்வில் ஈடுபட்டிருந்தால் மிகுந்த வாய்ப்பு வளங்களுடன் வாழ்ந்திருக்க முடியும்.
ஆனால் அவரது தரிசனம், தேடல் அவரை வேறொரு பாதையில் அழைத்துச் சென்றது.
இனப்பிரச்சனை தொடர்பான இயக்கத்தில் மகேஸ்வரி அவர்களுக்கு தனி வரலாறு உண்டு. அதுவும் பெண் என்ற வகையில் மேலதிக தனித்துவம் பெறுகிறது.
ரஜணி திரணகம, சரோஜினி யோகேஸ்வரன் போன்ற ஆளுமையும் சமூகப் பிரக்ஞையும் கல்வியும் நிறைந்த பெண்கள் புலிகளால் படுகொலை செய்யப்பட்டது போலவே தற்போது மகேஸ்வரியும் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்.
தமிழ் சமூகத்தில் பிரக்ஞையுள்ள சுடர்மிகும் அறிவு கொண்ட நிமிர்ந்த நன்நடை நேர்கொண்ட பார்வையுள்ள மனிதர்களையெல்லாம் புலிகள் தேடித்தேடி அழித்து வருகிறார்கள்.
பாசிசம் தனது குணாதிசயங்களை என்றென்றும் மாற்றிக் கொள்ளாது என்பதற்கு மகேஸ்வரி அவர்களின் படுகொலை தற்போதைக்கு இறுதி உதாரணமாகும்.
அவர் தனது கடுமையாக நோயுற்ற முதிய தாயாருக்கு பணிவிடை செய்வதற்காக வடமராட்சி கரவெட்டியில் உள்ள அவரது வீட்டில் தங்கியிருந்தபோதே புலிகள் நிராயுதபாணியான அவரை துப்பாக்கிக் குண்டுகள் மூலம் படுகொலை செய்தனர்.
சாதாரண சமூகத்தில் மக்கள் விரோத, சமூக விரோத சக்திகள் பெண்களுக்கு எதிரான படுகொலைகள், பாலியல் பலாத்காரம் உள்ளிட்ட வன்முறைகளை புரிவது மிகவும் கேடுகெட்ட செயற்பாடுகளாகவும் மிக மோசமான மனித உரிமை மீறல்களாகவும்,மிகக் கடுமையான தண்டனைகளுக்குரிய வன்முறைகளாகவும்தான் பார்க்கப்படுகிறது.
ஆனால் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனது வழிநடத்தலில் நிகழும் இத்தகைய படுகொலைகள் இவை எல்லாவற்றையும் விஞ்சிய கேவலமும் கொடுமையும் நிறைந்தது. ஒரு கடைந்தெடுத்த அயோக்கியனை இச் சமூகத்தின் ஒரு பகுதியினர் தலைவராக ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள். அது பிரபாகரனின் செயற்பாடுகளைவிட வெட்கக் கேடானது.
மகேஸ்வரி அவர்களின் பேரிழப்பால் துயருறும் அன்னாரின் குடும்பத்தினருக்கும் கட்சியினருக்கும் மனித உரிமை ஆர்வலர்களுக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறோம்.
பத்மநாபா ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி
Thursday, May 15, 2008
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment