பிரிட்டனிலுள்ள வேர்சஸ்ரர்சையரிலுள்ள கிராமமொன்றில் வசிக்கும் மக்கள் தொகையில் அரைவாசிக்கும் அதிகமானோர் சர்வதேச கடனட்டை மோசடியில் பாதிக்கப்பட்டிருப்பதுடன் அவர்களின் கணக்குகளிலுள்ள பணம் இலங்கை, இந்தியா, டென்மார்க், டொமினிக்கன் குடியரசு ஆகிய நாடுகளில் எடுக்கப்பட்டிருக்கிறது.
பிரிட்டன் பூராகவும் நுகர்வோரிடமிருந்து கடனட்டை மோசடி தொடர்பாக பரவலாகத் தெரிவிக்கப்படும் முறைப்பாடுகளில் பிந்தியதாக இந்தக் குற்றச்சாட்டு காணப்படுகிறது.
பம்பாய், சென்னை உட்பட பல்வேறு இடங்களில் பிரிட்டனிலுள்ளோரின் கணக்குகளிலிருந்து மோசடியாக பணம் பெறப்படுவதாகக் கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக பிரிஐ செய்திச்சேவை தெரிவித்தது.
வேர்சஸ்ரர் சையரிலுள்ள அமைதியான கிராமம் விச்போல்டாகும். அங்கு 700 வீடுகள் உள்ளன. அவற்றில் 400 வீடுகளைச் சேர்ந்தவர்களின் கணக்குகளிலிருந்து வெளிநாடுகளில் பணம் கையாடப்பட்டுள்ளது.
அவர்களுடைய அட்டைகளை பாவிக்கமுடியாமல் தடுக்கும் விதத்தில் ஏற்பாடுகளைச் செய்துவிட்டு விபரங்களை வெளிநாடுகளிலுள்ள குறிப்பிட்ட இடங்களுக்கு ஈமெயில் மூலம் அனுப்பி அங்கு பணத்தைப் பெற்றுக் கொள்வதாக உள்ளூர் பொலிஸார் கருதுகின்றனர். 50 தொடக்கம் 1000 ஸ்ரேலிங் பவுண்கள் வரை பணம் கையாடப்பட்டுள்ளது.
கடந்த மேயில் போர்னோ மௌத்தைச் சேர்ந்த "டெய்லி எக்கோ'வின் பத்திரிகையாளரின் பணம் அவரின் சென்னையிலுள்ள வங்கிக் கணக்கிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது.
அதேபகுதியைச் சேர்ந்த 500 பேருக்கும் இதேமாதிரியான பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
கடனட்டை பலபடியாக்கத்தை கண்டுபிடிக்க பிரிட்டிஷ் பாதுகாப்பு அதிகாரிகள் தீவிரமான முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர். இந்த அட்டைகளின் விபரங்கள் இரகசியமான முறையில் பரிமாற்றங்களின் போது பதிவு செய்யப்படுகின்றன. பெற்றோல் விற்பனை நிலையங்கள், பல்பொருள் அங்காடிகளிலேயே இவை பதிவு செய்யப்பட்டு உலகளாவிய ரீதியில் ஈமெயில் மூலம் அனுப்பப்பட்டு அந்த இடங்களிலிருந்து ஏ.ரி.எம் இயந்திரங்களூடாக பணம் எடுக்கப்படுகிறது.
இந்த மோசடிக்கு கேந்திர இடங்களாக கராஜுகளும் எரிபொருள் விற்பனை நிலையங்களும் இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.
விச்போல்டில் வீட்டுப் பராமரிப்பு உதவியாளராக பணிபுரியும் தெரேசா துட்டின் (50 வயது) கூறுகையில்;
லிவர்பூலிலுள்ள கடையொன்றில் நான் சில பொருட்களைக் கொள்வனவு செய்தேன். ஆனால், இந்தியாவில் எனது பணத்தை எடுத்து விட்டதாகக் கூறப்பட்டது. ஆனால், அதனை நான் செய்யவில்லை என்பதை உறுதியாகக் கூறுகிறேன்.
ஏதோவொன்று இரகசியமாக இடம்பெறுகிறது. இது அவமானமான விடயம் என்றும் அவர் கூறியுள்ளார்.
உள்ளூர் கராஜ் ஒன்றிலிருந்து சில பொருட்களை சோதனைக்காக பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
காலிட்கான் என்பவர் பல வருடங்களாக விச்போல்ட் கிராமத்தில் வைத்துள்ள பெற்றோல் விற்பனை நிலையத்திலேயே அக்கிராமத்தவர்கள் தமது எரிபொருள் தேவையை பூர்த்தி செய்கின்றனர். தன்னால் முடிந்தளவுக்கு பொலிஸாரின் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்குவதாக காலிட்கான் கூறியுள்ளார்.
18 வருடங்களாக அந்தப் பகுதியில் தொழில் செய்வதாகவும் இதனைப் போன்ற பிரச்சினை முன்னர் ஏற்பட்டதில்லை என்றும் அவர் கூறுகிறார்.
மோசடி தொடர்பாக தீவிர விசாரணைகள் இடம்பெறுகின்றன.
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment