Monday, May 5, 2008

வெற்றிலைக்கு வாக்களிக்காது விட்டால் வீட்டில் இருங்கள் யானைக்குமட்டும் ஒருபோதும் வாக்களித்துவிடாதீர்கள்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எமது கட்சியாகும். அதனை அழிக்க யாரும் உடந்தையாக இருக்கக்கூடாது. கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் சின்னமான யானைக்கு கிழக்கு முஸ்லிம்கள் வாக்களிப்பதனால் அக்கட்சியினை இப்பிரதேசத்தை விட்டே பூண்டோடு அழித்து விடுவதற்கான முஸ்தீபு நடந்துவிடும் . எனவே, மக்கள் அவதானமாக இருக்க வேண்டுமென அமைச்சர் பேரியல் அஷ்ரப் தெரிவித்தார்.

மாளிகைக்காட்டில் நடைபெற்ற கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் திகாமடுல்ல மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றிய போதே வீடமைப்பு பொது வசதிகள் அமைச்சர் திருமதி பேரியல் அஷ்ரப் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்;

கிழக்கு மாகாண முஸ்லிம் மக்கள் இன்று ஐக்கிய தேசியக் கட்சிக்காரர்கள் கூறிவரும் தவறான கருத்துகளால் ஒரு நிலை தடுமாறிய நிலையில் குழம்பிப் போய் இருக்கின்றார்கள். ஒரு குழப்பமும் கொள்ள வேண்டியதில்லை.

வெற்றிலைக்கு வாக்களிக்க விருப்பம் இல்லை என்றால் வாக்களிக்கச் செல்லாமல் வீட்டிலேயே இருங்கள். ஆனால், யானைக்கு வாக்குப் போட்டு விடாதீர்கள் . நீங்கள் யானைக்குப் போடும் ஒவ்வொரு வாக்கும் எமது எதிர்கால சந்ததியினரை ஒரு இருளான திசைக்கு செல்வதற்கு வழிவகுக்கும்.

கிழக்கு மாகாண மக்கள் குழப்பம் அடையக்கூடாது என்பதற்காகவே மறைந்த தலைவர் அஷ்ரப் எவ்வளவோ கதைகளையெல்லாம் உங்களுக்குச் சொல்லி இருப்பர். ஏனென்றால் சரியான நேரத்தில் சரியான முடிவுகளை எடுக்கக்கூடிய மக்கள் கிழக்கு முஸ்லிம் மக்கள் என்ற தைரியம் அவருக்கு இருந்தது. நிச்சயமாக 2000 ஆம் ஆண்டு எம்மை விட்டு எமது தலைவர் பிரிந்த போதும் கூட எம்மைப் பொறுத்தவரையில் தலைவர் நினைத்திருப்பார் சரியான பாடங்கள் அனைத்தையுமே நான் எனது மக்களுக்குச் சொல்லிக் கொடுத்துவிட்டேன் என்று. இனி நான் போனாலும் பரவாயில்லை. மக்கள் சிந்தித்துச் செயற்படுவார்கள் என்ற நம்பிக்கை நிச்சயம் அவருக்கு இருந்திருக்கும்.

கிழக்கு மாகாண முஸ்லிம் மக்களும் எதிர்வரும் 10 ஆம் திகதி நடைபெறவுள்ள கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் சிந்தித்துச் செயற்படுவார்கள் என்ற நம்பிக்கை எனக்குண்டு எனத் தெரிவித்தார்.

No comments: