
இனப்பிரச்சினை தீர்விற்கான அமைதி முயற்சியை இன்னமும் கைவிட வில்லை என்று ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் குருஜி அவர்கள் வீரகேசரி வார வெளியீட்டுக்கு வழங்கிய விசேட செவ்வியில் குறிப்பிட்டார். இலங்கையில் நிலவும் பிரச்சினைக்கு வெறுமனே அரசியல்ரீதியான அணுகுமுறை மூலம் தீர்வு கண்டுவிட முடியாது. தீர்வை நோக்கிய பயணத்தில் மனமாற்றமும், பரஸ்பரம் நம்பிக்கையும் உறுதியான அடித்தளமாக அமைவதன் மூலமே இலகுவாக வெற்றியை நோக்கிப் பயணிக்க முடியும். அந்த வகையில் அரசியல் அணுகு முறையுடன் ஆன்மிக அணுகுமுறையும் இணைந்து பயணிக்கும் போதே முழுமையான வெற்றியை ஈட்டக் கூடியதாக இருக்கும் என்றும் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் குருஜி அவர்கள் குறிப்பிட்டார். பெங்களூரீல் அமைந்துள்ள வாழும் கலை அமைப்பின் சர்வதேச மத்திய நிலையத்தில் வைத்து கேசரிவார இதழுக்கு குருஜி அவர்கள் வழங்கிய நேர்காணலின் முழு விபரம் வருமாறு;
கேள்வி: இலங்கையில் சமாதானத்தை ஏற்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்குத் தாங்கள் விருப்பம் கொண்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளீர்கள். இதே கருத்தினை கொழும்புக்கான விஜயத்தின்போதும் நீங்கள் தெரிவித்திருந்தீர்கள். உங்களது எதிர்பார்ப்பு நடவடிக்கைகள் எவ்வளவு தூரத்திற்கு முன்னேறியுள்ளது என்பதைக் கூற முடியுமா?
பதில்: அமைதி முயற்சி என்பது கால வரையறைக்கு அப்பாற்பட்டது. நேரம், காலம் கணித்து அமைதி முயற்சியை முன்னெடுக்க முடியாது. அதேபோல் அமைதி முயற்சி எந்தளவுக்கு வெற்றி பெற்றுள்ளது என்று கூறுவதும் கடினம். ஆனால் முயற்சியை தொடர்ந்து செய்து கொண்டே இருக்க வேண்டும். தொடர்ந்து முயற்சியை மேற்கொள்வோமாக இருந்தால் எப்போதாவது ஒரு சந்தர்ப்பத்தில் அது நிச்சயமாக வெற்றியை தரும் என நான் நினைக்கிறேன். அந்த ஒரு விசுவாசத்துடன் தொடர்ந்து முயற்சி செய்வோமாக இருந்தால் வெற்றி கிடைக்கும். அப்படி ஒரு நம்பிக்கை இல்லாது முயற்சியை தொடர்வோமாக இருந்தால் வெற்றி பெற முடியாது. அவ்வாறான ஒரு முயற்சிக்கு அவசியமும் இல்லை. எனவே நாம் தொடர்ந்தும் முயற்சிகளை மேற்கொண்டு வருவதானது ஒரு நம்பிக்கையின் அடிப்படையில் மட்டுமல்ல அது வெற்றி பெறும் என்ற உறுதியான எதிர்பார்ப் புடன்தான். எனவே அமைதி முயற்சியில் வெற்றி கிடைக்கும் என்ற பெரும் எதிர்பார்ப்பு எமக்கு உள்ளது.
கேள்வி: இலங்கை அரசும் தமிழீழ விடுதலைப் புலிகளும் தங்கள் மீது நம்பிக்கை கொண்டிருப்பதாகக் கூறியுள்ளீர்கள். இந்த நம்பிக்கையின் வெளிப்பாடாக மேற்படி இரு தரப்பினமுடம் இருந்தும் சமாதானம் குறித்து தங்களுக்குக் கிடைத்த செய்தியை அல்லது சமிக்ஞையை கூற முடியுமா?
பதில்: இலங்கை அரசாங்கமும் தமிழீழ விடுதலைப் புலிகளும் அமைதி வேண்டும் என்றே நினைக்கிறார்கள். தமிழ் மக்கள் அமைதியுடன் உரிய கௌரவத்துடன் வாழவேண்டும் என எதிர்பார்க்கின்றனர். இலங்கை அரசாங்கமும் இது போன்றதொரு எண்ணத்தில்தான் உள்ளது. வன் முறை யை விட்டுசாந்தி, சமாதானமாக பேச்சுவார்த்தை நடத்துவதுதான் இன்றைய தேவையாக உள்ளது. இது அவசர அவசிய தேவையாகவும் உள்ளது. இதனை ஏற்படுத்துவதற்காகத்தான் நாங்கள் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றோம். ஏனென்றால் தமிழ் மக்கள் மிக கஷ்டத்தை அனுபவித்து வருகிறார்கள். தமிழ் மக்கள் தமது சுய ஆட்சி, சுய நிர்ணய உரிமை குறித்து கோரிக்கை விடுக்கிறார்கள். அவர்களின் கோரிக்கை நியாய மானதுதான். அதேவேளையில் இலங்கையின் இறைமையை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு இருப்பதாக அரசாங்கம் கூறுகின்றது.இவ்வாறு இரு வேறுபட்ட நிலைப்பாட்டில் இவ்விரு பகுதியினரும் இருந்த போதும் அவர்கள் எதிர்பார்ப்பது அமைதியைதான். அந்த வகையில் இவர்கள் இரு பகுதியினரும் எதிர்பார்க்கும் அமைதியை பேச்சுவார்த்தை மூலம் தான் கொண்டு வர முடியும் என்பதே எமது நிலைப்பாடு.
கேள்வி: இரு பகுதியினருமே ஒருவர் மீது ஒருவர் நம்பிக்கையற்ற நிலையிலேயே இருக்கின்றனர். இதுவரை பல சுற்று பேச்சுவார்த்தைகளில் இவ்விரு பகுதியினரும் ஈடுபட்டபோதும் உரிய பலன் கிடைக்கவில்லை, பேச்சுவார்த்தைக்கு அடிப்படையாக இருப்பது நம்பிக்கை மற்றும் சமாதானத்தின் மீதான உறுதிப்பாடு, இதனை இரு பகுதியினரிடமும் கொண்டு வருவதற்கு என்ன செய்யலாம் என்று நீங்கள் கருதுகிறீர்கள்?
பதில்: இரு பகுதியினரும் நம்பிக்கையை கட்டியெழுப்புவதற்கும் பேச்சுவார்த்தை மேசை நோக்கி இரு பகுதியினரையும் கொண்டு வரு வதற்கும் அமைதி முயற்சியில் இரு பகுதியினரும் பற்றுறுதி கொண்டு செயற்படுவதற்கு தேவையான நடவடிக்கைகளாக எதனை எல்லாம் செய்யலாமோ அனைத்தையும் செய்வதற்கு நாங்கள் தயாராக இருக்கின்றோம்.
கேள்வி: இலங்கை அரசாங்கம், விடுதலைப்புலிகள் ஆகிய இரு பகுதியினரும் தங்களில் நம்பிக்கை வைத்துள்ளதாகக் கூறும் அதேவேளை யில், தங்களது கொழும்பு விஜயத்தின் போது, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவையும் நீங்கள் சந்தித்துள்ளீர்கள். இந்த சந்திப்பின்போது சமாதானம் குறித்துப் பேசினீர்களா? அவரது பதில் என்னவாக இருந்தது?
பதில்: இலங்கை ஜனாதிபதியும் சமாதானத்தில் அக்கறை உள்ளவராகவே உள்ளார். சில அரசியல்வாதிகள் முன்பு செய்த தவறுகளினால் தான் இன்று இந்த நிலை உருவாகியுள்ளது என்பதை அனைத்துத் தரப்பினரும் அறிந்தும் தெரிந்தும் வைத்துள்ளனர். அந்த வகையில் புதிய வழியில் ஜனநாயகரீதியில் சிந்தித்து எல்லோருக்கும் நன்மை பயக்கும் வகையில் செயலாற்ற வேண்டுமென்றும் அனைத்து தரப்பினரும் நினைக்கின்றனர்.
கேள்வி: சில அரசியல்வாதிகள் முன்பு விட்ட தவறுகளே இலங்கையின் இன்றைய சூழ்நிலைக்குக் காரணம் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் உணருகின்றாரா?
பதில்: ஆம். சில அரசியல்வாதிகள் முன்பு செய்த தவறுகளே இலங்கையின் இன்றைய நிலைக்குக் காரணமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் உணர்கிறார். அத்துடன் தமிழர் பிரச்சினைக்குத் தீர்வு காணும் நோக்கில் பல நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
கேள்வி:இலங்கை ஜனாதிபதியைச் சந்தித்தபோது தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே. பிரபாகரனை சந்திப்பது பற்றிக் கேட்டீர்களா? அதற்கு அவரது பதில் என்னவாக இருந்தது?
பதில்: ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே. பிரபாகரனைச் சந்திப்பதற்குத் தயாராக இருப்பதாகக் கூறினார்.
கேள்வி: நீங்கள் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே. பிரபாகர னைச் சந்திப்பது பற்றிக் கேட்டீர்களா?
பதில்: விடுதலைப் புலிகளின் தலைவரைச் சந்திப்பதற்காகக் கிளிநொச்சிக்கும் சென்றிருந்தோம். ஆனால் அவரைச் சந்திக்க முடியவில்லை. மற்றவர்களைத்தான் சந்திக்கக் கூடியதாக இருந்தது.
கேள்வி:விடுதலைப் புலிகளின் தலைவர் வே. பிரபாகரனைச் சந்தித்துப் பேசும் எண்ணம் இன்றும் உங்களிடம் உள்ளதா?
பதில்: தற்போது கூட நாம் அவரைச் சந்தித்துப் பேசுவதற்கு விருப்பம் கொண்டுள்ளோம். அவருடன் நேரடியாகத் தொடர்பு வைத்துக் கொள்ளவே விரும்புகின்றோம்.
கேள்வி: தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே. பிரபாகரனுடனான சந்திப்புக்கு இலங்கை அரசாங்கம் அனுமதியளிக்குமென எதிர்பார்க் கின்றீர்களா? அதாவது இன்றைய இறுக்கமான அரசியல் சூழ்நிலையில் இலங்கை அரசாங்கம் சந்திப்புக்கு அனுமதி அளிக்குமா?
பதில்: அனுமதி அளிப்பார்கள் என்று நாம் நினைக்கின்றோம்.
கேள்வி: ஒஸ்லோவில் தங்களது அமைப்பின் ஏற்பாட்டில் இடம்பெற்ற தெற்காசியாவில் சமாதானம் நல்லிணக்கம் என்பது தொடர்பான மாநாட்டின் நோக்கம் என்ன? தங்களது எதிர்பார்ப்பு நிறைவேறியதா?
பதில்: நோர்வே இலங்கையின் இன விவகாரத்தில் நீண்ட காலமாக சமாதான முயற்சியில் ஈடுபட்டு வருகின்றது அந்த ஒரு பின்னணியிலே மாநாட்டை அங்கு வைப்பதென முடிவு செய்தோம். அனைத்துத் தரப்பினரையும் இணைத்து சமாதான வழியில் இலங்கையின் இன விவகாரத்திற்குத் தீர்வுகாண வேண்டுமென்பதே நோக்கமாக இருந்தது.
கேள்வி: மேற்படி மாநாட்டில் கலந்து கொண்ட ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வை. கோ. மாநாடு முடிந்த கையுடன் இந்தியப் பிரதமரைச் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இந்தியாவின் நிலைப்பாட்டில் இதன் மூலம் மாற்றம் ஏற்படும் என எதிர்பார்க்கலாமா?
பதில்: அது அரசியல்வாதிகளுக்குத்தான் தெரியும். இந்தியப் பிரதமரை நாங்கள் இது குறித்து இதுவரை சந்தித்துப் பேசவில்லை. ஆனால் ஒஸ்லோ மாநாட்டில் அனைத்து தரப்பினரும் பங்குபற்றியிருந்தனர். இலங்கை விவகாரம் மாத்திரமல்ல இந்தியாவில் உள்ள நக்ஸலைட் பிரச்சினை பற்றியும் ஒஸ்லோ மாநாட்டில் அலசி ஆராயப்பட்டது. அதுபோல் பர்மாவில் நிலவும் பிரச்சினையும் பேசப்பட்டது. மொத்தத்தில் தென்னாசி யாவில் எப்படியாவது வன்?றையை முடிவுக்குக் கொண்டு வந்து அமைதியை ஏற்படுத்துவது பற்றியே கூடுதலாகக் கவனம் செலுத்திப் பேசப்பட்டது.
கேள்வி: ஒஸ்லோ மாநாடு முடிந்த கையுடன் வைகோ இந்தியப் பிரதமரைச் சந்தித்துப் பேசியுள்ளார். இது உங்களுடைய செல்வாக்கால்தான் நடந்தது என்று கூறப்படுகின்றது. இலங்கை விவகாரத்தில் இந்திய மத்திய அரசின் வெளியுறவுக் கொள்கையில் உங்களுடைய செல்வாக்கைப் பயன்படுத்தி மாற்றத்தைக் கொண்டு வர முடியாதா?
பதில்: அது பற்றி என்னால் கூற முடியாது. அவர்கள் எமது செல்வாக்குக்கு ஆட்பட்டவர்களா என்பதை அவர்கள் தான் கூற வேண்டும்.
கேள்வி: இலங்கை விவகாரத்தில் இந்தியாவின் காத்திரமான பங்களிப்பு இன்றி தீர்வு வருவது கடினமாகவே இருக்கும். இது தொடர்பாக இந்திய மத்திய அரசுடனோ அல்லது தமிழக அரசுடனோ பேச்சுவார்த்தை நடத்தினீர்களா?
பதில்: இல்லை. இந்திய மத்திய அரசுடனோ அல்லது தமிழக அரசுடனோ நாம் இலங்கை விவகாரம் குறித்துப் பேச்சுவார்த்தை நடத்தவில்லை.
கேள்வி: நான் எப்பொழுதும் நடக்க முடியாதவைகளையே கனவு கண்டுள்ளேன். ஆனால் அவை நடந்துள்ளன என கூறியிருந்தீர்கள். அவ்வாறான உங்களது கனவையும் நடந்தவைகளையும் பற்றி விபரிக்க முடியுமா?
பதில்: நானாக அவைகளைச் சொல்ல முடியாது. மற்றவர்களிடம் கேளுங்கள். அவர்கள் கூறுவார்கள்.
கேள்வி:: இலங்கை இன விவகாரத்தில் தங்களது அமைதி முயற்சியும் அவ்வாறானது தானே?
பதில்: அப்படித்தான்.
கேள்வி: அயர்லாந்து, ஐவரிகோஸ்ட் ஆகிய இடங்களில் நடைபெற்ற போராட்டங்களை உங்களது அமைப்பான வாழும் கலை அமைப்பின் முக்கிய பங்கால் முடிவுக்குக் கொண்டு வர முடிந்தது என்று அண்மையில் ஒரு செவ்வியில் குறிப்பிட்டிருந்தீர்கள். இந்த இரு போராட்டங்களையும் முடிவுக்குக் கொண்டுவர தங்களது அமைப்பு ஆற்றிய பங்களிப்பு, பணிகள் பற்றிக் கூற முடியுமா? ஏனெனில் உங்களது பங்களிப்பு இலங்கையின் இன விவகாரத்தில் கூடுதலான முக்கியத்துவம் பெறக் கூடியதாக இருக்கும்.
பதில்: பல இடங்களில் நாங்கள் பல வழிகளில் தொடர்ந்து பணியாற்றிக் கொண்டிருக்கின்றோம். ஈராக்கில் கூட எமது அமைப்பைச் சார்ந்தவர்கள் பணியாற்றிக் கொண்டிருக்கின்றனர். காஷ்மீரில் கூட இளைஞர்களை சரியான வழிக்கு திசை திருப்பும் பெரும் முயற்சி நடைபெற்றுள்ளது. குறிப்பாக இந்தியாவில் இவ்வாறு பல வேலைத் திட்டங்கள் வெற்றிகரமாக முன்னெடுத்துச் செல்கின்றோம். எமது அமைப்பின் நோக்கமே அமைதியைக் கொண்டு வருவதுதான். பிரசாரப்படுத்துவது எமது நோக்கமல்ல. ஐவரி கோஸ்டில் நாம் நிறையவே பங்காற்றியுள்ளோம். எமது பணிகளைப் பாராட்டி ஐவரிகோஸ்ட் அரசாங்கம் கடந்த வருடம் எமது அமைப்புக்கு விருதினை வழங்கியுள்ளது. அதாவது ஐவரிகோஸ்டில் முஸ்லிம், கிறிஸ்தவ மக்களிடையே ஏற்பட்ட சண்டை, சச்சரவைத் தீர்த்து வைத்துள்ளோம். முஸ்லிம்கள் கிறிஸ்தவர்கள் பகுதிக்குச் சென்றும் கிறிஸ்தவர்கள் முஸ்லிம்கள் வாழும் பகுதிகளுக்குச் சென்றும் பரஸ்பர புரிந்துணர்வுடன் பாடசாலைகள், மலசலகூடங்கள் என்பன அமைப்பது உட்பட பல வேலைத் திட்டங்களை முன்னெடுத்துள்ளனர். இன்று அந்த இரு இனங்களும் அமைதியாக சமாதானத்துடன் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர் இவ்வாறு உலகளாவியரீதியில் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இவ்வாறு பல பணிகளை முன்னெடுப்பதற்கு எமது அமைப்பு கொண்டுள்ள உறுதியான தன்னார்வ தொண்டர் படையே காரணம். உண்மையில் எமது அமைப்பு ஈட்டுகின்ற வெற்றிகள் அனைத்துக்கும் சொந்தக்காரர்கள் எமது அமைப்பு கொண்டுள்ள தொண்டர் அணியினரே. எனவே சகல விருதுகளும் நற்பெயரும் அவர்களைத் தான் சென்றடைய வேண்டும். ஆனால் அந்த விருதுகளையும் நற்பெயர்களையும் சும்மாஎனக்குக் கொடுத்து விடுகின்றார்கள்.
கேள்வி:: இலங்கையின் இன விவகாரத்தில் சமாதானத் தூதுவராகப் பணியாற்றுவதற்கு விருப்பம் கொண்டுள்ளதாகக் கூறியுள்ளீர்கள். உங்களது சமாதானத் தூது குறித்து சம்பந்தப்பட்ட இரு தரப்புகளில் ஏதாவது ஒரு தரப்பிடமிருந்தேனும் உங்களுக்குச் சாதகமான பதில் கிடைத்ததா?
பதில்: நாம் எமது அமைதி முயற்சியைத் தொடர்ந்து கொண்டிருப்போம். பதில் கிடைக்கின்றதோ கிடைக்கவில்லையோ, அது குறித்து மனம் தளரவோ அல்லது சமாதான முயற்சியைத் தொடராமலோவிடப் போவ தில்லை. எம்மைப் பொறுத்து இலங்கையில் அமைதி திரும்ப வேண்டும். மக்கள் நிம்மதியாக, சந்தோஷமாக அமைதியாக, சமாதானத்துடன் வாழ வேண்டும். இத்தகைய ஒரு சூழ்நிலையை உருவாக்க இலங்கை அரசாங்கமும் தமிழீழ விடுதலைப் புலிகளும் அமைதி வழிக்குத் திருப்பி பேச்சுவார்த்தை மேசையில் அமர்த்தி பேச்சுவார்த்தை வெற்றி பெற அனைத்து முயற்சிகளிலும் நாம் தொடர்ச்சியாக ஈடுபட்டுக் கொண்டிருப் போம். சுனாமி அனர்த்தத்தின்போது 450 மெற்றிக் தொன் உதவிப் பொருட்களை இலங்கையில் சுனாமியால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கும் நாம் அனுப்பி இருந்தோம்.
கேள்வி: இலங்கையின் இன விவகாரத்தில் இந்தியா எத்தகைய பங்கினை வகிக்க வேண்டுமென நீங்கள் எதிர்பார்க்கின்றீர்கள்?
பதில்: இந்தியா நிச்சயமாகப் பங்கேற்க வேண்டும். இந்திய அரசு சரியான முறையில் பங்கேற்காததினாலேயே இலங்கையின் இன விவகாரம் இவ்வளவு தூரத்திற்கு இழுபடக் காரணமாக உள்ளது. இந்திய அரசாங்கம் முழு ஈடுபாட்டுடன் காத்திரமான பங்களிப்பைச் செய்தால் இலங்கையின் இனவிவகாரத்தை மிக விரைவிலேயே முடிவுக்குக் கொண்டுவர முடியும் என்று நான் கருதுகின்றேன்.
கேள்வி: குருஜி அவர்களே இறுதியாக நீங்கள் ஏதேனும் கூற விரும் புகின்றீர்களா?
பதில்: ஆம், இலங்கையின் இன விவகாரத்தை வெறுமனே அரசியல் முதியாக மாத்திரம் தீர்த்து வைத்து விடலாம் என்று நினைத்தால் அது தவறானதாகும். ஏனெனில் இலங்கையின் இன விவகாரத்திற்கான தீர்வில் மனமாற்றம், பரஸ்பர நம்பிக்கை என்பவை கூடுதலான பங்கை வகிக்க முடியும். மனமாற்றத்தையும் பரஸ்பர நம்பிக்கையையும் கட்டி எழுப்புவது என்பது அரசியலால் முடியாது. அது ஆன்மிகத்தாலேயே சாத்தியமாகும். எனவே இலங்கையின் இன விவகாரத் தீர்வு நோக்கிய பயணத்தில் அரசியல் முயற்சியுடன் ஆன்மிக முயற்சியும் சேர்ந்து பயணிக்கும் பொழுதே முழுமையான நிரந்தரமான வெற்றியைப் பெற்றுக் கொள்ளக் கூடியதாக இருக்கும். எந்தப் பேச்சுவார்த்தையும் வெற்றி பெறுவதற்கு அடித்தளமாக இருப்பது நம்பிக்கையும் பரஸ்பர புரிந்துணர்வும்தான். இதனை ஆன்மிகத்தின் மூலமே அடைந்து கொள்ளலாம்.

No comments:
Post a Comment