விடுதலைப்புலிகளுடன் சமாதானப் பேச்சுவார்த்தைக்கு அரசாங்கம் தயாராக இருப்பதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 
இந்தியாவுக்கு திடீர் விஜயமொன்றை மேற்கொண்டிருக்கும் ஜனாதிபதி ராஜபக்ஷ நேற்றுமுன்தினம் பெங்களூருக்கு சென்றார். அங்கிருந்து இந்திய விமானப் படையின் விமானத்தில் ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் திருப்பதிக்கு சமீபமாக இருக்கும் ரெணிகுண்டா விமானநிலையத்திற்கு வருகைதந்து அங்கிருந்து காரில் திருப்பதிக்குச் சென்றார். 
அங்கு பத்மாவதி விருந்தினர் மாளிகையில் தங்கிய அவர், வெள்ளி இரவு வெங்கடாஜலபதியை வழிபட்டார். இலங்கையில் அமைதி திரும்ப அவர் சிறப்பு வழிபாட்டை நடத்தினார். ராஜபக்ஷவுடன் 10 பேர் கொண்ட அதிகாரிகள் குழுவும் திருப்பதி வந்துள்ளது. ராஜபக்ஷவின் இந்தியப் பயணம் மிகவும் ரகசியமாக வைக்கப்பட்டிருந்தது. அவருக்கு பலத்த பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது. 
வழிபாட்டுக்குப் பின்னர் செய்தியாளர்கள் ராஜபக்ஷவைச் சந்தித்தனர். அப்போது அவர்களிடம் ராஜபக்ஷ பேசுகையில், அமைதிப் பேச்சுக்கு இலங்கை அரசு தயாராக உள்ளது. ஆனால், விடுதலைப்புலிகள் முதலில் ஆயுதங்களைக் கீழே போடவேண்டும். 
நாட்டில் அமைதி திரும்ப விடுதலைப்புலிகளுடன் பேச நாங்கள் எப்போதும் தயார்தான். தீர்வு அவர்கள் கையில்தான் உள்ளது. இதுவரை இலங்கையில் நடந்த சண்டைச் சம்பவங்களில் 25 ஆயிரம் அப்பாவி உயிர்கள் பலியாகியுள்ளன. இதற்கு முடிவு வரவேண்டும் என்றால் விடுதலைப்புலிகள்தான் முன்வர வேண்டும். 
கடந்த இருபது ஆண்டுகளாக இனப்போரால் இலங்கையின் அமைதி பாதிக்கப்பட்டுள்ளது. வன்முறையை நிறுத்த அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. விடுதலைப்புலிகளுக்கு உலகில் உள்ள எந்த நாடும் ஆதரவு தராது. எனவே இந்தியா விடுதலைப்புலிகளுக்கு உதவி செய்யும் என நான் நினைக்கவில்லை. 
இராமேஸ்வரம் மீனவர்களுக்கு இலங்கை அரசு எந்தத் தொந்தரவையும் தரவில்லை. இருப்பினும், இலங்கை அரசின் பெயரைக் கெடுக்கும் நோக்கில் மீனவர்களைத் தாக்குவது விடுதலைப்புலிகளாக இருக்கக்கூடும் என்று நான் கருதுகிறேன். விடுதலைப்புலிகள் பிரச்சினை எப்போது தீரும் என்ற கேள்விக்கு இப்போது பதிலளிப்பது கடினம். இருப்பினும், விடுதலைப்புலிகளின் நடவடிக்கையைத் தடுக்க இலங்கை அரசு அனைத்து நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருகிறது. 
சார்க் அமைப்பின் மாநாடுகளில் விடுதலைப்புலிகள் பிரச்சினையை இலங்கை அரசு எழுப்பி வந்திருக்கிறது. கொழும்பில் நடைபெறவுள்ள 15ஆவது சார்க் மாநாட்டிலும் இப்பிரச்சினையை எழுப்புவோம் என்று தெரிவித்தார்.
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment