Sunday, June 15, 2008

தலைகள் இரண்டும் தடுமாறும் தரம் கெட்ட அரசியல் நிலை

ஜனாதிபதியினதும், பிரதமரினதும் பேச்சில் இருந்து சமாதானம் தொடர்பான நிரந்தர கொள்கை எதுவும் அவர்களிடம் இல்லை எனபதை தெளிவாக அறிந்து கொள்ளக்கூடியதாக இருப்பதாக ஐ.தே. கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க பகிரங்கமாக தெரிவித்துள்ளார். தேசிய பாதுகாப்பு இன்று பெரும் அச்சுறுத்தலுக்கு இலக்காகி உள்ளது. வடக்கு, கிழக்கு பகுதிக்கு மாத்திரம் வரையறுக்கப்பட்டிருந்த யுத்தம் இன்று அகில இலங்கைக்கும் பரவி உள்ளது. யுத்தத்திற்கு எந்த விதத்திலும் தொடர்பு இல்லாத தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். யுத்த பீதி ஒரு புறம், அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு மறுபக்கம், நாட்டு மக்கள் இந்த இரண்டிலும் சிக்கி தவிக்கிறார்கள். கௌரவமான அரசியல் தீர்வு ஒன்று பெற்றுக்கொடுக்கப்படும் என்று மஹிந்த சிந்தனையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அந்தக் கொள்கை இன்று காற்றோடு கலந்து காற்றில் பறக்க விடப்பட்டது. மற்றும் யுத்தம், ஆயுத இறக்குமதி, ஊழல் மோசடி ஆகியவற்றிற்கே இன்று முதலிடம் வழங்கப்பட்டுள்ளது. பேச்சுவார்த்தை, சமாதானம் என்ற நிகழ்ச்சி நிரலுக்கு இடமே இல்லாமல் போய்விட்டது. மக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி விட்டது. எந்த நேரத்தில் என்ன நடக்கும் என்ற பீதியிலேயே நாட்டு மக்கள் வாழவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அரசாங்கம் இன்று அதுகுறித்தான சிந்தனை இல்லாமல் செயற்படுகிறது. இதேசமயம் ஆயுதங்களை கீழே வைத்தால் மட்டுமே புலிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என ஜனாதிபதி லண்டனில் கூவுகின்றார். புலிகளுடன் பேச்சுவார்த்தை என்ற வார்த்தைக்கே இடமில்லை. அவர்கள் பூண்டோடு ஒழித்துக்கட்டப்படுவார்கள் என பிரதமர் கங்கனம் கட்டி நிற்கின்றார். என்றால் தலமையே குழம்பிய பிரச்சாரமாக இருக்கின்றது.

No comments: