திருட்டுக் கடவுச் சீட்டுடன் கைது செய்யப்பட்ட கருணா இன்று அல்லது நாளை விடுபடவுள்ளார். கருணாவுக்கு இங்கிலாந்து தஞ்சம் கொடுக்க மறுத்துவிட்டது. இந்தியாவுக்கு அனுப்பிவைப்பீர்களா என்று கருணா கேட்டுப்பார்த்தார். அதுவும் முடியாத காரியம் என்று மறுக்கப்பட்டுவிட்டது.
இதன் பின்னர் ஒரே வழி இலங்கைக்குத் திரும்பிச் செல்வதுதான். பழைய ஏஜெண்டுகளுடன் தொடர்பு கொண்டு என்னை எப்படியும் காப்பாற்றுங்கள் என்று கேட்டுள்ளார் கருணா. புங்குடுதீவு கிருஸ்ணன், உண்டியல் ஜெயதேவன் போன்றோர் இலங்கை உளவுத்துறை அதிகாரி கெந்த விதாரணையுடன் நீண்ட ஆலோசனை நடத்தினர்.
கருணாவை அரசியல் ரீதியிலும், பிள்ளையானை கொலை மற்றும் சிங்களக் குடியேற்றங்களுக்குப் பயன்படுத்தலாம், மட்டக்களப்பானை வடக்குடன் சேரவிடாமல் தடுப்பதற்கு இதுதான் சரியான வழி. இவர்களை வைத்துக்கொண்டு அரசாங்கம் அனைத்துக் காரியங்களையும் கிழக்கில் தடையின்றி மேற்கொள்ளலாம் என்ற முடிவுக்கு வந்து நடைமுறைப்படுத்த தயாராகிவிட்டனர் ஏஜெண்டுகளும் எஜமானர்களும்.
கருணா மீது பலதரப்பட்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பான குற்றச்சாட்டுகளைப் பலரும் தெரிவித்தனர். பாதிக்கப்பட்டவர்கள் நேரடியாகவே வாக்குமூலங்கள் கொடுத்துள்ளனர். இருந்தபோதிலும் இங்கிலாந்து அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
சர்வதேச மனித உரிமை அமைப்புகள் நேரடியாக இந்த விடயத்தில் பிரித்தானிய அரசுடன் தொடர்பு கொண்டு, இவர் சம்பந்தமான குற்ற ஆவணங்களைச் சமர்ப்பித்தும் வெள்ளை அரசு இவற்றுக்குச் செவிசாய்க்கவில்லை. இச் செயலுக்குப் பின்னணியில் இலங்கை அரசுக்கும் பழைய எஜமானர்களான பிரித்தானியாவுக்குமிடையில் இருந்து வரும் நட்புறவுதான் காரணம்.
இந்தியாவுக்கு சுதந்திரம் வழங்கிய போது பாக்கிஸ்தானை தனியாகப் பிரித்துக் கொடுக்கும்படி ஜின்னா கோரினார். இந்தக் கோரிக்கை சாத்தியமானதுதான் என்று ஜின்னாவைத் தூண்டிவிட்டதே பிரித்தானியர்தான். அதிலும் கிழக்குப் பாகிஸ்தான் என்று ஒன்றையும் உருவாக்கி பாகிஸ்தானுடன் இணைத்துக் கொடுத்தவர்கள் இந்தப் பிரித்தானியர்கள்.
இப்படியானவர்கள் இலங்கையை விட்டுச் செல்லும் போது சிங்களவருக்கு ஆதரவாகச் செயல்பட்டனரே தவிர, தமிழினத்தை ஏமாற்றி சிங்கள தலைவர்களிடத்து எங்கள் இனத்தை விற்றுவிட்டுச் சென்றனர் என்பதுதான் உண்மை. ஒற்றுமை விடுதலை என்று தமிழர்களை ஏமாற்றுங்கள், நாங்கள் உங்களிடத்து நாட்டை ஒப்படைத்து விலகிக்கொள்கிறோம் என்று டீ.எஸ். சேனநாயக்காவிடம் பிரித்தானியா கூற, எங்கள் இனம் ஏமாற்றப்பட்டது சிங்களத் தலைவர்களால்.
இப்போதும் கூட கருணா கைது செய்யப்பட்டதும் அவரிடம் ராஜதந்திரிக் கடவுச்சீட்டு இருந்தது. பொய்யான பெயரில் திருட்டுத்தனமாக நுழைந்துள்ளார் கருணா. அதிலும் பல கொலை, கொள்ளை, குழந்தைப் படை என்ற குற்றச்சாட்டுகளுக்கு உள்ளானவர், இலங்கை அரசின் ராஜதந்திரப் பாஸ்போர்ட்டை கோத்தபாயாவே ஏற்பாடு செய்து கொடுத்தார் என்ற வாக்குமூலமும் கருணாவால் கொடுக்கப்பட்ட நிலையில் எவ்வித விசாரணையுமின்றி கருணா திருப்பி அனுப்பப்படுகிறார்.
இவர்களுக்குத் தெரியும் இலங்கை அரசின் உள்தொடர்பு. வெறும் கேள்வி ஒன்றினை மட்டும் கேட்டனர் இலங்கை உயர் அதிகாரிகளிடம், அவர் தமக்கு இதுபற்றித் தெரியாது என்றதும், முடித்துக் கொண்டனர் விசாரணையை!
கிழக்குத் துண்டாடப்பட்டதும் அங்கே சிங்களமயமாக்கலும் , தமிழர் விரட்டப்படுவதும் தினமும் நடைபெற்றுவரும் தமிழின அழிப்பும் பிரித்தானியருக்கு நன்கு தெரியும். கருணாவை இலங்கை அரசு அழைத்துச் சென்று மீண்டும் தமிழினத்துக்கு எதிராக பல செயல்களைச் செய்ய முயற்சிக்கின்றனர் என்பதும் நன்கு தெரிந்த விடயம்தான் பிரித்தானியாவுக்கு!
எங்கள் இனம் இன்று பட்டுவரும் அனைத்துத் துயரங்களுக்கும் காரணம் இந்தப் பிரித்தானியாதான்! எங்கள் நாட்டை அன்று எங்களிடம் திருப்பி ஒப்படைத்துவிட்டுச் சென்றிருந்தால் நாம் இந்த இழிநிலைக்கு உள்ளாகி அகதிகள் ஆக்கப்பட்டிருப்போமா?
சர்வதேச அமைப்புகள் கேட்டும் அதனை நிராகரித்து இலங்கை அரசின் சதிச் செயலுக்கு துணை போகிறது பிரித்தானியா அரசு. இது கண்டிக்கப்பட வேண்டிய விடயம். இவர்கள் அன்றும் எம் இனத்தை விற்றார்கள், இன்றும் எம் இனத்தைக் கூறு போடுகின்றனர்.
கருணாவின் வரவு தமிழினத்துக்குக் கேடு, சிங்கள இனத்துக்கு வாழ்வு!
தீப்பொறி
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment