Monday, June 2, 2008

தமிழகத்தின் ஆதரவை கோரி மீண்டும் விடுதலைப்புலிகள் வேண்டுகோள்

இலங்கையின் வடபகுதியில் தீவிர சண்டை நடந்து வரும் நிலையில், தமிழகத்தின் ஆதரவை விடுதலைப் புலிகள் மீண்டும் கோரி உள்ளனர். 1958-ம் ஆண்டு இலங்கையில் நடந்த தமிழர்களுக்கு எதிரான கலவரத்தின் 50-வது ஆண்டு தினத்தை குறிக்கும் வகையில் இலங்கையின் வடபகுதியில் உள்ள கிளிநொச்சியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் விடுதலைப்புலிகளின் அரசியல் பிரிவு தலைவர் பி.நடேசன் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், ‘நாங்கள் துன்பப்பட்டு வரும் நிலையில் தமிழ்நாட்டு தமிழர்கள் வெறும் பார்வையாளர்களாக அமைதி காக்கக் கூடாது. அவர்கள் ஆதரவு குரல் எழுப்புவதோடு நின்றுவிடாமல் எங்களுடைய போராட்டத்திற்கான ஆதரவை அதிகரிக்க வேண்டும்’ என்று கேட்டுக் கொண்டார். ‘தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தமிழர்களும் உலகம் முழுவதும் உள்ள 8 கோடி தமிழர்களும் ஆதரவு அளித்தால் ஈழத்தமிழர்கள் இமாலய வெற்றிகளை படைப்பார்கள். தமிழக மக்கள் அரசியல் வேறுபாடுகளை மறந்து ஒரே இனம் என்ற அடிப்படையில் ஒன்றிணைந்து எங்களுக்கு உதவு முன் வரவேண்டும். தமிழக மக்கள் எங்களுக்கு துணை நிற்பார்கள். உலகம் முழுவதும் உள்ள விடுதலை விரும்பிகள் விரைவில் எங்களுடன் கரம்கோர்த்து நிற்பார்கள்’ என்றும் நடேசன் அப்போது கூறினார். இதே போல சிங்கப்பூர் மற்றும் மலேசியாவில் உள்ள தமிழர்களும் தங்களுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்று நடேசன் கேட்டுக் கொண்டார். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் மாவீரர் தின உரையாற்றிய போது, ஈழத்தமிழர்களின் போராட்டத்திற்கு சர்வதேச சமுதாயம் துணை நிற்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். அவரது கோரிக்கையை எதிரொலிக்கும் வகையில் புலிகளின் அரசியல் பிரிவு தலைவர் நடேசனும் தற்போது தமிழகத்தின் ஆதரவை நாடியுள்ளார். அண்மையில் இலங்கை ராணுவத்திற்கு இந்தியா உதவி செய்வதை கடுமையாக விடுதலைப் புலிகள் விமர்சித்திருந்தார்கள். விடுதலைப் புலிகளின் மீதான தடையை இந்திய அரசு அண்மையில் மேலும் 2 ஆண்டு காலத்திற்கு நீட்டித்துள்ள நிலையில், தற்போது புலிகள் தமிழகத்தின் ஆதரவை கோரி இருப்பது குறிப்பிடத்தக்கது.

No comments: