Wednesday, June 18, 2008

தற்கொலைக் குண்டுத் தாக்குதல் கராஜ் உரிமையாளரை தேடும் பொலிஸார்

வவுனியா பொலிஸ் விடுதிமுன்பாக நேற்று முன்தினம் திங்கட்கிழமை இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதல் தொடர்பாக கராஜ் உரிமையாளர் ஒருவரை பொலிஸார் தேடி வருகின்றனர்.
இந்தத் தற்கொலைக் குண்டுத் தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள் தொடர்பாகவே அவர் தேடப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தத் தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள் எம்.டி. 90 ரகத்தைச் சேர்ந்ததெனவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த மோட்டார் சைக்கிளை முதலில் ஒரு சிங்களவர் புதிதாக வாங்கி மாகோவில் பதிவு செய்துள்ளார். பின்னர் இந்த மோட்டார் சைக்கிளை அவர் முஸ்லிம் ஒருவருக்கு விற்றுள்ளார்.

அவர் பின்னர் இதனை வவுனியா தேக்கவத்தையைச் சேர்ந்த கராஜ் உரிமையாளருக்கு விற்பனை செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இதையடுத்து திங்கட்கிழமை பிற்பகல் அந்தக் கராஜ் உரிமையாளரைத் தேடி பொலிஸார் சென்ற போது அவர் தலைமறைவாகிவிட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இதேநேரம் தற்கொலைக் குண்டுதாரி கிளிநொச்சியைச் சேர்ந்தவரெனவும் வவுனியா தோணிக்கல் பகுதியில் சிலகாலம் வசித்து வந்தது தெரியவந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தும் பொலிஸார், சந்தேகத்தின் பேரில் ஒருவரை கைது செய்துமுள்ளனர்.

தற்கொலைக் குண்டுதாரியின் தலை திங்கள் மாலையே, தாக்குதல் நடைபெற்ற இடத்திலிருந்து சுமார் 100 யார் தூரத்திலிருந்து கண்டெடுக்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

விசாரணைகள் முடுக்கி விட்டப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

No comments: