உன் துவக்கு வாயில்
எனது உம்மாவின் தொங்கித் துடித்தசதைத்துண்டு
இன்னும் ஞாபகம் எனக்கு.
நீ அணியும்
கவச உடையில்
என் வாப்பாவின்
பெட்டிக் கடை
கப்பச் சில்லறைகளின் ரீங்காரம் ஒலிக்கிறது...
தொங்கும் உனது
முகத்தாடியில்
எனது வீட்டு மீன் குழம்பும்
பச்சரிசிச் சோறும்
இருப்பதாய் ஞாபகம்
உனது நீதிமன்றத்திலும்
காவல் பணிமனைகளிலும்
எனதான மானமும்
கௌரவமும்
சுயநிர்ணயமும்
கைதிகளாய் காயப்படுகிறது
உனது தேசிய கீதத்திலும்
ஒலிக்கும் கோஷத்திலும்
வரையும் பிரகடனங்களிலும்
எனதான உறவுகளின்
குருதித் தூவானம் வீசுகிறது
மொத்தத்தில்
புதையுண்டு போன
எலும்புக் கூடுகள் மீது
எழுப்பப்படும் உனதான
தேசத்தின் வேலிகள்...
எனது கண்களுக்கு
எனதான உறவுகளின்
உயில்கள் தான்.
றிஸ்வி சுபைர்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment