கும்மிடிப்பூண்டி அருகே சிப்காட் பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த துப்பாக்கி தோட்டாக்கள் வெடித்ததில் இலங்கை அகதிகள் முகாமைச் சேர்ந்த 2 பேர் படுகாயமடைந்தனர்.
இதையடுத்து போலீசார் நடத்திய சோதனையில் அப்பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 40 கிலோ துப்பாக்கி தோட்டாக்கள் கண்டுபிடிக்கப்பட்டு, பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இந்த தோட்டாக்கள் அகதிகள் முகாமில் உள்ளவர்களால் விடுதலைப் புலிகளுக்கு சப்ளை செய்வதற்காக பதுக்கி வைக்கப்பட்டதா என்பது குறித்து போலீசார் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.
கும்மிடிப்பூண்டியை அடுத்த புதுக்கும்மிடிப்பூண்டி சிப்காட் வளாகத்தில் பழைய இரும்பு பொருட் களை உருக்கும் தொழிற்சாலைகள் உள்ளன.
இந்த தொழிற்சாலைகள் வெளிநாடு களில் இருந்து இரும்புக் கழிவுகளை கண்டெய்னர்கள் மூலம் கப்பல் வழியாக இறக்குமதி செய்து அவற்றை உருக்கி இரும்பை பிரித்தெடுக்கும் வேலையில் ஈடுபட்டு வருகின்றன.
இவ்வாறு கண்டெய்னர்கள் மூலம் வரவழைக்கப்பட்ட இரும்பு கழிவுகளை சிப்காட் வளாகத்தில் உள்ள வீட்டுவசதி வாரியத்திற்கு சொந்தமான இடத்தில் இருக்கும் ஒரு பாழடைந்த கிணற்றுக்கு அருகே குவித்து வைத்துள்ளனர்.
சிப்காட் வளாகத்திற்கு ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு கும்மிடிப்பூண்டி இலங்கை தமிழர்கள் அகதி முகாம் உள்ளது. அந்த முகாமில் உள்ள வாலிபர்கள் பலர் இந்த தொழிற்சாலைகளில் வேலை பார்த்து வருவதாக கூறப்படுகிறது.
அகதி முகாமைச் சேர்ந்த வாலிபர்கள், பாழடைந்த கிணற்றில் குதித்து குளிப்பது வழக்கம்
என்று கூறப்படுகிறது. இதே போல நேற்று மாலையும் அகதி முகாமைச் சேர்ந்த 7 பேர் கிணற்றுக்கு குளிக்க வந்திருக்கிறார்கள்.
அதில் யோகேந்திரன் என்ற வாலிபர் சிகரெட்டை பற்ற வைத்துவிட்டு தீக்குச்சியை ஓரமாக எரிந்ததாக கூறப்படுகிறது. அந்த தீக்குச்சியில் இருந்த தீப்பிடித்து பலத்த சத்தத்துடன் திடீரென ஏதோ ஒரு பொருள் வெடித்து சிதறியது. இதில் குளிப்பதற்காக நின்று கொண்டிருந்த சிரில் என்பவரின் மகன் ஜெய்சன் குரூஸ் (வயது 15), தர்மலிங்கம் என்பவரின் மகன் நகுலேஸ்வரன் (வயது 22) ஆகியோர் படுகாயமடைந்தனர்.
வெடித்து சிதறிய பொருளில் இருந்து கிளம்பிய இரும்பு துகள்கள் ஜெய்சன் குரூசின் வயிற்றில் பாய்ந்ததாகவும், நகுலேஸ்வரனின் இடது தோளில் பாய்ந்து பலத்த காயம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்த இருவரும் படுகாயங்களுடன் சென்னை அரசு பொது மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர்.
இதனிடையே இந்த வெடி விபத்து சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் திருவள்ளூர் எஸ்.பி. செந்தாமரை கண்ணன், கும்மிடிப்பூண்டி டி.எஸ்.பி. நவீன் சந்திரா, பொன்னேரி டி.எஸ்.பி. பாலகிருஷ்ணன், சிப்காட் வளாக போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஆய்வு நடத்தினார்கள்.
அப்போது கிணற்றை சுற்றி மூட்டைகள் புதைத்து வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதனையடுத்து அந்த மூட்டைகளை தோண்டி எடுத்து பார்த்ததில், ஏராளமான துப்பாக்கி தோட்டாக்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
ஏ.கே. 47, நவீன 3.3 ரக பிஸ்டல், ரீவால்வர் ஆகிய துப்பாக்கிகளுக்கு சேரக்கூடிய தோட்டாக்கள் அவை என்பது தெரியவந்தது.
இந்த தோட்டாக்களின் மொத்த எடை 40 கிலோவாகும். இவை அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டு சோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
கிணற்றுக்கு வெளியே புதைத்து வைக்கப்பட்ட தோட்டாக்கள் கண்டு பிடிக்கப்பட்டதை அடுத்து கிணற்றுக் குள்ளும் தோட்டாக்கள் அடங்கிய மூட்டைகள் போடப்பட்டுள்ளனவா என்று கண்டுபிடிக்க போலீசார் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
அந்த கிணற்றில் தற்போது 7 அடி அளவுக்கு தண்ணீர் உள்ளதால் அந்த தண்ணீரை இறைத்து அதில் வெடிபொருட்கள் இருக்கின்றனவா என்பதை கண்டுபிடிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.
இந்த தோட்டாக்கள் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட இரும்புக்கழிவுகளில் சேர்ந்து வந்ததா, இதை தெரிந்ததும் அவை பதுக்கி வைக்கப்பட்டனவா என்று தொழிற்சாலைகளின் உரிமை யாளர்களிடம் விசாரணை நடத்த முடிவு செய்திருப்பதாக டிஐஜி மாசானமுத்து தெரிவித்துள்ளார்.
மேலும் இலங்கை அகதிகள் முகாமில் உள்ளவர்களால் இந்த தோட்டாக்கள் விடுதலைப்புலி களுக்கு சப்ளை செய்வதற்காக பதுக்கி வைக்கப்பட்டதா என்ற கோணத்திலும் விசாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், இதற்காக முகாமில் உள்ள 3670 பேரிடமும் விசாரணை நடத்தப்படும் என்றும் அவர் கூறினார்.
இதற்கிடையே இந்த சம்பவம் குறித்து ஆர்டிஓ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். இதையடுத்து பொன்னேரி ஆர்டிஓ சங்கீதா விசாரணையை துவக்கி இருக்கிறார்.
சிப்காட் வளாகத்தில் பெரும் குவியலாக துப்பாக்கி தோட்டாக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ள சம்பவம் கும்மிடிப்பூண்டி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Sunday, June 8, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment