Sunday, June 8, 2008

புலிகளுக்கு வாக்கிடாக்கி

விடுதலைப்புலிகளுக்கு அனுப்பு வதற்காக சென்னை பர்மா பஜாரில் இருந்து 44 வாக்கி - டாக்கிகள் வாங்கப்பட்டதாக போலீசில் சிக்கிய புலிகளின் முகவர்கள் இருவர் தெரிவித்தனர். இவர்கள் இதுவரை என்னென்ன பொருட்களை புலிகளுக்கு வாங்கி அனுப்பியுள்ளனர் என்ற விவரத்தையும் போலீஸ் விசாரணையில் அவர்கள் கூறினர்.

கடந்த மாதம் 18-ந் தேதி இலங்கை பசலையைச் சேர்ந்த ஜெயராஜ் என்ற பி.விஜி, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பத்மராசா என்ற டி. சின்னவன் ஆகிய இருவரும் ராமேஸ்வரம் கடற்கரை பகுதிக்கு 44 வாக்கி-டாக்கிகளை கடத்திச் சென்றபோது மதுரையில் கியூ பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.

அந்த வாகனத்தை ஓட்டிச்சென்ற எஸ். செந்தில், வாக்கி -டாக்கிகளை வாங்க உதவிய ஆட்டோ கண்ணன் ஆகியோரும் கைதானார்கள். விடுதலைப்புலிகளின் முகவர்கள் இருவரும் ஆட்டோ கண்ணன் மூலம் தூத்துக்குடியைச் சேர்ந்த என். சேவியர் என்ற இறக்குமதியாளரிடம் அறிமுகம் ஆனார்கள். இருவரும் சேவியரிடம் தங்களுக்கு அதிக எண்ணிக்கையில் வாக்கி-டாக்கி தேவைப்படு வதாகவும், முதலில் 50 செட்டுகளுக்கு ஆர்டர் தருவதாகவும், இதில் தங்களுக்கு திருப்தி ஏற்படும் பட்சத்தில் மேலும் ஆர்டர்கள் வழங்கப்படும் என்றும் ஆசை காட்டினார்கள். ஆனால் 44 வாக்கி -டாக்கிகள் மட்டுமே அவர்களால் பெற முடிந்தது.

ஜப்பானில் தயாரிக்கப்பட்ட இவை ஒவ்வொன்றின் விலை 8,000 ரூபாயில் இருந்து 12,000 ரூபாய் வரைதான் ஆகிறது. பெரும்பாலும் தனியார் செக்யூரிட்டி அமைப்புகள், கட்டுமான நிறுவனங்கள், திரையரங்குகள், கேளிக்கை பூங்காக்கள் ஆகியவற்றில் இவை பயன்படக்கூடியவை. சிங்கப்பூர், மலேசியா, மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து இவை இறக்குமதி செய்யப்படுகின்றன.

இந்த வாக்கி-டாக்கி மூலம் குறுகிய தூரத்தில் உள்ளவர்களுடன் மட்டுமே தொடர்புகொள்ள முடியும். 30 கி.மீ. தொலைவிற்கும் உள்ள ஒருவருடன் மட்டுமே பேச முடியும் என்று கூறப்படுகிறது. பிடிபட்ட விஜி மற்றும் சின்னவனிடம் நடத்திய விசாரணையில், கடந்த 6 மாதங்களாக புலிகளுக்கு தேவையான பலவகைப் பட்ட பொருட்களை அவர்கள் கடத்தி வந்திருப்பது தெரியவந்துள்ளது. இதற்கு முன்பு, இருக்குமிடத்தை துல்லியமாக காட்டக்கூடிய குளோபல் பொசிஷனிங் சிஸ்டம் என்ற கருவிகள் ஐம்பதை அனுப்பி வைத்தனர்.

ஆனால் அவை கடலில் மூழ்கிவிட்டன. அதே சமயம் புலிகளுக்கு அனுப்பிய 250 லிட்டர் ரெசின் பத்திரமாக போய் சேர்ந்ததாக அவர்கள் குறிப்பிட்டனர். இவை தவிர 15 ஆயிரம் டெட்ட னேட்டர்களையும் புலிகளுக்கு இவர்கள் அனுப்பியிருப்பதும் விசாரணையில் தெரியவந்தது. இவர்களிடம் இருந்து பொருட்களை பெற்றுச்செல்ல விடுதலைப்புலிகள் ராமேஸ்வரத்திற்கு வருவது வழக்கம் என்பதும் விசாரணையில் தெரிந்தது.

No comments: