Friday, May 2, 2008

மாட்டின் வயிற்றிலிருந்து ஒன்றரை பவுண் தங்க சங்கிலி

அரிசியுடன் சேர்த்து தங்கச் சங்கிலியை உட்கொண்ட மாடு ஒன்றின்
வயிற்றிலிருந்து ஒன்றரை மாதகால இடைவெளிக்குப் பின்னர் சத்திரசிகிசிச்சை மூலம் தங்கச் சங்கிலி எடுக்கப்பட்ட சம்பவம் ஒன்று வடமராட்சியில் நடைபெற்றுள்ளது.

இச்சம்பவம் பற்றித் தெரியவந்துள்ளதாவது, புலோலி வல்லிபுரக் குறிச்சியைச் சேர்ந்த க. வடிவேல் என்பவர் ஒரு மாட்டுப் பண்ணையாளர். இவரால் வளர்க்கப்பட்ட நாம்பன் மாடு ஒன்று வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து
பிளாஸ்ரிக் வாளி ஒன்றில் நிறைத்து சேமித்து வைக்கப்பட்டிருந்த அரிசியைச் சாப்பிட்டு விட்டது. அந்த அரிசி வாளிக்குள் அவரது குடும்பத்தினரால் ஒன்றரைப் பவுண் பெறுமதியான தங்கச் சங்கிலி ஒன்று பாதுகாப்புக்காக அரிசியுடன் கலந்து வைக்கப்பட்டிருந்தது.

வாளிக்குள் இருந்த அரிசியைச் சாப்பிட்ட மாடு அதற்குள் இருந்த தங்கச்
சங்கிலியையும் சேர்த்து சாப்பிட்டு விட்டது. இவ்விபரம் தெரிய வரவே என்ன செய்வது, ஏது செய்வது என்றறியாத பண்ணை யாளர் மாட்டை வீட்டு வளவில் கட்டிவைத்து உணவு, தண்ணீரை கொடுத்து வந்தார். இந்த மாடு தினமும் வெளியேற்றும் சாணத்தையும் வேளைக்கு வேளை பரிசோதனை செய்து பார்த்தார். அதற்குள் மாடு சாப்பிட்ட தங்கச் சங்கிலி வரவே
இல்லை.

இப்படி ஒன்றரை மாதங்கள் ஓடிக் கழிந்தன. என்ன செய்வது, ஏது செய்வது என தீவிரமாக ஆலோசித்த பண்ணையாளர் மாட்டினை பருத்தித்துறை கால்நடை வைத்திய சாலைக்கு எடுத்துச் சென்று கால்நடை வைத்திய அதிகாரி சி. வசீகரனிடம் விபரத்தினை எடுத்துக் கூறினார்.

இதனைத் தொடர்ந்து நேற்று முன்தினம் வியாழக்கிழமை பிற்பகல்
இவ்வைத்தியசாலையில் வைத்து கால்நடை வைத்திய அதிகாரி, மாட்டினை
சத்திர சிகிச்சைக்குட்படுத்தி அதன் வயிற்றிலிருந்து ஒன்றரைப் பவுண் தங்கச் சங்கிலியை மீட்டெடுத்து பண்ணையாளரிடம் ஒப்படைத்தார்.

No comments: