Friday, June 6, 2008

எம்.பி.யாகவோ, பெண்ணாகவோ பார்க்காமல் என்னை கேவலமாக திட்டினார்

பாராளுமன்ற உறுப்பினர் என்று கூடப்பாராமல் தன்னை கேவலமாகத் திட்டிய பம்பலப்பிட்டி பொலிஸ் நிலைய அதிகாரி "கழுத்தில் பிடித்து சிறைக்குள் தள்ளுவேனென' தன்னை மிரட்டியதாக ஐ.தே.க. பாராளுமன்ற உறுப்பினர் சந்திராணி பண்டா சிறப்புரிமை மீறல் பிரச்சினையை எழுப்பினார்.

பாராளுமன்றம் நேற்று வியாழக்கிழமை காலை சபாநாயகர் டபிள்யூ. கே.எம். லொக்கு பண்டார தலைமையில் கூடியதையடுத்து சிறப்புரிமை மீறல் பிரச்சினையை எழுப்பிய சந்திராணி பண்டார மேலும் கூறியதாவது

கடந்த செவ்வாய்க்கிழமை நண்பகல் 12 மணியளவில் பம்பலப்பிட்டி மஜஸ்ரிக்சிட்டிக்கு முன்பாக நான்வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது பம்பலப்பிட்டி பொலிஸ் நிலைய அதிகாரி எனது வாகனத்தையை மறித்து எனது கையை பிடித்து வெளியே இழுத்தெடுக்க முற்பட்டார்.

பின்னர் என்னை மிகமோசமாக திட்டிய அவர் எனது கழுத்தைப் பிடித்து சிறைக்குள் தள்ளுவேன் எனவும் மிரட்டினார். இவரின் செயலை உறுதிப்படுத்துவதற்கு தேவையான அனைத்து ஆதாரங்களும் என்னிடம் உள்ளன. இந்தப் பொலிஸ் அதிகாரி இவ்வாறு நடந்து கொண்டபோது எனது வாகனத்தில் இரு பொலிஸ் அதிகாரிகளும் இருந்தனர்.

என்னை ஒரு பாராளுமன்ற உறுப்பினராகவோ அல்லது பெண்ணாகவோ கூட கருதாமல் இவ்வாறு நடந்து கொண்ட பொலிஸ் அதிகாரி மகளிர் வன்முறையில் ஈடுபட்டுள்ளார். ஒரு பாராளுமன்ற உறுப்பினரான என்னுடனேயே இவ்வாறு நடந்து கொள்ளும் இவர் பொதுமக்களுடன் எவ்வாறு நடந்து கொள்வார் என்பதை நினைத்து பார்க்க வேண்டும்.

இந்தப் பொலிஸ் அதிகாரியின் செயல் குறித்து நாம் நீதிமன்ற உதவியை நாடவுள்ளோம். நீதிமன்றம் அனுமதி வழங்கிய மக்கள் போராட்டமொன்றில் நான் கலந்து கொண்ட போதே, அந்தப் போராட்டத்தை தடுக்கும் வகையில் இந்தப் பொலிஸ் அதிகாரி நடந்து கொண்டார். இதன் மூலம் அவர் நீதிமன்ற உத்தரவையும் மீறியுள்ளார்.

எனவே இது தொடர்பில் சபாநாயகர் உரிய நடவடிக்கையெடுக்க வேண்டும்.

No comments: