
த ஜெயபாலன்
தீபம் தொலைக் காட்சியின் நிகழ்ச்சித் தயாரிப்பாளர்களில் ஒருவரும் நிகழ்ச்சியை தொகுத்து அளிப்பவருமான கார்த்திகேயன் திருலோகசுந்தர் (சுந்தர்) வேலை நீக்கம் செய்யப்பட்டு உள்ளார். இவரது வேலை நீக்கத்திற்கு முன் இடம்பெற்ற சம்பவங்களே இந்த வேலை நீக்கத்தில் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. தான் வேலை நீக்கப்பட்டதற்கு எதிராக சுந்தர் சட்ட நடவடிக்கையை மேற்கொண்டு உள்ளார். தன்னை Levenes Solicitors என்ற சட்ட நிறுவனம் பிரதிநிதித்துவப் படுத்துவதாக சுந்தர் ஏப்ரல் 2ல் லண்டன் குரலுக்குத் தெரிவித்தார்.
தங்கள் முகவரியை மோசடி செய்ததாலேயே சுந்தர் என்ற கார்த்திகேயன் திருலோகசுந்தரை வேலை நீக்கம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டதாக தீபம் தொலைக்காட்சியின் ஊடக முகாமையாளர் கோமதி லண்டன் குரல் பத்திரிகைக்குத் தெரிவித்தார். சுந்தர் வேலை நீக்கப்பட்டது தொடர்பாக ஏப்ரல் 3ல் தொடர்பு கொண்ட போது சுந்தர் தனது தவறை ஒப்புக்கொண்டு தாங்கள் வழங்கிய கடிதத்தில் கையொப்பம் இட்டு இருந்தால் அவர் இப்போதும் வேலையில் இருந்திருக்க முடியும் என்று அவர் குரலுக்குத் தெரிவித்தார்.
சுந்தர் தீபத்தின் முகவரியை தவறாகப் பயன்படுத்தியதாகவும் அதற்காகவே அவர் வேலை நீக்கப்பட்டதாகவும் தீபம் வேலை நீக்கப்பட்டதற்கு காரணம் கூறியுள்ளது.
இது பற்றி அறிய சுந்தருடன் தொடர்பு கொண்ட போது தெரியவந்ததாவது@ சுந்தருடைய சகோதரர் கொள்வனவு செய்த மோபைல் போன் தீபம் முகவரிக்கு விநியோகிக்கப்பட்டது. அதனை நிர்வாகத்திற்கு தெரியப்படுத்தி அவர்களின் உடன்பாட்டோடு பெற்றுக் கொண்டதாக சுந்தர் தெரிவிக்கிறார்.
அதன் பின்னர் அந்த மோபைல் போனின் பில் (கட்டணம்) உம் தீபம் முகவரிக்கே வந்து உள்ளது. அதனை மாற்றும்படி தீபம் நிர்வாகம் சுந்தரைக் கேட்டுக்கொண்டது. அதன் படி அதனை தனது சகோதரருக்கு தெரியப்படுத்தி அந்த முகவரி மாற்றப்பட்டது. ஆயினும் சிறிது காலத்திற்குப் பிறகு மார்ச் 2008ல் சுந்தரின் சகோதரரின் பெயருக்கு வேறு பில் ஒன்றும் வந்தது. தீபம் நிர்வாகம் சுந்தரை அழைத்து அதனைத் தெரியப்படுத்தி இருந்தது. அதற்கு சுந்தர் ஏற்கனவே சகோதரர் முகவரியை மாற்றிவிட்டார். என்று சொல்லி அவருக்கு வரும் கடிதத்தை திருப்பி அனுப்பும் படியும் கூறியுள்ளார். சம்பந்தப்பட்டவர் குறிப்பிட்ட முகவரியில் இல்லாவிட்டால் கடிதத்தை திருப்பி அனுப்புவதுதானே வழமை என்றும் சுந்தர் அவர்களுக்கு குறிப்பிட்டு உள்ளார்.

இது இவ்வாறு ஏற்கனவே பேசப்பட்ட நிலையில் இருக்கையில் மார்ச் 12 அன்று தீபத்தின் கணக்காளர் சேகர் வந்தார். அவர் சுந்தரை தனது அறைக்கு அழைத்துச் சென்று விசாரிக்க முற்பட்டு உள்ளார். அதற்கு நீங்கள் கணக்காளர், உங்களுக்கு இதில் என்ன சம்பந்தம் என்று சுந்தர் கேட்க நான் செக்ரிறிறி என தெரிவித்திருக்கிறார். இந்த வாக்குவாதம் நிகழுகையில் அறையின் கதவு திறந்தே இருந்தது. அந்த அறைக்கு முன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குபவர்களான எம் என் எம் அனஸ், சுனிதா தேவதாஸ், நிகழ்ச்சித் தயாரிப்பாளர் ராஜ்குமார் ஆகியோர் இருந்தனர்.
சுந்தருக்கும் சேகருக்கும் இடையே கதையாடல் இடம்பெற்றுக் கொண்டி ருக்கும் போதே சேகர் தகாத வார்த்தைகளால் சுந்தரை ஏசி அவரை மார்பில் தள்ளி விழுத்தி உள்ளார். தள்ளுப்பட்ட வேகத்தில் சுந்தருக்கு அடிபட்டு அவர் மருத்துவ சிகிச்சை எடுத்துள்ளார். இச்சம்பவம் பற்றி சுந்தர் மெற்றோபொலிட்டன் பொலிஸிலும் பதிவு செய்து உள்ளார்.
மறுநாள் சுந்தர் மீடியா மனேஜர் கோமதிக்கு போன் பண்ணி இயக்குனர்களில் ஒருவரான செல்வ குமாருடன் பேச முற்பட்டு உள்ளார். செல்வகுமாருக்கு நடந்தது எல்லாம் தெரியும் என்று சொல்லி கோமதி செல்வகுமாருடன் சுந்தர் பேசுவதற்கு அனுமதிக்கவில்லை. ராஜேஸ்குமார் போன் பண்ணி பேசி சுந்தரை வேலைக்கு வருமாறு கேட்டுக்கொண்டுள்ளார். மார்ச் 14 சுந்தர் வழமைபோல் வேலைக்குப் போய்யுள்ளார். அன்று ஏற்கனவே சுந்தருடன் பிரச்சினைப்பட்ட சேகரே சுந்தரை விசாரித்தார். கேள்விகளைக் கேட்டு பதிலை பதிவு செய்தனர்.

அப்போது தீபத்தின் பிரதான உரிமையாளரான துரை பத்மநாபன் அங்கு வந்துள்ளார். பிரச்சினையை மேலோட்டமாக சேகர் மூலம் கேட்டுக்கொண்டவர் தனது பக்கத்து நியாயத்தை கேட்காமலேயே தன்னை தகாத வார்த்தைகளால் திட்டியதாக சுந்தர் தெரிவித்தார். இறுதியில் தன்னை வேலை நீக்குவதாக பத்மநாபன் தன்னிடம் கூறியதாகத் தெரிவித்த சுந்தர், அதனை எழுத்தில் தரும்படி கேட்ட போது விசாரணைகள் முடிந்த பின் கடிதம் போடுவதாக பத்மநாபன் கூறியதாக சுந்தர் தெரிவித்தார்.
அதன்படி மார்ச் 19, திகதியிட்டு வேலை நீக்கப்படுவதாக சுந்தருக்கு கடிதம் அனுப்பப்பட்டது. அதனைத் தொடர்ந்து சுந்தர் Levenes Solicitors என்ற சட்ட நிறுவனம் மூலம் தன்னை வேலை நீக்கியதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுத்துள்ளார்.
சுந்தர் தீபம் நிர்வாகத்தின் மீது வைத்த குற்றச்சாட்டுகளை மறுத்த ஊடக முகாமையாளர் கோமதி, சுந்தர் சொல்வது போல் வன்முறைச் சம்பவங்கள் எதுவும் நடைபெறவில்லை எனத் தெரிவித்தார். சுந்தர் தீபத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுத்துள்ளாரே எனக் கேட்டதற்கு அப்படி எதுவும் தங்களுக்கு இதுவரை கிடைக்கவில்லை எனத் தெரிவித்தார்.

No comments:
Post a Comment