Monday, August 11, 2008

வன்னி களமுனைகளில் இடம் பெற்ற மோதல்களில் 28 புலிகள் கொல்லப்பட்டுள்ளதாகக் கூறுகிறது இராணுவம்.

வடக்கே விடுதலைப் புலிகளுக்கு எதிராகத் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் இராணுவ நடவடிக்கைகளில், வன்னிக் களமுனைகளிலும், யாழ்ப்பாணத்தில் கிளாலி களமுனைகளிலும் சனியன்று இராணுவத்தினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் இடம்பெற்ற மோதல்களில் குறைந்தது 28 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டிருப்பதாகத் தேசிய பாதுகாப்புக்கான ஊடகத் தகவல் மையம் தெரிவித்திருக்கின்றது.

வவுனியா பாலமோட்டை முன்னரங்க பகுதிகளிலும், வெலிஓயா பகுதியிலும் இராணுவத்தினர் விடுதலைப் புலிகள் மீது நேற்று நடத்திய தாக்குதல்களில் 12 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டுள்ளதாக இராணுவம் விபரம் வெளியிட்டுள்ளது. பாலமோட்டை பகுதியில் இடம்பெற்ற சண்டைகளின் பின்னர் இராணுவத்தினர் மேற்கொண்ட தேடுதலில் 2 விடுதலைப் புலிகளின் சடலங்களும் ஆயுதத் தளபாடங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாகத் தேசிய பாதுகாப்புக்கான ஊடகத் தகவல் மையம் கூறியிருக்கின்றது.

யாழ்ப்பாணம் கிளாலி பகுதியில் சனிக்கிழமை அதிகாலை 4 மணியளவில் விடுதலைப் புலிகளின் நிலைகள் மீது இராணுவத்தினர் நடத்திய திடீர் தாக்குதல் ஒன்றில் 15 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டுள்ளதாகப் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்திருக்கின்றது.

முகமாலை பகுதியில் இடம்பெற்ற மற்றுமொரு தாக்குதல் சம்பவத்தில் விடுதலைப்புலி உறுப்பினர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதாகவும் இராணுவம் தெரிவித்திருக்கின்றது.

ஆனால் விடுதலைப் புலிகள் தரப்பு தகவல்களோ, வவுனியா பாலமோட்டை, குஞ்சுக்குளம், நவ்வி ஆகிய பகுதிகளில் இருந்து மும்முனைகளில் முன்னேறுவதற்கு முயன்ற இராணுவத்தினரின் முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கின்றன. இந்த மோதல்களில் 11 இராணுவத்தினர் கொல்லப்பட்டுள்ளதாகவும், கடந்த வெள்ளிக்கிழமை இந்தப் பகுதியில் இடம்பெற்ற மோதலில் 4 இராணுவத்தினர் கொல்லப்பட்டுள்ளதாகவும் விடுதலைப் புலிகள் தெரிவித்திருக்கின்றனர்.

No comments: