Monday, June 2, 2008
சீ.புலித்தேவன் கைது செய்யப்பட்டுள்ளாரா?
புலிகளின் சமாதானப் பணிப்பகத்தின் பணிப்பாளர் சீவரட்ணம் புலித்தேவன் புலனாய்வுத்துறைப் பொறுப்பாளர் பொட்டு அம்மானின் பணிப்பின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது. வன்னியில் புலிகளின் முக்கிய உறுப்பினர் உட்பட பல தாக்குதல்கள் தொடர்பாக அரச படையினருக்கும் புலனாய்வுத் துறையினருக்கும் தகவல்கள் வழங்கியது தொடர்பாகவே இவர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது. இவர் வழங்கிய தகவல்களின் அடிப்படையிலேயே 2007ம் ஆண்டு நவம்பர் மாதம் 2ம் திகதி வன்னியிலுள்ள திருவையூர் பகுதியில் அரச விமானப் படையினரால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்செல்வன் கொல்லப் பட்டதாகவும் அதேபோல புலிகளின் அனைத்துலகத் தொடர்பகப் பொறுப்பாளர் லெப்ரினன் கேணல் கலையழகன், மற்றும் புலிகளின் புலனாய் வுத்துறைத் துணைப்பொறுப்பாளர் சாள்ஸ் ஆகியோரும் புலித்தேவனால் வழங்கப் பட்ட தகவலின் அடிப்படையிலேயே கொல்லப்பட்டுள்ளதாகவும் மேலும் தெரியவந்துள்ளது. அத்துடன் வன்னிப் பகுதியில் இலங்கை அரசின் ஆழ ஊடுருவும் படையினரின் பல தாக்குதல்கள் இவரின் வேண்டுகோளின் பேரிலேயே மேற்கொள்ளப் பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. கடந்த பல மாதங்களாக வன்னியில் நடைபெற்ற எந்த நிகழ்வுகளிலும் புலித்தேவன் கலந்து கொள்ளவில்லை. இலங்கை அரசின் ஆழஊடுருவும் படையினரால் 06.03.2008 இல் கொல்லப்பட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் கிட்ணன் சிவநேசன் மற்றும் அண்மையில் மாரடைப்பால் மரணமடைந்த புலிகளின் முக்கிய தளபதியான பால்ராஜ் மற்றும் மன்னார் களமுனையில் 25.05.2008 இல் கொல்லப்பட்ட சோதியா படையணியின் துணைத்தளபதி செல்வி போன்றவர்களின் இறுதி நினைவுகளில் முக்கிய உறுப்பினர்கள் கலந்து கொண்ட போதிலும் சீவரட்ணம் புலித்தேவன் கலந்துகொள்ளவில்லை. புலிகளின் மூத்த உறுப்பினர் பால்ராஜ்ஜின் இறுதிச் சடங்கில் புலிகளின் தலைவர் பிரபாகரன், புலிகளின் புலனாய்வுத்துறைப் பொறுப்பாளர் பொட்டு அம்மான், அரசியல்துறைப் பொறுப்பாளர் பா...நடேசன், கடற்படைத் தளபதி சூசை, களமுனைக் கட்டளைத் தளபதி தீபன், அனைத்துலகத் தொடர்பாளர் மணிவண்ணன், கல்வி பொறுப்பாளர் இளங்குமரன், புலிகளின் முத்த உறுப்பினர் பாலகுமாரன் மற்றும் முக்கிய தளபதிகள் கலந்துகொண்டபோதிலும் புலித்தேவன் கலந்துகொள்ளவில்லை என்பது அவர்கள் வெளியிட்ட வீடீயோ மற்றும் இணையத்தளங்கிளனூடாகக் காணக் கூடியதாக இருந்தது.
இதேவேளை புலித்தேவன் இலங்கை அரசுக்கும் புலிகளுக்குமிடையில் நடைபெற்ற பல சமாதானப் பேச்சுவார்த்தைகளின்போது கலந்துகொண்டவர் என்பதும் இவர் தமிழ் சிங்களம் ஆங்கிலம் ஆகிய மூன்று மொழி களையும் சரளமாகப் பேசக்கூடியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதுதொடர்பாக - ரீ பீ சீ யின் செய்திப் பிரிவு புலிகளின் முக்கியஸ்தர் ஒருவரைத் தொடர்பு கொண்டபோது, புலித்தேவனை சந்தேகத்தின் பேரில் கைதுசெய்து விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் தலைவரின் உத்தரவுப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படுமெனவும் தெரிவித்துள்ளார்.
மேற்குறிப்பிட்ட தகவல் இன்றைய http://www.eeraanal.org/ இணையத்தில் வெளியாகியுள்ளது. இதனை ஊர்ஜிதம் செய்ய முடியவில்லை.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment