சக்தி தொலைக்காட்சி - வானொலி யாழ் நிருபரின் கொலைச் சூத்திரதாரிகளை மறைக்க முயலும் தமிழ் ஊடகங்கள்!
- நல்லூரான்
தம்மை நடுநிலைமையானவர்கள் என்று சொல்லிக்கொள்ளும் சில தமிழ் ஊடகங்கள், நாட்டில் நடைபெறும் முக்கியமான நிகழ்வுகள் சம்பந்தமான செய்திகளை வெளியிடும்போது, பக்கச்சார்பானதாகவும், பாரபட்சமாகவுமே வெளியிட்டு வருகின்றன. குறிப்பாக யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் ‘உதயன்’ கொழும்பிலிருந்து வெளிவரும் ‘தினக்குரல்’என்பன, தேசிய அரசியலைப் பொறுத்தவரையில், ஐக்கிய தேசியக் கட்சி - புலிகள் - முஸ்லீம் காங்கிரஸ் என்பனவற்றுக்கு சாதகமாகவே எப்பொழுதும் செய்திகளை வெளியிட்டு வருகின்றன. தினக்குரல் ஏறக்குறைய தினசரி தனது கேலிச்சித்திரத்தில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை மிகவும் மோசமாகவும் கேவலமாகவும் சித்தரித்து வருகின்றது. இலங்கையில் முன்னெப்போதும் வேறு எந்தப்பத்திரிகையும் இவ்வாறு செய்ததாக வரலாறு இல்லை. உதயனும் இலங்கை அரசாங்கத்தை விமர்சிக்கும் போது மிகவும் கேவலமான வார்த்தை நடையைக் கையாண்டு வருகின்றது. அதேவேளையில் புலிகளின் கொலைகாரச் செயல்பாடுகளை பகிரங்கமாக ஆதரித்தும் எழுதுகின்றன. இவ்வாறெல்லாம் செய்துகொண்டு, இலங்கையில் ஊடக சுதந்திரம் இல்லையென்றும் இந்த பத்திரிகைகள் கூக்கிரலிட்டு வருகின்றன. இப்பத்திரிகைகள் நாட்டில் நடைபெறும் ஒவ்வொரு சம்பவத்தையும் இலங்கை அரசாங்க எதிர்ப்பை வளர்ப்பதற்காகவே பயன்படுத்தி வருகின்றன. சிலவேளைகளில் புலிகள் செய்வனவற்றையும் இலங்கை அரசாங்கத்தின் தலையில் கட்டியடித்து விடுகின்றன. அவர்கள் செய்தி புனையும் விதத்தில், புலிகள் செய்யும் கொலைகளை இராணுவம்தான் செய்தது என பொதுமக்களை நம்பவைத்து விடுவார்கள். குண்டுவெடிப்புகள் கொலைகளைப்பற்றி செய்தி வெளியிடும்போது ‘அந்த சம்பவம் நடைபெற்ற இடத்துக்கு அருகாமையில் இராணுவமுகாம் அமைந்துள்ளது’ என்றோ அல்லது ‘உயர் பாதுகாப்பு வலயத்தில் அந்த சம்பவம் நடந்தது’ என்றோரு செய்தியையும் இணைத்துப் பிரசுரித்து, இராணுவம் தான் அந்த சம்பவத்தில் ஈடுபட்டதென மக்களை நம்பவைத்து விடுவார்கள்.
அண்மையில் (28.05.2008) யாழ்ப்பாணம் - கல்லுண்டாய் வெளியில் வைத்து ‘சக்தி’தொலைக்காட்சி - வானொலி எனபனவற்றின் யாழ் பிராந்திய நிருபர் பரநிருபசிங்கம் தேவகுமார் (32) என்பவரையும், அவருடன் கூடிச்சென்ற அவரது உறவினரான மகேந்திரன் வரதன் (28) என்பவரையும் புலிகள் தான் படுகொலை செய்தனர் என்பது யாழ்ப்பாண மக்கள் அனைவருக்கும் சந்தேகமறத் தெரிந்த விடயம். ஏனெனில் இராணுவம் அண்மையில் யாழ்ப்பாணத்தில் ஒழுங்கு செய்த களியாட்டவிழாவில் புலிகளின் எச்சரிக்கையையும் மீறி ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் கலந்துகொண்டனர். அவ்வாறு கலந்துகொண்ட யாழ் குடாநாட்டு மக்களின் மன உணர்வுகளை தேவகுமார் பதிவு செய்து சக்தியில் ஒலி, ஒளி பரப்பினார். யாழ் குடாநாட்டு மக்கள் தெரிவித்த கருத்துக்கள் கடந்த காலங்களில் வடபகுதியில் புலிகள் மேற்கொண்ட அடக்குமுறை நிர்வாகத்தை சாடுவதாக அமைந்திருந்தது. அந்த விழாவில் கலந்து கொள்ள வேண்டாம் என புலிகள் கேட்டுக்கொண்டபோதும் பெருந்திரளான யாழ் குடாநாட்டு மக்கள் கலந்து கொண்டனர். இதனால் ஆத்திரமடைந்திருந்த புலிகள், அதனை வெளி உலகுக்கு தெரியப்படுத்திய சக்தி தொலைக்காட்சி –வானொலி நிருபர், பரநிருபசிங்கம் தேவகுமாரைப் படுகொலை செய்தனர். அவரைப் படுகொலை செய்ததுடன் நின்றுவிடாது, அவருடன் கூடச்சென்ற வரதனையும் புலிகள் கொலை செயதனர். சக்தி தொலைக்காட்சி –வானொலி நிருபரின் கொலையை வெளியே சொல்லி விடுவாரென்ற பயத்தில் வரதனை புலிகள் கொன்றிருக்கலாம்.
இந்த உண்மையெல்லாம் முழு யாழ்ப்பாண மக்களுக்கும் நன்கு தெரிந்த விடயம். ஆனால் இந்த செய்தியை வெளியிட்ட உதயன், தினக்குரல் பத்திரிகைகள் அந்த சம்பவம் கல்லுண்டாயில் உள்ள இராணுவமுகாம் அருகில் நடந்ததாக சித்தரித்தனர். இதன் மூலம் அந்த கொலையை இலங்கை இராணுவத்தின் தலையில் போட இப்பத்திரிகைகள் முயன்றுள்ளன. வெளிநாடுகளிலுள்ள புலிகளுக்கு சார்பான ஊடகங்களும் அவ்வாறே செய்தி வெளியிட்டதாக அறிய முடிகின்றது. முன்பு யாழ்ப்பாணத்தில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் பிரமுகரும், அங்கு பிரபலமான சிவகுமார் ஸ்ரோர்ஸ் உரிமையாளருமான நமசிவாயம் என்பவரையும் புலிகள் யாழ் கொட்டடிச் சந்தியில் வைத்து இவ்வாறுதான் வெட்டிப் படுகொலை செய்தனர். புலிகள் எதைச் செய்தாலும் அவற்றை மறைப்பது அல்லது இலங்கை இராணுவத்தின் தலையில் சுமத்துவது, அப்படி எதுவும் செய்ய முடியாமல் போய்விட்டால் அதனைத் தமிழ் தேசிய விடுதலைப் போராட்ட நடவடிக்கையாக வர்ணிப்பது என்பனவே இந்த ‘நடுநிலைமை’ஏடுகளின் பத்திரிகா தர்மமாக இருந்து வருகின்றது. உண்மைகளை தற்காலிமாக மறைக்கலாம், திரித்து எழுதலாம். ஆனால் வரலாற்றில் உண்மைகள் நிரந்தரமாக புதைக்கப்படுவதில்லை
No comments:
Post a Comment