தமிழ் பேசும் மக்களுக்கான அரசியல் தீர்வு நோக்கிய பாதை இன்று திறந்து விடப்பட்டிருக்கின்றது. மாகாண சபைகளுக்கான அரசியல் அதிகாரங்களை நடைமுறைப்படுத்துவதே அரசியல் தீர்வுக்கான பாதையை திறந்து விடுவதற்கான வழிமுறையாகும்.
இருபது ஆண்டுகளாக தொடர்ந்து வந்த கடின உழைப்பின் வெற்றியும்,
இரத்தமும் தசையும் கலந்த சேர்வையும்தான் இன்று மறுபிறப்பெடுத்திருக்கும் இந்த மாகாணசபை!
கிழக்கில் தேர்தல் மூலம் தெரிவு செய்யப்பட்ட மகாணசபையும், வடக்கில் தேர்தல் நடக்கும் வரையிலான ஒரு சிறப்பு நிர்வாகமும் கிடைத்திருப்பது எமது மக்களுக்கு ஒரு நிம்மதியை கொடுத்திருக்கின்றது.
நாம் நினைத்தது வேறாக இருப்பினும் இன்று கிடைத்திருப்பது இதுதான் என்ற நடைமுறை சாத்தியங்களின் அடிப்டையில் கிடைத்ததை எடுத்துக்கொண்டு முன்னோக்கி செல்வதே சிறந்த வழிமுறை!
இன்று எமது மக்களுக்கு கிடைத்திருக்கும் இந்த அரிய வாய்ப்பை நடைமுறைப்படுத்துவதற்கு தடையாக இருக்கும் தீய சக்திகளே இன்று கிழக்கு மக்கள் மத்தியில் சகோதர மோதலை தூண்டி விட்டு வருகின்றார்கள். பழிக்குப்பழி, இரத்தத்திற்கு இரத்தம் என்று மனித உயிர்களை குருதியில் சரிப்பதற்கு சதித்திட்டங்கள் தீட்டப்பட்டு வருகின்றன. நடந்து கொண்டிருக்கும் உயிர்ப்பலிகள் நெஞ்சில் நெருப்பபை சுமக்கும் வலியை எமக்கு தந்து கொண்டிருக்கின்றன.
ஆழப்போவது யார் என்பதல்ல பிரச்சினை. வாழப்போவது யார் என்பதுதான் பிரதானம். அடுத்தவன் ஆழக்கூடாது, அடுத்தவன் அரசியல் அதிகாரத்திற்கு வந்து விடக்கூடாது என்ற சுயலாப அரசியல்க்கணக்குத்தான் எமது அரசியலுரிமை பிரச்சினை தீராப்பிரச்சினையாக நீடித்து வந்திருப்பதற்கு பிரதான காரணம்.
தாம் மட்டுமே ஆழ வேண்டும் என்ற தனித்தலைமை வெறியும், அழிவு யுத்தத்தின் மூலம் அதிகாரங்களை கைப்பற்றி விடலாம் என்ற புலித்தலைமையின் கனவுலக கற்பனையும்தான் இன்று கிழக்கு மக்களிடையே பகைமையை தூண்டி விட்டுக்கொண்டிருக்கிறது. இது குறித்து கிழக்கு மக்கள் விழிப்புடன் செயலாற்ற முன்வர வேண்டும்.
திட்டமிட்டு பரப்பி விடப்படுகின்ற வதந்திகளை நம்பாதீர்கள்! வதந்திகளை நம்பி வன்முறையில் ஈடுபடாதீர்கள்! சகோதர இன, சமூக மக்களிடையே தூண்டி விடப்படுகின்ற பகைமை உணர்வுகளுக்கு பலியாகி விடாதீர்கள். கிடைத்திருக்கின்ற இந்த அரசியல் அதிகாரத்தை அனுபவிக்கப்போவதும், அதில் நிம்மதியாக வாழப்போவதும் மக்களாகிய நீங்கள்தான். மக்களாகிய உங்களது மகிழ்ச்சிக்கு எதிரான தீய சக்திகள் எதை விரும்புகிறார்களோ அதற்கு நீங்கள் துணையாகிப்போய்விடாதீர்கள்.
மக்களாகிய உங்களது மகிழ்ச்சிக்கு தடையாக இருக்கும் தீய சக்திகள் அரசியல் அதிகாரங்களை நீங்கள் அனுபவிக்க கூடாது என்று திட்டமிட்டு செயலாற்றி வருகின்றார்கள்.
இதை உணர்ந்து கொண்டு, இந்த சதி வலையில் நீங்கள் சிக்கி விடாமல் சுயமாக சிந்திக்க வேண்டும். இன்று கிடைத்திருக்கும் இந்த அரிய சந்தர்ப்பத்தினை சரிவரப்பயன்படுத்த முன்வர வேண்டும்.
இதே வேளையில் கிழக்கு மாகாண முதலமைச்சர் அவர்களும், முஸ்லிம் சகோதரர்களான கிழக்கு மாகாணசபை அமைச்சர்களும், மற்றும் உறுப்பினர்களும் இது குறித்த விழிப்புணர்வுகளை கிழக்கு மாகாண மக்களிடையே இன்னமும் அதிகமாக உருவாக்க உழைப்பார்கள் என நான் நம்புகிறேன்.
வேற்றுமைக்குள் ஒற்றுமை வேண்டும்! இது ஒரு இன சமூக மக்களின் வலி! இந்த வலி தீர வேண்டும்! வலி தீரும் சந்தர்ப்பத்தில் பழிக்கு பழி என்ற சதித்திட்டங்களுக்குள் மூழ்கி விடாமல் விழிப்புடன் செயலாற்ற முன்வர வேண்டும் என அனைத்து இன சமூக மக்களையும், அனைத்து அரசியல் சக்திகளையும் தயவன்புடன் கேட்கின்றேன்.
இது ஒரு மனிதாபிமான வேண்டுகொள்! தயவு செய்து ஏற்றுக்கொள்ளுங்கள்!
தோழர் டக்ளஸ் தேவானந்தா
அமைச்சர், செயலாளர் நாயகம்
ஈழ மக்கள் ஐனநாயக கட்சி ஈ.பி.டி.பி.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment