Thursday, July 31, 2008

விசாப்பெற ஆங்கிலமொழிப் பரீட்சை திட்டத்தை கைவிட்டது பிரிட்டன்

தமது நாட்டில் குடியேற விரும்புவோர் ஆங்கிலமொழிப் பரீட்சையில் சித்தியடைய வேண்டுமெனவும் அதன் பின்னரே விசா வழங்கப்படுமெனவும் அறிவித்திருந்த திட்டத்தை இப்போது பிரிட்டன் கைவிட்டுள்ளது.
அதற்குப் பதிலாக பிரிட்டனுக்கு அவர்கள் வருகைதந்த பின் ஆங்கிலத்தை கற்றுக்கொள்வதற்கான உடன்படிக்கையொன்றில் கைச்சாத்திட வேண்டுமென கோரப்படுவார்களெனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

அத்துடன், திருமண விசா பெற்று பிரிட்டனுக்குள் பிரவேசிப்பவர்கள் 21 வயதை பூர்த்தி செய்திருக்கவேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

திருமணம் செய்யும் நோக்கத்துடன் வெளிநாட்டுக்கு செல்லும் பிரிட்டிஷ் பிரஜை பிரிட்டனை விட்டு செல்வதற்கு முன்னர் அதனை அறிவிக்க வேண்டும் என்று புதிய ஒழுங்கு விதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வருட இறுதிப் பகுதியில் இது அமுலுக்கு வருமென எதிர்பார்க்கப்படுகிறது.

வலுக்கட்டாயமான திருமணங்களை தடுக்க இப்புதிய சட்ட விதிகள் உதவுமென பிரிட்டிஷ் அரசாங்கம் எதிர்பார்க்கிறது. 18 21 வயதிற்கு இடைப்பட்ட பராயத்தவரே இந்தப் பலவந்த திருமணங்களால் பாதிக்கப்படுகின்றனர். பலவந்தத் திருமணங்களால் பாதிக்கப்பட்டோர் உடல், உளரீதியாக பலகாலம் துன்பப்பட வழிவகுப்பதாகவும் இதற்கு சமூகத்தில் இடமளிக்கப்படாதெனவும் பிரிட்டிஷ் உள்துறை அமைச்சர் ஜாக்குவி ஸ்மித் கூறியுள்ளார்.

இதனடிப்படையிலேயே விசாவுக்கான வயதெல்லையை அதிகரித்தல், திருமணத்திற்காக வருகைதருவோரின் விண்ணப்பங்களை கடுமையாக பரிசோதித்தல், ஆங்கிலம் கற்றுக்கொள்ள வலியுறுத்தல் போன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம் என்றும் அவர் கூறியுள்ளார்.

No comments: