விடுதலைப் புலிகளின் பிரதேசமாகிய கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் செயற்பட்டு வந்த முக்கிய தொலைபேசிகள் யாவும் செயலிழந்துள்ளதாக வன்னித் தகவல்கள் தெரிவித்துள்ளன. இப்பிரதேசத்தில் உள்ள விடுதலைப் புலிகளின் முக்கிய அலுவலகங்களுக்கும், அரச செயலகங்களுக்கும், முக்கிய வைத்தியசாலைகளுக்கும், மற்றும் முக்கிய அரச திணைக்களங்களுக்கும் தொலைபேசி இணைப்புக்கள் வழங்கப்பட்டிருந்தன.
இந்தத் தொலைபேசி இணைப்புக்கள் கடந்த ஒரு வார காலத்திற்கும் மேலாக சீராக செயற்படாமல் இருந்து வந்ததாகவும் பின்னர் நேற்று முதல் இவைகள் முற்றாக செயலிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது, சார்க் மாநாடு கொழும்பில் நடைபெறுகின்ற இந்த வேளையில் உச்ச பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருக்கும் இந்தச் சந்தர்ப்பத்தில் பாதுகாப்பு காரணங்களை முன்னிட்டே இந்தத் தொலைபேசிகள் துண்டிக்கப்பட்டிருக்கின்றனவா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.
வன்னிப்பிரதேசத்தில் முழுமையான போர்ச் சூழல் நிலவுகின்ற ஒரு நெருக்கடியான வேளையில், இந்தத் தொலைபேசிகள் துண்டிக்கப்பட்டு, வன்னிப் பிரதேசம் நாட்டின ஏனைய பிரதேசங்களில் இருந்து முழுமையாகத் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால், பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்துள்ள ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கான அவசர நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்வது, அங்கு அவசரமாகத் தேவைப்படுகின்ற அத்தியாவசிய தேவைகள் குறித்து, அங்குள்ள முக்கிய அரச அதிகாரிகள் அரசாங்கத்தின் மேல் மட்டத்தினருடனும், பாதுகாப்புத்துறை உயரதிகாரிகளுடனும் அவசரமானதும் முக்கியமானதுமான தொடர்புகளை மேற்கொள்ளும் செயற்பாடுகளை மேற்கொள்வது மற்றும் நோயாளர்களை மேல் சிகிச்சைக்காக வவுனியாவுக்கு அனுப்பி வைப்பது தொடர்பில் வைத்திய அதிகாரிகள் வவுனியா மற்றும் பிரதேசங்களுடன் தொடர்புகளை மேற்கொள்வது உட்பட பல நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது,
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment