Friday, June 6, 2008

நாட்டின் பிரிவினை வாதத்திற்கு வித்திட்ட ஜூன் 5

இற்றைக்கு ஐம்பத்தி மூன்று ஆண்டுகளுக்கு முன் அதாவது 1956 யூன் மாதம் 05 ஆம் திகதி பிரித்தானியர்களால் ஒன்றிணைக்கப்பட்டு ஒரே நாடாக உருவாக்கப்பட்டு இலங்கை என்ற பெயரில் சுதந்திர நாடாகச் சுதேசிகளிடம் ஒப்படைக்கப்பட்ட இத்தீவில் பிரிவினைவாதச் சிந்தனைக்கு உரமூட்டப்பட்ட நாளாகும்.

பிரித்தானியரிடமிருந்து சுதேசிகள் கைகளில் ஒப்படைக்கப்பட்ட இந்நாட்டில் இந்திய வம்சாவளித் தமிழ் மக்களின் குடியுரிமை, வாக்குரிமை என்பன பறிக்கும் சட்டம் நிறைவேற்றப்பட்ட நாளை இனப்பிரிவினைக்கு வித்திட்ட நாளாகக் கொள்ளும் போது தனிச்சிங்களச் சட்டம் கொண்டு வந்த யூன் ஐந்நாம் நாளை இனப்பிரிவினைக்கு உரமூட்டிய நாளாகக் கொள்ள முடியும்.

ஆம். இந்நாட்டில் தமிழ், சிங்கள மக்களின் ஒற்றுமைக்கும் நிம்மதிக்கும் சகோதரத்துவத்திற்கும் ஆப்பு வைத்தது தனிச்சிங்களச்சட்டம் என்பதை காலம் கடந்த நிலையில் பலரும் ஏற்றுக் கொண்டுள்ளனர்.கண்கெட்ட பின் சூரிய நமஸ்காரம் செய்வது போல் என்பது இதைத்தானோ.

தனிச்சிங்களச் சட்டம் கொண்டு வந்ததன் மூலம் பெரும்பான்மை இனத்தவரைத் தமிழ் மக்களின் எதிரிகளாக, அந்நியர்களாக நோக்கும் அவலம் ஏற்பட்டது ஒருபுறமிருக்க பெரும்பான்மையோர் தமிழ்மொழியையும் தமிழரையும் அந்நியராக இந்நாட்டிற்கு உரித்தற்றவர்களாக நோக்கும் நிலைக்கும் அச்சட்டம் வழிவகுத்தது என்பது வரலாற்றில் ஒரு பக்கமாக அமைந்துள்ளது.

ஒரு இனத்தின் இருப்புக்கு, உரிமைக்கு அடிப்படையாக அமைவது மொழி. ஒரு நாட்டில் தனது மொழி மூலம் ஒருவன் தனது அன்றாடக் கடமைகளையும் அரசாங்கத் தொடர்புகளையும் ஆற்றும் உரிமை மறுக்கப்படும் போது அவனின் உரிமை பறிக்கப்பட்டதாகவும் நாட்டின் தேவையற்ற அந்நியனாகக் கருதப்பட்டு ஒதுக்கப்படுகின்றான் என்பதே யதார்த்தமுமாகும்.

இலங்கையில் இன்று நிலவும் அமைதியின்மைக்கு அடித்தளமாக அமைந்தது இந்த மொழிச்சட்டத்தால் உரமூட்டப்பட்ட பிரிவினை வாதமேயாகும். காலம் கடந்த நிலையில் இன்று கேவலமான அச்சட்டம் சட்டப்படி செல்லாததாகி விட்டாலும் அதன் பாதிப்பு இன்னும் நீடிக்கவே செய்கிறது. சிக்குன்குன்யா என்ற காய்ச்சல் வந்து சுகமாகி விட்டாலும் ஆண்டுகள் கடந்தாலும் அதன் தாக்கம் நீடிப்பது போல புத்தியுள்ள சிங்களத் தலைவர்கள் இந்த சட்டத்தின் எதிர் விளைவுகளை அன்று கூறினாலும் அவையாவும் மக்களது உணர்வுகளைத் தூண்டி அதன்மூலம் அரசியல் ஆதாயம் பெற முற்பட்ட கீழ்த்தர அரசியல் முன் செல்லாக்காசாகி விட்டன.

தனிச்சிங்களச் சட்டம் பாராளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட போது அதன் எதிர்விளைவுகளை, ஏற்படப்போகும் பிரச்சினைகளை உணர்ந்த கலாநிதி கொல்வின் ஆர் டீ சில்வா "இரு மொழிகள் என்றால் ஒரு நாடு. ஒரு மொழியென்றால் இரு நாடுகள்' என்று கூறினார். தமிழர்கள் பிரிவினை வாதத்திற்குத் தள்ளப்படுவார்கள் என்பதை 1956இல் அதாவது இந்நாட்டில் பிரிவினைவாதம் பற்றி சிந்திக்கப்படாத காலத்தில் தீர்க்கதரிசனமாக அவர் கூறினார்.

இத்தனிச் சிங்களச் சிந்தனை முளைவிட்ட நோக்கை வரலாற்று ரீதியாக ஆராயலாம்.

1952 ஆம் ஆண்டில் தெரிவு செய்யப்பட்ட ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம் 1957 இறுதிவரை ஆட்சி செய்யும் காலம் இருந்தது. தெரிவுசெய்யப்பட்ட 89 உறுப்பினர்களில் 54 பேரைக் கொண்டிருந்த அரசாங்கம் தன் பாராளுமன்ற அதிகாரத்தை வலுப்படுத்திக் கொள்வதற்காக எண்ணிக்கையை அதிகரித்துக் கொள்வதற்காகக் குறிப்பிட்ட காலத்திற்கு முன்னதாக அதாவது 16 மாதங்களுக்கு முன்னதாகப் பாராளுமன்றத்தைக் கலைத்துப் பொதுத் தேர்தலுக்குச் சென்றது.

பெரும்பான்மை சிங்கள மக்களின் உணர்வுகளைத் தூண்டி தன்வசம் ஈர்க்கும் நோக்கில் அதுவரை சிங்களம், தமிழ் இரண்டும் அரசாங்க மொழிகள் என்ற கொள்கையைக் கொண்டிருந்த ஐக்கிய தேசியக் கட்சி 1956ஆம் ஆண்டுக்கு முன்னர் நடைபெற்ற அதன் களனி மாநாட்டில் சிங்களம் மட்டும் அரசாங்க மொழி என்ற தீர்மானத்தை நிறைவேற்றியது. அதன் சூத்திரதாரி ஜே.ஆர்.ஜயவர்த்தன என்பது குறிப்பிடத்தக்கது.

ஐக்கிய தேசியக் கட்சி ஒரு அடி பாய்ந்தால் தாம் எட்டடி பாய வேண்டும். சிங்கள மக்களை ஏமாற்றி வாக்குகளைப் பெறவேண்டும் என்று திட்டமிட்ட ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியும் அக்காலத்தில் வளர்சியடைந்து வந்த மக்கள் ஐக்கிய முன்னணியும் 24 மணித்தியாலத்தில் சிங்களத்தை அரசாங்க மொழியாக்குவதாகக் கூறினர்.

மொழியுணர்வைத் தூண்டி ஆட்சியை உறுதிப்படுத்த வித்திட்ட ஐக்கிய தேசியக் கட்சி படுதோல்வியடைய அக்கட்சியின் அடியொட்டி குரல் கொடுத்து வாக்குகளைப் பெற்ற பண்டாரநாயக்க தலைமையிலான கட்சி ஆட்சியமைத்தது. மொழிப்பிரிவினைக்கு வித்திட்ட ஐக்கிய தேசியக் கட்சிக்கு எதிர்க்கட்சி அந்தஸ்தும் கிட்டாதது மட்டுமன்றி சிங்கள மொழி மட்டும் தீர்மானத்தை முன்மொழிந்த ஜே.ஆர்.ஜயவர்த்தன களனித் தொகுதியில் படுதோல்வியடைந்தார். மொழியைக் காட்டி மக்களை ஏமாற்றி நாட்டில் இனங்களிடையே பிளவை ஏற்படுத்திய கீழ்த்தரமான அரசியல் உருவாவதைத் தடுக்கும் நோக்கில் 1955ஆம் அண்டு ஒக்டோபர் மாதம் 19ஆம் திகதி "சிங்களம், தமிழ் ஆகிய இரு மொழிகளும் நாடுமுழுவதற்கும் சமஉரிமை பெறும் வகையில் அரசியலமைப்பு திருத்தப்பட வேண்டும்' என்று அன்றைய ருவான்வெல பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி என்.எம்.பெரேரா பாராளுமன்றத்தில் பிரேரணையை முன்மொழிய தெகியோலிற்ற பாராளுமன்ற உறுப்பினர் எட்மன்ட் சமரக்கொடி வழிமொழிந்தமை பதிவாகியுள்ளது.

அன்றிருந்த அரசாங்கம் தனிச்சிங்கள மொழிக் கொள்கையை நிறைவேற்ற எண்ணியிருந்த வேளை அதைத் தடுக்க உண்மையை உணர்த்த கலாநிதி என்.எம்.பெரேராவும், எட்மன்ட் சமரக்கொடியும் அவர்கள் சார்ந்த லங்கா சமசமாஜக் கட்சியும் மேற்கொண்ட நாட்டுப்பற்றுமிக்க ஒரு முயற்சியாக இதைக் கொள்ளலாம்.

குறிப்பட்ட பிரேரணையைச் சமர்ப்பித்து கலாநிதி ரெரேரா பாராளுமன்றத்தில் உரையாற்றும் போது, "இப்பிரச்சினை தொடர்பில் சரியான தீர்வு ஏற்பட்டால் எதிர்காலத்திலும் ஐக்கிய இலங்கையைப் பேணிக் கொள்வதற்கு அது மிகவும் ஆதாரமாக இருக்கும் என்பதைக் கூறிக் கொள்வதற்கு நாம் பின்னிற்கப் போவதில்லை. இருப்பினும் நாம் அவ்வாறான தீர்மானத்தை எடுதால் நாம் எவரும் காண்பதற்கு விரும்பாத பயங்கர நிலை ஏற்பட இடமுண்டு. நான் இந்த நிலைமையின் முக்கியத்துவத்தையிட்டு மிகவும் அவதானமாக இருக்கின்றேன் என்பதைக் கூறிவைக்க விரும்புகின்றேன்' என்று 1955 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 19ஆம் திகதி கூறியுள்ளார்.

இனவாதம், மொழிவாதம், சமயவாதம் என்று பல்வேறு பிரிவுகளுக்குள் சிக்கி அவலமுறும் இந்நாட்டின் இன்றைய நிலைக்கு அடித்தளமிட்ட சுயநல அரசியல்வாதிகளின் பொறுப்பற்ற செயலை அன்று தடுக்க முனைந்த தேசப்பற்றாளர்களாக கலாநிதி என்.எம்.பெரேராவும், எட்மன்ட் சமரக்கொடியும் அவர்களுடன் இணைந்து செயற்பட்டவர்களும் விளங்கியுள்ளார்கள்.

நாடு அல்லறுறப் போகின்றது. நாட்டில் பிரிவினைவாதம் தலைதூக்கப் போகின்றது அதைத் தடுக்க வேண்டும் என்று குரலெழுப்பியவர்களின் வாதம் வகுப்புவாத இனவாத, மொழிவாத அரசியலால்பின்தள்ளப்பட்டு இன்று நாடும் பல வழிகளில் பின் தள்ளப்பட்டு விட்டது.

வரலாற்றில் ஏற்பட்ட தவறுகளைத் திருத்தி நாட்டில் சமத்துவமும், அமைதியும், பிணைப்பும் அதன் மூலம் சுபிட்சமும் ஏற்பட வகுப்புவாத அரசியலே தடையாகவுள்ளது.

-த.மனோகரன்-

No comments: