Friday, June 6, 2008

புலிகளின் பயங்கரவாத நடவடிக்கைகளுக்காக இந்தியாவிலிருந்து இரசாயனப் பொருட்கள்

விடுதலைப் புலிகள் இயக்கத்தின் பயங்கரவாத நடவடிக்கைகளுக்காகப் பயன்படுத்துவதற்கென கப்பல் கொள்கலனில் எடுத்துவரப்பட்ட இரசாயனப் பொருட்கள் கைப்பற்றப்பட்டதாக இரகசிய புலனாய்வுப் பொலிஸ் பிரிவு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு குறித்த கொள்கலனில் 350 பெரிய போத்தல்களில் இரசாயனப் பொருட்கள் எடுத்துவரப்பட்டுள்ளதாகவும் இந்தச் சம்பவம் சம்பந்தமாக சீன இனத்தவர் ஒருவரும் தமிழர் ஒருவரும் கைது செய்யப்பட்டிருப்பதுடன், கப்பல் இறக்குமதி பிரிவைச் சேர்ந்த எழுதுவினைஞர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
இரகசியப் புலனாய்வுப் பொலிஸ் பிரிவு தரப்பில் இதுபற்றிச் சிரேஷ்ட பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் தெரிவித்திருக்கும் தகவல்களுக்கேற்ப மேற்படி இரசாயன பொருட்கள் அடங்கிய போத்தல்கள் இந்தியாவிலிருந்தே கொண்டு வரப்பட்டதாகக் கைது செய்யப்பட்ட மூன்று சந்தேக நபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளதாகக் கடந்த 2 ஆம் திகதி திங்கட்கிழமை பத்திரிகைத் தரப்புக்குக் கூறியுள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து மேலும் பெறப்பட்டிருக்கும் தகவல்களில் குறித்த இரசாயனப் பொருட்கள் அடங்கிய கொள்கலன் கொழும்பு மஹவத்த பிரதேசத்தில் வசிக்கும் தமிழர் ஒருவரின் பெயரிலேயே எடுத்துவரப்பட்டதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மேலும் கொள்கலன் சோதனை நடவடிக்கைகளின் போது அதற்குள் பதுக்கி வைக்கப்பட்டிருந்த மேற்படி இரசாயனப் பொருட்கள் அடங்கிய 350 போத்தல்களும் கண்டுபிடிக்கப்பட்டவுடன் முதலில் அந்த கொள்கலன் பொருட்களுக்குச் சொந்தமான குறித்த மஹவத்த தமிழரே கைது செய்யப்பட்டதாகவும் தொடர்ந்து அவரிடம் இரகசிய புலனாய்வு பொலிஸ் உத்தியோகத்தர்கள் மேற்கொண்ட தீவிர விசாரணைகளின் போதே குறித்த சீன நபர், தமிழ் நபர் மற்றும் இறங்குதுறை அலுவலக எழுதுவினைஞர் ஆகிய மூவரும் இதில் சம்பந்தப்பட்டிருப்பது தெரியவந்ததாகவும் அதன் அடிப்படையிலேயே அவர்கள் மூவரும் கைது செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மஹவத்தவில் வசித்துவந்த அந்தத் தமிழர் சிலாபம் தேயிலை உற்பத்திக் கைத்தொழில் நிறுவனம் ஒன்றில் தொழிலாளர் தரத்தில் பணிபுரிகிறார் எனவும் இவருடைய பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ள நிறுவனத்தின் பெயரிலேயே மேற்படி கொள்கலன் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் மேலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக இரகசியப் புலனாய்வுப் பொலிஸ் பிரிவு தெரிவித்துள்ளது.

இதில் முக்கிய விடயம் யாதெனில், மேற்படி கொள்கலனில் விளையாட்டுப் பொருட்கள் எடுத்துவரப்படுவதாகவே பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் ஆயினும் இந்த விளையாட்டுப் பொருட்களிடையே மேற்படி இரசாயனப் பொருட்கள் அடங்கிய 350 போத்தல்களும் மறைத்து வைக்கப்பட்டிருப்பது கொள்கலன் சோதனையின் போதே கண்டுபிடிக்கப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் போத்தல்களில் அடங்கியுள்ள இரசாயனப் பொருள் இரசாயன ஆய்வுக்குட்படுத்தப்பட்டபோது அது "?தைனியல் குளோறைட்' எனப்படும் இரசாயனப் பொருள் என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

விளையாட்டுப் பொருட்கள் எடுத்து வரப்படுவதாகப் பதிவு செய்யப்பட்ட போதிலும் அந்த கொள்கலனுக்குள் விளையாட்டுப் பொருட்களின் அடியில் மிக சூட்சுமமாக குறித்த இரசாயனப் பொருட்கள் சோதனை அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்பட்ட பின்னர் இதுபற்றித் துறைமுக அதிகாரிகள் இரகசியப் புலனாய்வுப் பொலிஸ் பிரிவுக்கு அறிவித்துள்ளதுடன் கொள்கலன் பொருட்களையும் ஒப்படைத்தனர். இவ்வாறு துறைமுக அதிகாரிகள் கொள்கலனுக்குரிய மஹவத்த தமிழரின் பெயர், முகவரி, விபரங்களை அறிவித்ததுடன், குறித்த முகவரிக்குச் சென்று அவரை இரகசியப் புலனாய்வுப் பொலிஸார் கைது செய்தனர்.

பின்னர் அவர்கொடுத்த தகவல்களின் அடிப்படையில் துரிதமாகச் செயற்பட்ட இரகசியப் பொலிஸார் மேற்படி சீன நபர், தமிழ் நபர், துறைமுக எழுதுவினைஞர் மூவரையும் பிடித்துள்ளனர். இதில் சீன நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளிலிருந்து அவர் நீண்ட காலமாகவே ஸ்ரீலங்காவிலேயே வசித்து வருவது தெரிய வந்துள்ளது. மேலும் இந்த விசாரணைகளில் இந்த இரசாயனப் பொருட் கடத்தலுடன் சம்பந்தப்பட்ட மேலும் பலரின் விபரங்களும் கிடைத்துள்ளதாகவும் இதற்கேற்ப மேற்படி "தைனியல் குளோறைட்' எனப்படும் இரசாயனப் பொருட்கள் புலிகள் இயக்கப் பயங்கரவாதிகளின் தேவைக்காகவே எடுத்துவரப்பட்டுள்ளதாகவே கருதுவதாக இரகசியப் புலனாய்வுப் பொலிஸ் பிரிவு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு கடும் சந்தேகம் தெரிவித்திருக்கும் இரகசியப் பொலிஸ் உதியோகத்தர்கள் மேற்படி கைது செய்யப்பட்ட கொள்கலன் பொருட்களின் உரிமையாளராகப் பதிவு செய்யப்பட்ட மஹவத்த தமிழரையும் மற்றும் இறக்குமதி அலுவலக எழுதுவினைஞர் உட்பட மூன்று நபர்களையும் தடுத்து வைத்துத் தீவிர புலனாய்வு விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

லங்காதீப : 04.06.2008

No comments: