
அரசியலுக்கு முழுக்கு போட்ட ரகசியத்தை நடிகர் அமிதாப் பச்சன் வெளியிட்டு உள்ளார். இது பற்றி அவர் தனது இணைய தளத்தில் கூறியிருப்பதாவது:
ஒருமுறை நான் அசாம் சட்டப் பேரவை தேர்தலில் ஆளும் கட்சிக்கு தேர்தல் பிரசாரம் செய்ய ஹெலிகாப்டரில் சென்றேன். ஹெலிகாப்டர் வழி தவறி தவறான இடத்தில் இறங்கி விட்டது. அது எதிர்க்கட்சியினரின் முகாம். அப்போது, அங்கு கூடி இருந்தவர்கள் எனக்கு எதிராக கோஷமிட்டனர். உடனே விமானி ஹெலிகாப்டரில் இருந்து இறங்கி ஓடி விடும்படி என்னிடம் கூறினார்.
ஆனால், நான் ஹெலிகாப்டரிலேயே உட்கார்ந்து கொண்டேன். அப்போது, கூட்டத்தை விலக்கிக் கொண்டு ஹெலிகாப்டரை நோக்கி ஒரு மாணவன் ஓடி வந்தான். ஜன்னல் வழியாக கையை நுழைத்து ஒரு காகிதத்தை என்னிடம் கொடுத்தான்.
அதில், "மதிப்பிற்குரிய பச்சன் அவர்களே! நான் உங்களின் தீவிர ரசிகன். ஆனால், எதிர்க்கட்சியை சேர்ந்தவன். நீங்கள் என்னை தர்மசங்கடத்துக்கு ஆளாக்குகிறீர்கள். உடனே, இந்த மாநிலத்தை விட்டு சென்று விடுங்கள்" என்று எழுதப்பட்டு இருந்தது.
அது ஒரு உணர்ச்சிபூர்வமான வேண்டுகோள், அதை பற்றி பலமுறை சிந்தித்து பார்த்தேன்.
25 ஆண்டுகளாக ஒரு நடிகன் என்ற முறையில் ரசிகர்களை கவர முயற்சித்தேன். அதில் வெற்றி பெற்ற பிறகு எனது அரசியலுக்கு ஆதரவு தரும்படி கேட்டேன். ஆனால், அதுதான் நான் செய்த தவறு. எனது ரசிகர்களை நான் பிரிக்கப் பார்க்கிறேன். அவர்களின் உடலில் இருந்து ஒரு காலை பிரித்து கட்சிக்கு நன்கொடையாக தரும்படி கேட்கிறேன். அப்படி கேட்டு இருக்க கூடாது.
அது எனது மனதை பாதித்தது. இன்னமும் பாதித்துக் கொண்டு இருக்கிறது. நான் அரசியலுக்கு முழுக்கு போட்டதற்கு இந்த சம்பவம்தான் காரணம். இவ்வாறு அமிதாப் பச்சன் கூறியுள்ளார்.

No comments:
Post a Comment