Wednesday, August 6, 2008

எதிர்காலத்தில் பிரபாகரனுக்கு என்ன நடக்கும் என்பதல்ல விடயம்; எனது நேசத்திற்குரிய போராளிகளின் நிலைமை என்னவாகும் என்பதுவே எனது கவலை!! –கருணா அம்மான்

(அதிரடிக்கான சிறப்புப் பேட்டி)
அதிரடி:- வணக்கம்! கடந்த வாரங்களில் மட்டக்களப்பில் உள்ள அரச அதிகாரிகள் மற்றும் சகல மட்டத்தினரையும் சந்தித்து கலந்துரையாடி இருந்தீர்கள். அவற்றின் நோக்கம் என்னவாக இருந்தது? சந்திப்புக்களில் ஏதாவது முன்னேற்றம் கண்டு கொண்டீர்களா?

கருணாஅம்மான்:- வணக்கம்!! உங்களுக்கு நன்குதெரியும் நான் கடந்த நெடுங்காலங்களாக மட்டக்களப்பின் நகரப்பகுதிக்கு செல்லாமல் இருந்தது. எனது மட்டுநகர் விஜயத்தின் நோக்கம் மூன்று பிரதான காரணங்களை கொண்டது. முதலாவது கடந்த இரு தேர்தல்களிலும் எனது கட்சியின் வெற்றிக்காக வாக்களித்த மக்களுக்கு நன்றி சொல்ல வேண்டிய எனது கடமையை நிறைவேற்ற வேண்டியமை. துரதிஸ்டவசமாக எல்லா மக்களையும் ஒரே நேரத்தில் சந்திக்க முடியாமையால் அம்மக்களின் பிரதிநிதிகளை அழைத்து அவர்கள் ஊடாக அந்த மக்களுக்கு எனது நன்றியறிதலைத் தெரிவித்து கொண்டேன். இரண்டாவது கட்சியின் கட்டமைப்பை மீள் ஒழுங்குபடுத்த வேண்டியிருந்தது. ஏனெனில் நான் இங்கு இல்லாத வேளைகளில் ஏற்பட்டிருந்த சில சில மாற்றங்கள் பாரிய பின்னடைவுகளை ஏற்படுத்த கூடியதாக இருந்தமையாகும். மூன்றாவதாக எமது போராளிகளின் செயற்பாடுகள் எவ்வாறு காணப்படுகின்றதென்பதை மக்களுடாக அறிந்து கொள்ள வேண்டியது. அதில் மிகவும் முன்னேற்றம் கண்டேன் அங்குள்ள மக்கள் உரிமையுடன் வந்து அவர்கள் அனுபவித்திருந்த இடர் துன்பங்களை வெளிப்படையாக கூறினார்கள். அவர்கள் எனக்கு காலாகாலமாக தெரிந்த மக்கள் நேரடியாக என்னிடம் வந்து அவர்களது துன்பங்களை சொல்லி ஆறதல் அடைவதை கண்ட போது எனது மனமும் ஒருவகை திருப்தி கண்டது.

அதிரடி:- உங்களுடைய அரசியல் எதிர்காலம் எவ்வாறு அமையப் போகின்றது?

கருணாஅம்மான்:- எங்களுடைய அரசியல் எதிர்காலம் என்கின்ற போது நாம் அதற்கான ஓர் திட்டத்தை வகுத்து வைத்துள்ளோம் அதற்கும் அப்பால் அத்திட்டங்களை மையப்படுத்தி பிரதேச மக்களின் ஆலோசனைகளை பெற உள்ளோம். இது விடயமாக எமது சமுதாயத்தில் உள்ள அரச அதிகாரிகள் புத்திஜீவிகள் சகலரையும் சந்தித்து கலந்துரையாடி வருகின்றோம். ரிஎம்விபி என்பது தனி கிழக்கு மாகாணத்திற்கான ஓர் கட்சியல்ல இது தமிழ் மக்கள் வாழுகின்ற இடங்களெல்லாம் ஸ்தாபிக்கப்பட வேண்டிய கட்சியாகும். தற்போது நடந்து முடிந்த இரு தேர்தல்களில் நாம் வெற்றி கண்டு அதனூடாக மட்டக்களப்பு மாநகர சபையையும் கிழக்கு மாகாண சபையையும் கைப்பற்றியுள்ளோம். அத்துடன் எதிர்வரும் பொதுத்தேர்தலில் பங்குபற்றி அதிகூடிய ஆசனங்களை கைப்பற்றும் ஒர் இலக்குடன் அதற்கான வேலைத்திட்டங்களை வகுத்துள்ளோம். மாகாணசபை இயங்கிக் கொண்டிருக்கின்ற அதே தருணத்தில் நாங்கள் மத்திய அரசாங்கத்திற்குள்ளும் நுழைய வேண்டும் அங்கே பாரளுமன்றத்திலும் எமது குரல்கள் ஒலிக்க வேண்டும் அப்போது தான் அது மாகாண சபைக்கு வலுவாக அமைவதுடன் அபிவிருத்தி பணிகளையும் முன்னெடுக்க முடியும்.

அதிரடி:- நடந்து முடிந்த தேர்தல் முடிவுகளில் உங்களுக்கு திருப்தியில்லை என்று கூறியிருக்கின்றீர்கள் மறுபுறத்தில் தேர்தல் குளறுபடிகள் சம்பந்தமாக பரவலான குற்றச்சாட்டுக்கள் நிலவுகின்ற போது எதிர்வரும் தேர்தலில் நீங்கள் வெற்றிகளை பெறுவதற்கு சாத்தியக் கூறுகள் உள்ளனவா?

கருணாஅம்மான்:- நிச்சயமாக இருக்கின்றது. முடிவுகளில் திருப்தியில்லை என நான் கூறுவது யாதெனில் எம்மால் திருகோணமலை மாவட்டத்தில் ஆகக் குறைந்தது ஒர் ஆசனத்தையாவது பெற்றிருக்க முடியும் ஆனால் அங்கு அது கிடைக்கவில்லை. மட்டக்களப்பு மாவட்டத்தை பொறுத்தவரை நாம் ஐந்து ஆசனங்களை பெற்றிருக்க வேண்டும் ஆனால் அங்கு மூன்று ஆசனங்களே பெறப்பட்டுள்ளது. வேட்பாளர் தெரிவு போன்ற விடயங்களில் தவறுகள் நிகழ்ந்திருக்கின்றது. பிரதேசத்தில் செல்வாக்கு செலுத்துகின்ற பொதுநலன் விரும்பிகளான புத்திஜீவிகள் இங்கு வேட்பாளர் பட்டியலில் இணைக்கப் பட்டிருக்கவில்லை. மேலும் அவர்களிடம் இருந்து ஆலோசனைகள் பெறப்பட்டிருக்கவில்லை. எமது உறுப்பினர்களின் அனுபவக் குறைபாடும் நான் அத்தருணத்தில் இங்கு இருக்காமையும் இதற்கான காரணம் எனக் கருதகின்றேன். ஆனால் மறுபுறத்தில் அம்பாறை மாவட்ட போராளிகள் நான் மேலே கூறியவாறு பிரதேசத்தில் உள்ள புத்திஜீவிகளை உள்வாங்கி அவர்களது ஆலோசனை, ஆசீர்வாதங்களுடன் அங்கு கைப்பற்றி இருக்கக்கூடிய மூன்று ஆசனங்களையும் கைப்பற்றி எடுத்துக்காட்டாக திகழ்கின்றனர்.

அதிரடி:- நீங்கள் புலிகளியக்கத்தில் இருந்து வெளியேற முன்பு தங்களது அன்றைய தலைவராக இருந்த பிரபாகரனுக்கு ஓர் மடல் எழுதியிருந்தீர்கள். அதில் பிரபாகரனை தங்களது உயிரிலும் மேலாக நேசிக்கும் அண்ணை என தெரிவித்திருந்ததுடன் உங்களை கிழக்கு பிரதேசத்தில் சுயமாக இயங்க அனுமதியும் கேட்டிருந்தீர்கள். உங்களுடைய அந்த வேண்டுதலுக்கு அவர் சாதகமான பதில் தந்திருந்தால் உங்களது போராட்டம் எவ்வாறு அமைந்திருக்கும்?

கருணாஅம்மான்:- பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுக் கொண்டிருந்த காலகட்டம். அதில் நானும் ஓர் அங்கத்தவனாக பங்கெடுத்திருந்தேன். பேச்சு வார்த்தைகளின் போது அங்கு எமது மக்களுக்கு மிகவும் சாதகமான விடயங்கள் இருந்தது. ஓர் சமஸ்டி அடிப்படையிலான தீர்வுக்கு அது வாய்ப்பாக அமைந்திருந்தது. அத்தீர்வை ஏற்கும் விடயத்தில் நான் அன்ரன் பாலசிங்கம் போன்றோர் ஆர்வமாக இருந்தோம். அதன் மூலம் எம்மக்கள் எய்தி இருக்ககூடிய பலாபலன்களை நாம் பிரபாகரனிடம் எடுத்து கூறியிருந்தோம். ஆனால் அவரது பதில்கள் எமது ஆலோசனைகளுக்கு ஏற்றுக் கொள்வதாக இருந்திருக்கவில்லை. இறுதியாக நான் கலந்து கொண்ட பேச்சு வார்த்தையை முடித்து விட்டு பிரபாகரனிடம் நேரடியாக சென்று எட்ட இருந்த தீர்வின் ஊடாக எமது மக்கள் அனுபவித்திருக்கக் கூடிய சகல விடயங்களையும் எடுத்து கூறியிருந்தேன். பேச்சு வார்த்தைகளின் போது எமது பிரதேசங்களை அபிவிருத்தி செய்வதற்காக உலக வங்கி நேரடியாக எமக்கு நிதி உதவி செய்ய முன்வந்திருந்தது. அதற்கு சிறிலங்கா அரசு தரப்பிலும் ஒப்புதல் அளிக்கப்படடு இருந்தது இவற்றினை காரணங்களாக காட்டி இத்தீர்வினை ஏற்று முதலில் எமது மக்களின் அபிவிருத்தி பணிகளை செய்வோம் என்றும் ஏனைய விடயங்களை படிப்படியாக மேற்கொள்வோம் என்றும் எனது விருப்பத்தினை தெரிவித்திருந்த போது அவர் எனக்கு கூறிய விடயங்களைக் கொண்டு எமது மக்கள் போராட்டத்தை பிரபாகரன் தனது சுயநலனுக்காக உபயோகிக்கின்றார் என்பதை உணர்ந்தவனாக மட்டக்களப்பு திரும்பிய நான் எனது விருப்பு வெறுப்புக்களை கடிதங்கள் மூலமாகவும் தெரியப் படுத்தியிருந்தேன். ஆனால் அவரிடம் இருந்து எந்த பதில்களும் கிடைக்கவில்லை மாறாக யுத்தத்தை தொடங்குவதற்கு தயாராகும்படியும் கிழக்கில் இருந்து இரண்டாயிரம் போரளிகளை அனுப்பி வைக்கும்படியும் கேட்டிருந்தார். அதற்கு நான் இணங்கவில்லை. இணங்காமைக்கு காரணம் எனக்கு விருப்பம் இல்லை என்பதல்ல, இந்த கொடிய யுத்தத்தில் தொடர்ந்தும் எமது இளைஞர் யுவதிகள் மடிவதை மக்கள் விரும்பவில்லை. நாங்கள் பிரபாகரனின் கட்டளையை ஏற்க தயாராக இருந்திருந்தாலும் மக்கள் யுத்தத்திற்கு பங்களிப்பு செய்ய தயாராக இருந்திருக்கவில்லை என்பதை உணர்ந்திருந்தேன். அந்நிலையில் கடந்தகால கசப்பான நினைவுகளான சகோதரப் படுகொலைகளை நினைவுபடுத்தி அவை மீண்டும் ஒருமுறை நிகழ்வதை தடுக்கும் முகமாகவும் அமைப்பு பிளவுபட்டு குருதி சிந்துவதை விரும்பாதவனாகவும் அந்த அமைப்பில் நான் இருந்த காலங்களையும் நினைவில் கொண்டு ஒரே தலைமையின் கீழ் சுயமாக இயங்க அனுமதி கோரியிருந்தேன். அதற்கு சாதகமான பதில் கிடைத்திருந்தால் கிழக்கு மக்கள் சார்பாக தனித்தரப்பாக பேச்சுவார்த்தைகளில் கலந்து கொண்டு கிடைத்திருக்க கூடிய நல்ல விடயங்களை ஏற்று எமது பிரதேசத்தை அபிவிருத்தி செய்வதன் மூலம் வடக்கு மக்களை பிரபாகரனை தீர்வுநோக்கி செல்லுமாறு அழுத்தம் கொடுக்க வைத்திருப்பேன். இதன் விபாPதத்தை விளங்கியதாலேயே எனது விருப்பு வெறுப்புகளுக்கு மாறாக எம்மீது படையெடுத்த பிரபாகரன் எமது போராளிகளை கொன்று குவித்து எமது கைகளில் ஆயதங்களைத் திணித்தார். அதன் விளைவுகளை இப்போது அனுபவித்துக் கொண்டிருக்கின்றார். அவர் ஒர் விவேகம் உள்ள மனிதராக இருந்திருந்தால் எமது நியாயமான கோரிக்கைகளை ஏற்று அவர் இழந்து நிற்கின்ற இத்தனை இழப்புக்களையும் தவிர்த்து இருக்க முடியும்.


அதிரடி:- புலிகளியக்கத்தில் இருந்து விலகி வந்த உங்களை சிறிலங்கா அரசு தமது தேவைகளுக்காக பாவித்து முடிந்தவுடன் கைகழுவி விட்டுள்ளதாக கூறப்படுகின்றது. இது பற்றி நீங்கள் என்ன கூறுகின்றீர்கள்?

கருணாஅம்மான்:- இது விடயத்தில் நாம் அனைவரும் ஒர் தெளிவான குறிக்கோளுடன் இருக்க வேண்டும். எந்த காலகட்டத்திலும் எந்த ஓர் அரசையும் நம்பி இருக்க முடியாது. நம்பி இருக்க வேண்டியது மக்கள் சக்தி ஒன்றையே. அந்த சக்தியுடன் நாம் இருக்கும் போது எந்த அரசாங்கத்தினாலும் எதுவும் செய்ய முடியாது. இதற்கு எமது பிரதேசத்திலேயே நல்லதொரு உதாரணத்தை கூறுகின்றேன். கிழக்கு மாகாண அமைச்சர் கிஸ்புல்லாவை எடுத்துக் கொண்டால் அவருக்கு எந்த அரசியல் கட்சியும் கிடையாது. ஆனால் அவரிடம் உள்ளது அவருடைய வாக்குவங்கி ஒன்றே தான் ஆனால் இன்று அவர் எந்த ஓர் அரசுடனும் பேரம் பேசும் தகுதியுடன் இருக்கின்றார். ஆகவே நாமும் எமது மக்கள் பலத்தை நிருபித்து நிற்கின்ற போது எவரும் எம்மை புறந்தள்ள முடியாது.

அதிரடி:- மாகாண சபைத் தேர்தல் நடைபெற இருந்த தருணத்தில் அரசு உங்களை திட்டமிட்டே நாட்டை விட்டு வெளியேற்றியதாக கூறப்படுவது பற்றி என்ன கூறுகின்றீர்கள்?

கருணாஅம்மான்:- எனது சுய தேவைகளுக்காக சுயமாகவே நான் நாட்டை விட்டு வெளியே போயிருந்தேன். அந்தக் காலகட்டங்களில் ஊடகங்களினூடாக இவ்வாறான செய்திகளை நானும் அறிந்திருந்தேன். அதில் எந்தளவுக்கு உண்மை இருக்கும் என எனக்கு தெரியாது. எனது எதிர்கால அரசியல் நலனை கருத்தில் கொண்டு இது விடயத்தில் மேலதிக தகவல்களைப் பெற்றுக் கொள்ள நான் முனையவில்லை.

அதிரடி:- நடந்து முடிந்த தேர்தல் பெறுபேறுகளில் உங்களுக்கு திருப்தி இல்லை எனவும் அதே தருணத்தில் கிழக்கு மாகாண முதலமைச்சராக உங்களது கட்சி உறுப்பினர் ஒருத்தர் முதலமச்சராக நியமனம் பெற்றுள்ளதையிட்டு மகிழ்ச்சி அடைவதாக ஊடகம் ஒன்றிற்கு தெரிவித்திருந்தீர்கள். முதலமைச்சர் உங்களுடைய கட்சி உறுப்பினர் என்கின்ற காரணத்திற்காக மகிழச்சி அடைவதாக கூறும் நீங்கள் இவ் நியமனம் தொடர்பாக பிரதேச மக்கள் அதிருப்தி அடைந்துள்ளார்கள் என்பதை அறிவீர்களா? அவர்களின் அதிருப்தி பற்றிய உங்கள் கருத்தென்ன?

கருணாஅம்மான்:- மக்கள் அதிருப்தி அடைந்துள்ளார்கள் என்பதை உணரக் கூடியதாக உள்ளது ஆனால் அவர்கள் எந்த காரணங்களுக்காக அதிருப்தி அடைந்துள்ளார்கள் என்பது தெரியவில்லை. அவற்றை கண்டறிந்து அவைகளுக்கு நிவாரணம் தேடுவதற்கான முயற்சிகளில் நான் ஈடுபட்டுள்ளேன்.

அதிரடி:- முதலமைச்சர் நியமனம் விடயத்தில் பிள்ளையானது கல்வித்தகமை பெரும் விமர்சனத்திற்கு உள்ளாகி வருகின்றது. உங்களுடைய கட்சியின் உபதலைவரான பிள்ளையானது தகமைகள் பற்றி ஏதாவது கூற விரும்புகின்றீர்களா?

கருணாஅம்மான்:- என்னைப் பொறுத்தைவரை இதை ஒரு பெரிய விடயமாக பார்க்கவில்லை. கல்வித் தகைமை என்பது எவரும் எப்போதும் வளர்த்துக் கொள்ளலாம். எமது இளைஞர்களை பொறுத்த வரை கல்வியை தொடர்வதற்கு பல தடைகள் இருந்திருக்கின்றது. அதற்கு எமது போராட்டமும் ஓர் முக்கிய காரணம். விடுதலைக்காக போராட புறப்பட்டவர்கள் அனைவரும் தமது பாடசாலைக் கல்வியை இடைநிறுத்தியே போராட்டத்தில் இணைந்திருந்தார்கள். ஆனால் அங்கு அவர்களுக்கு படிப்பதற்கு நிறைய வாய்ப்பு இருந்தது அதை உபயோகித்து கொண்டவர்கள் பலர் உள்ளனர். இவ்விடத்தில் சிறந்த உதாரணமாக இந்தியாவின் பிரபல அரசியல்வாதி காமராஜர் அவர்களை எடுத்துக் கொள்வோம் அவர் படிக்காத மேதை என போற்றப்படுகின்றார். அவர் அரசியலுக்கு வரும்போது எதையும் அறிந்திருக்க வில்லை என்றும் நாளடைவில் அவர் தமிழில் முதிர்ச்சியும் ஆங்கிலத்தில் தேர்ச்சியும் பெற்று ஓர் அரசியல் விற்பன்னராக திகழ்ந்து இந்திய தலைவராகக் கூட ஆட்சி செய்ததை அவரது வரலாற்று நூல்களினூடாக காணக் கூடியதாக உள்ளது.

அதிரடி:- இன்று எம் மக்கள் படுகின்ற அவலங்களுக்கு இந்த மாகாணசபை ஊடாக நியாயமான தீர்வுகளை பெற்றுக் கொள்ள வேண்டிய தேவை இருக்கின்ற நிலையில் அச்சபையை நிர்வகிப்பதற்கு மிகவும் நிர்வாக திறனும் அனுபவமும் உள்ள ஓர் நபர் தேவைப்படுகின்றமையால் பிள்ளையான் போன்றவர்கள் தமது தகமைகளை மேம்படுத்தி கொண்டு வந்தால் சிறப்பாக இருக்குமல்லவா?

கருணாஅம்மான்:- இது நடந்து முடிந்துள்ள விடயம். அங்கு சகல தெரிவுகளும் முடிந்து ஓர் நிர்வாகக் கட்டமைப்பும் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அங்கு மாற்றங்கள் கொண்டு வருவதை விட அவர்களது குறை நிறைகளை நிரப்பி அவர்கள் அந்த நிர்வாகத்தை கொண்டு செல்வதற்கு துணைநின்று உழைப்பது தான் உசிதமாக இருக்கும். அந்த வகையில் எதிர்காலத்தில் அங்கு நிலவக்கூடிய குறைநிறைகளை எமது பிரதேசத்தில் உள்ள பொருத்தமானவர்களைக் கொண்டு நிவர்த்தி செய்வதற்கு ஆவன செய்வேன்.

அதிரடி:- கிழக்கு மாகாண முதலமைச்சர் இலங்கையின் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ள போதிலும் இலங்கை இனப்பிரச்சினை விடயத்தில் அதிக கரிசனை கொண்டுள்ள அயல் நாடான இந்தியாவின் பிரதமர் உட்பட உலக அரங்கில் உள்ள அரசியல்வாதிகள் மற்றும் ஐ.நா சபை போன்ற முன்னணி அரச சார்பற்ற நிறுவனங்களின் தலைவர்கள் பிள்ளையானை சந்திப்பதற்கு கூட மறுப்பு தெரிவித்து வருகின்றனர். இதற்கான காரணம் என்னவாக இருக்கும்?

கருணாஅம்மான்:- இது மிகவும் வேதனைக்கு உரிய விடயமாகும். குறிப்பாக இங்கு இருவிடயங்கள் நிகழ்ந்துள்ளது ஒன்று ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் மற்றையது இந்திய பிரதமர். இவ்விடயத்தில் அவர்களுக்கு உங்களது செய்தி ஸ்தாபனத்தின் ஊடாக ஓர் வேண்டுகொளை விட விரும்புகின்றேன். எமது கட்சியை ஓh மாகாணசபை வரம்புக்குள் பார்க்காமல் நாம் இலங்கையில் ஒரு தொகுதி மக்களை தேசிய மட்டத்தில் பிரதிநிதிப் படுத்துகின்றவர்கள் என்பதை கருத்தில் கொண்டு ரிஎம்விபி என்கின்ற எமது அரசியல் கட்சியின் தனித்துவத்தையும் உரிமைகளையும் மதித்து எம்மிடம் ஏதாவது பிழைகள் இருப்பின் அவற்றை சுட்டிக் காட்டி ஒத்துழைக்குமாறு பணிவுடன் வேண்டுகொள் விடுக்கின்றேன்.

அதிரடி:- வடபோர்முனை நிலவரங்கள் எவ்வாறு காணப்படுகின்றது? முல்லைத்தீவு கிளிநொச்சியை இராணுவம் முற்றிலும் கைப்பற்றுவதற்கான சாத்தியக் கூறுகள் எவ்வாறுள்ளது?

கருணாஅம்மான்:- இங்கு ஒர் மும்முனைத் தாக்குதல் தொடுக்கப் பட்டிருக்கின்றது. இதில் நிச்சயமாக படையினர் வெற்றி பெறுவர். காரணம் கடந்த காலங்களில் இருந்த அரசியல் தலைமைகள் அரசியலுக்காக யுத்தம் புரிந்தது போலல்லாமல் இன்றைய முப்படைத்தளபதியும் ஜனாதிபதியுமாகிய மகிந்த ராஜபக்ச அவர்கள் இவ்யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்து அனைத்து மக்களும் சுதந்திரமாக வாழக் கூடிய ஒர் நிலைமையை உருவாக்க இதய சுத்தியுடன் செயல்படுவதை நான் உணர்கின்றேன். அதற்கு பக்கபலமாக பாதுகாப்பு அமைச்சை இயக்கி கொண்டிருக்கும் அதன் செயலர் ஓர் அனுபவம் நிறைந்த இராணுவ அதிகாரி அவருடைய செயல் திட்டங்களை நிறைவேற்றுவதற்கு தகுந்த ஓர் இராணுவத்தளபதி அமைந்துள்ளார். எனவே இவ் நிலைமையை எதிர்கொள்வது புலிகளுக்கு கடினமாக இருக்கும். இங்கு இராணுவத் தளபதி பற்றி நான் கூறியாக வேண்டும் அவரை நான் நேரடியாக பல களமுனைகளில் சந்தித்திருக்கின்றேன் அவர் களநிலைமைகளுக்கு ஏற்ப போர் வியூகங்களை களமுனையிலே மாற்றியமைத்து அதை செயல்படுத்தக் கூடிய வல்லமை படைத்தவர்.

அதிரடி:- அவ்வாறு முல்லைத்தீவு கிளிநொச்சியை இராணுவம் கைப்பற்றப்பட்;டால் உங்களது முன்னைநாள் தலைவர் பிரபாகரனது நிலைமை என்னவாகும்?

கருணாஅம்மான்:- பிரபாகரனுக்கு என்ன நடக்கும் என்பதல்ல விடயம் எனது நேசத்திற்குரிய போராளிகளின் நிலைமை என்னவாகும் என்பதுவே கவலையளிக்கின்றது. மணலாறினூடாக திறக்கப்பட்டிருக்கும் போர்முனை பிரபாகரனது இருப்பை கவ்வக் கூடியது. ஆனால் அம்முனையை தடுப்பதற்காக பிரபாகரன் எந்த விலையும் கொடுப்பார் அந்தவகையில் அங்கு பெருந்தொகையான போராளிகள் குவிக்கப்பட்டு பலிகொடுக்கப்படுவதற்கு சாத்தியங்கள் உண்டு.

அதிரடி:- இப்போர் நடவடிக்கைகளில் உங்களது பங்களிப்பு என்ன?

கருணாஅம்மான்:- ஒன்றுமில்லை என்று கூறுவேன்.

அதிரடி:- (மாறன் கனடா) திரு கருணா அம்மான் அவர்களே தற்போது கிழக்கு மக்களிடையே தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளைப் பற்றி பல்வேறுபட்ட தப்பபிப்பிராயங்கள் நிலவுகின்றன. அதற்கு முக்கிய காரணம் நீங்கள் நாட்டில் இல்லாதபோது உங்கள் அமைப்பினரால் மேற்கொள்ளப்பட்ட அடாவடித்தனங்களாகும். தற்போது மக்களிடையே ஏற்படுத்தப்பட்டுள்ள தப்பபிப்பிராயங்களை நீக்குவதற்கு எந்த மாதிரியான செயற்பாடுகளை மேற்கொள்ளத் திட்டமிட்டு உள்ளீர்கள்?

கருணாஅம்மான்:- இங்கு நடந்திருக்க கூடிய சகல அருவருக்கத்தக்க செயல்களுக்கும் பொதுவாக மனம் வருந்துகின்றேன். இவ்வாறன செயல்களை முடிவுக்கு கொண்டு வருமுகமாக கடந்த இருவாரங்களுக்கு முன்னர் இங்கு நடந்த கொள்ளைச் சம்பவம் ஒன்றுடன் சம்பந்தப்பட்டிருந்த எமது உறுப்பினர்கள் இருவரையும் பிரதேச வாசிகள் இருவரையும் பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளோம் அவர்கள் சட்டத்தின்முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப் படுவார்கள்.

அதிரடி:- (மாறன் -கனடா) கிழக்கு மாகாண அபிவிருத்திக்காகப் பாடுபட்ட பல புத்திஐீவிகள் குறிப்பாக மட்டு அரச அதிபராகப் பணிபுரிந்த திரு. மௌனகுருசாமி மற்றும் கிழக்குப் பல்கலைக் கழகத்தில் பேராசிரியர்களாகக் கடமை புரிந்த கலாநிதி திருச்செல்வம் கலாநிதி கோவிந்தராஐர கலாநிதி யுவி தங்கராஐர மற்றும் கலாநிதி மீனா தருமரெத்தினம் போன்றவர்கள் உங்களையும் கிழக்கையும் ஆதரித்தவர்கள் என்ற காரணத்தினால் புலிகளின் பல்வேறு நெருக்குதல்களுக்கு உள்ளாக்கப்பட்டு நாட்டை விட்டு வெளியேற்றப் பட்டுள்ளார்கள் (திரு. மௌனகுருசாமி கலாநிதி திருச்செல்வம் போன்றோர் புலிகளால் சுடப்பட்டவர்கள் என்பதையும் பல்கலைக்கழக கலாநிதிகள் நால்வரும் புலி ஆதரவு பல்கலைக்கழக நிர்வாகிகளினால் நிரந்தரமாக நீக்கப்பட்டு விட்டார்கள் என்பதையும் தாங்கள் அறிந்திருப்பீர்கள்). மேற்படி புத்திஐீவிகளின் சேவைகளை மீண்டும் பெற்றுக் கொள்வதற்காக ஏதாவது நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளீர்களா?

கருணாஅம்மான்:- உங்களது இந்த வினா மிகவும் முக்கியமான விடயம் நான் விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்து வெளியேறிய போது கிழக்கு புத்திஜீவிகள் மட்டுமல்ல அகில இலங்கையிலுமுள்ள யுத்தத்தை விரும்பாத புத்திஜீவிகள் நேசக்கரம் நீட்டியிருந்தார்கள். அதை ஜீரணிக்க முடியாத பிரபாகரன் அந்த உயரிய மனிதர்களை கொன்றொழிக்கத் தொடங்கினார். அதில் அதிஸ்டவசமாக மௌனகுருசாமி ஐயா இளம் துடிப்பான விரிவுரையாளர் திருச்செல்வம் ஆகியோர் உயிர் பிழைத்தனர். இவாகள் எவரும் என்னிடம் அரசியல் பேசியது கிடையாது எப்போதும் மக்களின் அபிவிருத்தி சம்பந்தமாகவே பேசியிருக்கின்றார்கள். பிரபாகரனது அராஜகம் அவர்களை சொந்த இடங்களை விட்டு ஓட வைத்துள்ளது. ஆனால் அவர்களை மிகவிரைவில் இங்கு கொண்டு வருவதற்கான ஏற்பாடுகளை நான் செய்து கொண்டிருக்கின்றேன். அவை முடிந்தவுடன் அதற்கான வேண்டுகொளை விடுப்பேன்.

அதிரடி:- (இந்திய தமிழன்) அன்புள்ள கருணா அவர்களுக்கு! தற்போது புலிகள் இந்தியாவை விடுத்து மேற்குலகத்திடம் தமிழீழ்த்தின் அங்கிகாரத்திற்கு பேரணி ஆர்பாட்டாம் என்று ஏதோதோ செய்கிறார்கள் ஆனால் மேற்குலத்திடம் இந்தியா முரண்பட்டால் தான் இவ்வாறு நடக்கலாம் இதற்கு சாத்தியாகூறு உள்ளதா? எதிர்காலத்தில் இந்தியாவை எதிர்த்து அதன் எதிர்சக்திகளிடம் புலிகள் தஞ்சம் அடைவார்களா? விரிவாக கூறவும்

கருணாஅம்மான்:- புலிகள் அங்கு நிகழ்த்துகின்ற நிகழ்வுகளினூடாக எந்த ஓர் மாற்றமும் நிகழப் போவதில்லை. அது அங்குள்ள மக்களை ஏமாற்றி பணம் பறிக்கும் விடயம். இவ்விடயத்தில் மேற்குலகும் இந்தியாவும் முரண்படுவதென்பது நடக்காத காரியம். தென்கிழக்காசியாவை பொறுத்தவரை இந்தியாவின் வரம்பைமீறி எந்த வல்லரசும் நுழையாதென்பது யாவரும் அறிந்த விடயம். இந்தியா தமிழ் மக்கள் விடயத்தில் அக்கறை கொண்டுள்ள போதும் புலிகள் விடயத்தில் மிகவும் கடுமையான முடிவுகளுடனேயே உள்ளதென்பது உலகறிந்த விடயம் அந்த நிலையில் இந்தியாவை மீறி எவரும் புலிகள் விடயத்தில் கருணை காட்ட மாட்டார்கள் என்பதை மக்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.

அதிரடி:- இந்தியா புலிகள் விடயத்தில் கடும்போக்காக உள்ளது என்பதை நீங்கள் புலிகளியக்கத்தில் இருக்கும் போதே உணர்ந்திருந்தீர்களா? இல்லை பிரிந்து வந்ததன் பின்னர்தான் உணர்ந்தீர்களா?

கருணாஅம்மான்:- பாரத பிரதமர் அமரர் ராஜீவ்காந்தி அவர்கள் புலிகளால் கொலை செய்யப்பட்டு ஓரிரு மாதங்களில் நான் உணர்ந்த விடயம். அந்த தவறான முடிவு எம்மக்களுக்கு ஏற்படுத்தப் போகின்ற விளைவுகளை நான் பிரபாகரனுக்கு எடுத்துரைத்திருந்தேன். அவர் மக்கள் நலனில் அக்கறை கொண்டிருந்திருந்தால் நடந்த தவறுக்கு மன்னிப்புக் கோரி பொட்டு அம்மான் போன்ற கொலைச் சூத்திரதாரிகளை இந்திய அரசிடம் பாரம் கொடுத்து அவர்களது விசாரணகளுடன் ஒத்துழைத்து இந்தியாவுடனான நட்பை பேணி எம்மக்கள் நலன் சார்ந்திருந்திருக்க முடியும். ஆனால் இன்று அவற்றிற்கெல்லாம் காலம் கடந்து விட்டது அதன் விளைவுகளை பிரபாகரன் சந்தித்தே ஆக வேண்டும்.

அதிரடி:- (குமார் -சென் கிளேயர்) அன்புள்ள கருணா அம்மான், கிழக்கு மாகாணத்தை விட்டு வன்னிப் புலிகள் ஓடிப் போன பிறகும் அங்கு வாழும் மக்களுக்கு உண்மையான சுதந்திரம் கிடைக்க வில்லை என்பது யாவரும் அறிந்த விடயம். அங்குள்ள மக்கள் எப்போதும் பயத்துடனேயே வாழும் நிலைமை காணப்படுகின்றது. ஏன்என்றால் இலங்கை ஆட்சியாளர்கள் மீது தமிழ் மக்களுக்கு நம்பிக்கை இல்லாமையே என நான் நினைக்கின்றேன். ஆகவே இலங்கை ஆட்சியாளர்களுக்கும் தமிழ் மக்களுக்கும் இடையில் நம்பிக்கையை கட்டி எழுப்ப தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளாகிய உங்களிடம் உள்ள திட்டங்கள் என்ன? அவை எவ்வாறான மாற்றங்களை கொண்டு வரும்?

கருணாஅம்மான்:- ஆம் புரிந்துணர்வு இன்மை மிகப்பெரிய பின்னடைவுகளைத் தந்து நிற்கின்றது. இவ்விடயத்தில் மக்களின் அடிமட்டத்திற்கு சென்று அபிவிருத்தி குழுக்களை உருவாக்க இருக்கின்றேன். அக்குழுக்களில் அவ் மக்களுடனேயே வாழுகின்ற அவர்களது பிரதிநிதிகள் அங்கம் வகிப்பர். அவர்கள் அம்மக்களின் அபிலாசைகளை அரச அதிகாரிகள் மற்றும் சம்பந்தப்பட்டவர்களுக்கு நேரடியாக எடுத்துச் சென்று வேலைத்திட்டங்களை ஆரம்பிப்பர். அப்போது அங்கு மக்களுக்கும் அரசுக்கும் இடையில் நிலவுகின்ற இடைவெளி இல்லாமலேயே போகும்.

அதிரடி:- ஏனைய தமிழ் அமைப்புகளுடனான உறவு எவ்வாறு இருக்கின்றது? எதிர்காலத்தில் தமிழ் ஐனநாயக தேசிய கூட்டணியுடன் சேர்ந்து செயல்படுவீர்களா?

கருணாஅம்மான்:- சகல அமைப்புகளினதும் தலைவர்கள் மற்றும் முக்கிய உறுப்பினர்களுடன் தொலைபேசி மூலம் உரையாடி வருகின்றேன். மிகவிரைவில் அவர்கள் அனைவரையும் நேரடியாக கண்டு பேசுவதற்கு ஆவலாக உள்ளேன். அதேபோல் தமிழ் ஐனநாயக தேசிய கூட்டணி விடயத்தில் ஒருதடவை அதன் தலைவர் திரு. ஆனந்தசங்கரி அவர்களுடன் நேரில் கண்டு பேசியுள்ளேன். இது விடயத்தில் பிரதேச மக்கள் மற்றும் எமது உறுப்பினர்கள், ஆதரவாளர்களின் அபிப்பிராயங்களை பெற வேண்டும். தமிழ் மக்களின் பிரதிநிதிகளாக பாராளுமன்றம் சென்ற தமிழ் தேசிய கூட்டமைப்பினர் மக்களின் பிரச்சினைகளை புறந்தள்ளி விட்டு புலிகளின் நலனில் அக்கறை கொண்டு செயல்பட்டு வருகின்றனர். இருந்த போதிலும் அவர்களுக்குள்ளும் ஓர் அதிருப்தி குழு உருவாகி வருகின்றது காலம் வரும் போது அவர்களுடனும் பேசுவோம்.

அதிரடி:- இறுதியாக அதிரடி இணையம் ஊடாக புலம்பெயர் தேசத்து மக்களுக்கு ஏதாவது கூற விரும்புகின்றீர்களா?

கருணாஅம்மான்:- ஆம். புலம்பெயர்ந்துள்ள எமது மக்கள் இங்கு இன்னல்படுகின்ற மக்களின் பெயரால் இந்த யுத்தத்திற்கு பெரும் பங்களிப்பை செய்து கொண்டிருக்கின்றார்கள். ஆனால் அவர்களது பங்களிப்புகள் அவர்களின் விருப்புக்கேற்ப அந்த மக்களை சென்றடைவதற்கு மாறாக அம்மக்களின் வாழ்வை கேள்விக் குறியாக்கி நிற்கின்றது. இவ்விடயங்களை உங்களைப் போன்ற ஜனநாயக வழிமுறைகளில் நாட்டம் கொண்ட பல ஊடகங்கள் காலம் காலமாக எடுத்து கூறிவருகின்ற போதும் புலிகளின் பொய்பிரச்சார ஊடகங்கள் ஊடாக புலிகள் செய்கின்ற பரப்புரைகளை நம்பி பிரபாகரனின் வரலாற்றுத் துரோகத்திற்கு துணை நிற்கின்றனர். எனவே எதிர்காலத்திலாவது உண்மைகளை உணர்ந்து மக்களின் அழிவை தடுக்கும் முகமாக புலிகளுக்கு வழங்குகின்ற நிதி உட்பட சகல உதவிகளையும் நிறுத்துமாறு உரிமையுடன் கேட்டுக் கொள்கின்றேன்.

நன்றி!!

No comments: