Sunday, August 3, 2008

இந்தியப் பிரதமருக்கு கொழும்பில் ஏற்பட்ட "அதிர்ச்சி" சம்பவம்

சிறிலங்காவின் தலைநகர் கொழும்புக்கு சார்க் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக சென்றிருந்த இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு அங்கு அதிர்ச்சி சம்பவம் ஒன்று இடம்பெற்றதாக கொழும்புச் செய்திகள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பாக தெரியவருவதாவது:-

சார்க் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் கடந்த வெள்ளிக்கிழமை கொழும்புக்கு சென்றிருந்தார்.

கட்டுநாயக்க வானூர்தி நிலையத்தை சென்றடைந்த அவர், சிறப்பு உலங்குவானூர்தி மூலம் அங்கிருந்து கொழும்புக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

அங்கிருந்து உச்ச பாதுகாப்பு கொண்ட வாகன அணி மூலம் சிறிலங்கா அரசு தலைவர் அலுவலகத்துக்கு அழைத்து செல்லப்பட்டார்.

முன்னும் பின்னும் வாகனங்கள் பாதுகாப்பு வழங்க, இந்தியப் பிரதமரின் வாகனத்தை கபில ஜெயசேகர என்பவர் ஓட்டிச்சென்றார்.

சிறிலங்கா அரச தலைவர் அலுவலகத்தில் இந்தியப் பிரதமரை சேர்ப்பித்தவுடன், அவரை அரச தலைவர் மகிந்த ராஜபக்ச வரவேற்று உள்ளே அழைத்துச் சென்றார்.

இருநாட்டு தலைவர்களுக்கு இடையிலான பேச்சுக்கள் நடைபெற்றன. சந்திப்பை நிறைவு செய்துகொண்டு வெளியே வந்து தனது வானத்தில் ஏறினார் இந்தியப் பிரதமர். ஆனால், அவரது வாகனத்தை வரும்போது ஓட்டிவந்த கபில ஜெயசேகரவை காணவில்லை. உடனே அங்கு பதற்றம் ஏற்பட்டது.

உடனே, வரும்போது பிரதமரின் பாதுகாப்பு வாகன அணியில் வந்த இந்திய பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவர், பிரதமரின் வாகனத்தை ஓட்டுவதற்கு ஒழுங்கு செய்யப்பட்டார். பதற்றம் நீங்கி, வாகனங்கள் ஒன்றன் பின் ஒன்றாக மெல்ல மெல்ல நகரத் தொடங்கின.

அப்போது, எங்கிருந்தோ ஓடிவந்த - வரும்போது இந்தியப் பிரதமரின் வாகனத்தை ஓட்டிவந்த கபில ஜெயசேகர - வாகன அணி புறப்பட்டுவதைக் கண்டு பதற்றமடைந்து, இந்தியப் பிரதமர் பயணம் செய்த வாகனத்தை கலைத்துச் சென்று, அதன் பின் ஜன்னல்களை தட்டி நிறுத்தச் சொன்னார்.

இதனை அவதானித்த பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் அவரை ஓடிச்சென்று பிடித்துவந்து நிலைமையை எடுத்துக்கூறி, பிரதமரின் வாகன அணி தொடர்ந்து பயணம் செய்ய ஒழுங்கு செய்தனர்.

இந்த சம்பவத்தை கேள்வியுற்ற சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச, குறிப்பிட்ட வாகன ஓட்டுனர் கபில ஜெயசேகரவை நேரடியாக அழைத்து, சம்பவம் தொடர்பாக விளக்கம் கோரியதுடன் இனிமேல் பாதுகாப்பு விடயத்தில் கவனமாக இருக்கும்படி எச்சரித்தும் அனுப்பியுள்ளார்.

No comments: