Showing posts with label ஆனந்தவிகடன். Show all posts
Showing posts with label ஆனந்தவிகடன். Show all posts

Saturday, August 2, 2008

நிச்சயம் தமிழீழம் வேண்டும்! ஆனந்த விகடன் கணக்கேடுப்பில் தமிழக மக்கள்!

விடுதலைப் புலிகள், ராஜீவ் படுகொலை வழக்கு, கச்சத்தீவு, இலங்கை பிரச்னையில் இந்திய அரசின் அணுகுமுறை ஆகிய அனைத்துக் கோணங்களிலும் 12 கேள்விகளுடன் விரிவானதொரு சர்வே நடத்தியது தமிழக வார ஏடுஆனந்த விகடன்.
ஆனந்த விகடன் இணையதளத்தில் 2,130 பேர், சர்வே நேரடியாக சென்று தமிழகம் முழுவதும் பதில் அளித்தவர்கள் 2,065 பேர். ஆக, மொத்தம் 4,195 பேர் ஆண்கள்-பெண்கள், நகர்ப்புறம்-கிராமப்புறம் என்று பலதரப்பட்டவர்கள் கலந்து கொண்ட இந்த சர்வேயின் பிரமிப்பூட்டும் முடிவுகளை இங்கே தருகிறோம். 'ஈழத் தமிழர் விவகாரத்தில் இங்கே நிலவும் மனநிலை இதுதான்!' என்று அடித்துச் சொல்லும் சர்வே முடிவுகள் இவை!




ஜூலை 25, 1983..! இலங்கையில் இனவெறிக்கான வெறுப்பு விதை அழுத்தமாக விழுந்த நாள். சிங்கள ராணுவம் முதல்முறையாக ஈழத் தமிழ்ப் பகுதிகளில்வெறி பிடித்து வேட்டையாடி, அப்பாவித் தமிழர் பிணங்களை அடுக்கிய நாள். தனித் தமிழீழப் போராட்டத்துக்கு உணர்ச்சி நெருப்பேற்றிய அந்தக் கறுப்பு ஜூலை முடிந்து 25 வருடங்களாகின்றன!



அரை நூற்றாண்டு காலமாக யுத்தத்தின் ரத்தத்தில் நனைகிறது ஈழ மண். நிலம், குடும்பம், உயிர், உடைமை என எல்லாவற்றையும் இழந்து துயரத்தின் பிள்ளைகளாக வாழ்கிறார்கள் ஈழத் தமிழர்கள். ஈழ விடுதலைக்காக, இலங்கை அரசுக்கு எதிராக எத்தனையோ இயக்கங்கள் எழுந்து விழுந்துவிட்டன. ஓயாத அலைகளாக இன்று வரை உலக அரங்கத்தில் உறுமிக்கொண்டு இருக்கிற ஒரே அமைப்பு, 'தமிழீழ விடுதலைப் புலிகள்'!

சர்வதேசத் தீவிரவாத அமைப்புகளின் பட்டியலில் ஒன்றாக இருந்தாலும், உலகில் வேறு எந்த இயக்கத்துக்கும் இல்லாத கண்ணிய மரியாதை விடுதலைப்புலிகளுக்கு உண்டு. உலக நாடுகளின் துணையோடு எதிர்க்கிற இலங்கை ராணுவத்துக்கு, புலிகள் ஒவ்வொரு கணமும் சிம்ம சொப்பனம்தான்!

''ராணுவத்திலிருந்து தப்பி ஓடியவர்களை மீளச் செய்யும் நடவடிக்கைகளில் இறங்கியுள்ளோம். புலி களைவீழ்த்த இன்னும் 10 ஆயிரம் வீரர்கள் உடனடி யாகத் தேவைப்படுகிறார்கள்!''என்றுஅறிவிக்கிறது இலங்கை பாதுகாப்பு அமைச்சகம். அமெரிக்க அதிபர் தேர்தலில்போட்டியிடும் பாரக் ஒபாமா உலகின் மற்ற தீவிரவாதஅமைப்புகளைக் கண்டிக்கிறார். ஆனால், புலிகள் பற்றிய கேள்விகளுக்கு அவரது பதில் மௌனம்-தான். 'ஷெல்லடிக்கிற ராவுகளும் எங்கட பெண்டு பிள்ளைகளைக் கைபிடிச்சு இழுக்கிற ஆர்மிக்காரவுகளும் இல்லாத எங்கட மண் வேண்டும்' என ஏங்கிக்கிடக்கும் ஈழ மக்களின் ஒரே நம்பிக்கையும் புலிகள்தான்!

ஆனால், புலிகள் அமைப்பு பலவீனமடைந்துவிட்டது, அமைப்புக்குள்ளேயும் உலக நாடுகளின் பார்வையிலும் அது பின்னடைவில் இருக்கிறது என்பது மாதிரியான



தோற்றம் இப்போது ஏற்பட்டிருப்பது உண்மையா..? ஆன்டன் பாலசிங்கம், சுப.தமிழ்ச்செல்வன் போன்ற முக்கிய தளகர்த்தர்களின் மறைவு அவர்களுக்கு மறுக்க முடியாத இழப்புதான். ஆனால், ''விடுதலைப் புலிகளுக்கு இழப்புகள் புதிதல்ல.திலீபன் தொடங்கி தமிழ்ச்செல்வன் வரைஅவர்கள் இழப்புகளில்தான் எழுந்து முளைத்திருக்கிறார்கள். 25 வருட போராட்டக் களத்தில் புலிகள் கண்ட இழப்புகள் நிகழ்காலச் சரித்திரத்தில் எந்த போராளிக் குழுக்களும் காணாதது. அவர்களை எதுவும் தடுக்க முடியாது'' என்கிறார்கள் சர்வதேசப் பார்வையாளர்கள். புலிகளின் கட்டுப்பாட்டில் இயங்கிவரும் பகுதிகளில் சிங்கள ராணுவம் முன்னேறி வருகிறது என இலங்கை அமைச்சகம் வெளியிடும் செய்திகளில் எத்தனை உண்மை என்பது தெளிவாகத் தெரியவில்லை.

இந்தச் சூழலில் இலங்கையில் நடக்கும் சார்க் மாநாட்டில் இந்தியா கலந்துகொள்வதை அடுத்து தற்காலிகப் போர் நிறுத்தம் அறிவித்திருக்கிறார்கள் புலிகள். இந்த நேரத்தில் எல்லோருக்குள்ளும் எழுகிற கேள்விகள்... இலங்கை தமிழர் பிரச்னை யில் இந்திய அரசின் நிலைப்பாடு சரிதானா? புலிகளின் போராட்டத்துக்குத் தமிழர்களிடையே ஆதரவு இருக்கிறதா..? தமிழ் ஈழம் அவசியமா? ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பிரபாகரனுக்குத் தண்டனை கொடுக்க வேண்டுமா?

''ஒற்றைத் துப்பாக்கி, ஐந்து வீரர்களோடு பிரபாகரன் துவக்கிய அமைப்பு, இன்று 25 ஆயிரம் வீரர்கள் கொண்ட மாபெரும் இயக்கம்! தரைப் புலிகள், கடற் புலிகள், வான் புலிகள் என சகல திசைகளிலும் கிளை பரப்பும் புலிகளின் ராணுவக் கட்டமைப்பு அசாத்தியக் கச்சிதமானது. இதுவரை புலிகள் தற்காப்பு நிலையில்தான் போரிட்டார்கள். அவர்கள் தாக்குதல் நிலையை எடுக்கும்போது சிங்கள ராணுவம் பெரும் வீழ்ச்சியைச் சந்திக்கும். அந்தத் தருணத்துக்காகத்தான் புலிகள் காத்திருக்கிறார்கள்!'' என்கிறார் ஈழத்துக் கவிஞர் காசிஆனந்தன் நம்பிக்கையாக!

புலிகளின் நிரந்தர ஆதரவாளரான தமிழர் தேசிய இயக்கத்தின் தலைவர் பழ.நெடுமாறன், ''யுத்த தந்திரங்களின்படி சில இடங்களில் முன்னேறி, சில இடங்களில் பின்வாங்கினாலும் புலிகள் தங்கள் இலக்கை நோக்கி முன்னேறிக்கொண்டே இருக்கிறார்கள். உலக நாடுகளிடமிருந்து ஆயுத உதவி பெறும் சிங்கள ராணுவத்திடம் பறித்தெடுத்த ஆயுதங்களைக்கொண்டே இத்தனை காலமும் வளமான போராட்டம் நடத்தி வருகிறார்கள் புலிகள்!'' என்கிறார்.

''தமிழீழப் போராளிகளின் ஆயுதம் தாங்கிய போராட்டம் அறிவியல்பூர்வமாகவும் ராணுவரீதியாகவும் பெரும்வெற்றியைச் சந்தித்திருக்கிறது. சர்வதேச அளவில் தமிழீழம் அங்கீகரிக்கப்படவில்லையே தவிர, இலங்கையில் தமிழ் ஈழத்தை மனதளவில் ஏற்றுக்கொண்டார்கள் என்பதே உண்மை. தமிழீழத்துக்கான அரசாங்கம் அமைக்கப்பட்டு, நீதி, காவல், கல்வி, மருத்துவம், நிதி என அனைத்துத் துறைகளும் சிறப்பாக இயங்கிவருகின்றன. இலங்கை சார்க் மாநாட்டில் இந்தியா கலந்துகொள்வதை ஒட்டி, புலிகள் அறிவித்திருக்கும் போர் நிறுத்தம் புலிகளின் நேர்மையை உலகுக்குக் காட்டுவதாக இருக்கிறது!'' என்று பெருமிதப்படு கிறார் தொல்.திருமாவளவன்.

''ஏழு, எட்டு வயசுப் பசங்களை எல்லாம் தீவிரவாதிகளாக மாத்துறதுதான் ஒரு இயக்கத்தின் கொள்கையா இருந்தா, அப்படி ஒரு இயக்கம் எதுக்கு? தமிழ்நாட்டில் எந்தக் கட்சி ஆட்சியில் இருந்தாலும் இங்கே இருந்துதான் தங்களுக்குத் தேவையான பொருட்களைக் கடத்துறாங்க புலிகள். இதனால் தமிழகத்துக்கு எப்பவும் பாதிப்புதான். இப்போ இலங்கைப் பிரச்னையில் இந்தியா எடுத்திருக்கும் நிலைப் பாடுதான் சரி. தனி ஈழம் சரியான தீர்வு இல்லை'' என்று காரசாரமான விமர்சனத்தைப் புலிகள் மீது வைக்கிறார் சோ.

பெரியார் திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் விடுதலை க.இராசேந்திரனோ ''ஒவ்வொரு முறை சமரச உடன்படிக்கை ஏற்படும்போதும், இலங்கை அரசுதான் அதை மீறிச் செயல்பட்டு இருக்கிறது. தமிழ் மக்களுக்குச் சம உரிமை வழங்குகிறோம் என்று அறிவித்துவிட்டு, ஒரே வாரத்தில் கொடுத்த வாக்குறுதியைக் குப்பையில்தான் இலங்கை அரசு போடும். இதற்கு தனி ஈழம் அமைவது ஒன்றுதான் இறுதித் தீர்வாக அமையும்'' என்கிறார் ஆவேசமாக.

''இதுவரை பாகிஸ்தான் உள்பட அசாதாரணச் சூழ்நிலை நிலவும் பல அண்டை நாடுகளில் எல்லாம் சார்க் மாநாடுகள் நடந்திருக்கின்றன. அப்போதெல்லாம் மூன்று கப்பல்களில் ஆயுதங்களும் 3 ஆயிரம் போர் வீரர்களும் பிரதமரின் பாதுகாப்புக்கு என்று போன தில்லை. இப்போதுதான் இந்த வேடிக்கை நடக்கிறது.

இலங்கையைத் திருப்திப்படுத்தும் வேலையை மட்டுமே செய்து வருகிறது இந்திய அரசு. இலங்கையின் தேயிலைத் தோட்டங்களில் வேலை பார்த்த பல லட்சம் இந்தியத் தமிழர்களை ஒன்றுமில்லாத பிச்சைக்காரர்களாகத் திரும்பப் பெற்றது, கச்சத்தீவை விட்டுக்கொடுத்தது, அதன் பலனாக இன்றும் தமிழக மீனவர்களைப் பலி கொடுப்பது வரை இது தொடர்கிறது.

இந்தியாவின் பாதுகாப்புக்குப் பங்கம் விளைவிக்கும் நாடுகளுடன் இலங்கை உறவு வைத்துக்கொள்ளாது என்று நினைக்கிறது இந்திய அரசு. ஆனால், பாகிஸ்-தான் விமானிகள்தான் சிங்களப் போர் விமானங்களை இயக்கிக்கொண்டு இருக்கிறார்கள். அமெரிக்காவும் தன் ராணுவ தளத்தை இலங்கையில் அமைப்பதற்கு நேரம் பார்த்துவிட்டது. இதெல்லாம் தெரிந்தும் நம் டெல்லி அறிவுஜீவிகள் இப்படி இருக்கிறார்கள்!'' என்று காட்டமாகிறார் பழ.நெடுமாறன்.

இந்தச் சூழ்நிலையில் விடுதலைப்புலிகளின் அடுத்த கட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும்? எத்தனை விமர்சனங்கள் இருந்தாலும் இயக்கத்தைக் கட்டுக் கோப்போடு முன்னெடுத்துச் செல்வதில் தீவிரமாக இருக்கிறார் பிரபாகரன் என்பதுதான் அரசியல் நோக்கர்களின் கருத்து. ''பிரபாகரனின் சிந்தனைதான் விடுதலைப் புலிகளின் சிந்தனை. கட்டுக்கோப்புடனும் தலைமைக்கு விசுவாசமாகவும் இருக்கும் விடுதலை இயக்கத்துக்குச் சிறந்த உதாரணமாக இருக்கிறது புலிகள் அமைப்பு. பிரபாகரன், திறமையான ராணுவத் திட்ட வகுப்பாளர் மட்டுமல்ல; அரசியல் நுணுக்கமும் அறிந்தவர். மாறுகின்ற உலக நடப்புகள் எப்படியெல்லாம் தமிழர்களின் போராட்டத்தைப் பாதிக்கும் என்பதில் தீர்க்கமான ஞானம் உள்ளவர். ஆட்சி மாற்றம் ஏற்படவுள்ள அமெரிக்கா, இந்திய நிலைமைகள் தெரிந்த பின்பு, அடுத்த நகர்வை நோக்கிய முக்கியமான முடிவை பிரபாகரன் எடுப்பார்''- சமீபத்தில் இலங்கை இணையதளப் பேட்டியில் இப்படிச் சொல்லியிருக்கிறார் இந்தியப் பத்திரிகையாளர் அனிதா பிரதாப்.

சரி... தமிழக மக்கள் என்ன சொல்கிறார்கள்..? தனி ஈழம், விடுதலைப் புலிகள் விஷயத்தில் அவர்கள் மனநிலை என்ன என அறிந்துகொள்ள தமிழகம் முழுவதும் சர்வே ஒன்றை நடத்தியது விகடன்.

முடிவுகள், தமிழக மக்களின் மனசாட்சியை வெளிச்சமிட்டுக் காட்டுகின்றன. ஈழ மண்ணில் அமைதி மலர வேண்டும், விடுதலை வெளிச்சம் பரவ வேண்டும் என்பதே அது!



நன்றி-ஆனந்த விகடன்