தேசப்பித்தன்-
கடந்த வாரம் மட்டக்களப்பு பாலமீன்மடு பிரதேசத்தில் மனித உடல் புதைக்கப்பட்டிருந்த புதைகுழி ஒன்று அவ்வூர் அகதிகளால் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
தமிழர் தேசத்தில் இது ஒன்றும் புதிய விடயமல்ல. குலை குலையாக மனிதர்கள் குறிப்பாக தமிழ் இளைஞர்கள் வெட்டிச் சாய்க்கப்படுவதும், புதைக்கப்படுவதும், எரிக்கப்படுவதும் காலத்துக்கு காலம் நடைபெற்று வருவதுதான்.
ஆனாலும் இப்படுகொலைகள் குறித்த சட்டபூர்வ நடவடிக்கைகளோ நீதிமன்ற விசாரணைகளோ முறைப்படி நடைபெறுவதுமில்லை. பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயங்கள் கிடைப்பதுமில்லை. சிறீலங்காவின் அரசியல் சட்டத்திலோ அன்றி நீதிவிசாரணைகளிலோ சட்டம் ஒழுங்கு சம்பந்தப்பட்ட அமைப்புகள், நிறுவனங்களிலோ தமிழ்ர்களுக்கு எதுவித பாதுகாப்பு உத்தரவாதமும் கிடையாது என்பதையே இதுவரைகாலமும் நடைபெற்ற படுகொலை விசாரணைகள் நிரூபித்து வருகின்றன.
சந்திரிகா அம்மையாரின் ஆட்சிக்காலத்திலே கண்டுபிடிக்கப்பட்ட செம்மணி புதைகுழிகள் சம்பந்தமான நீதி விசாரணைகளையும் சம்பந்தப்பட்ட எதிரிகள் எவ்வித தண்டனைகளையும் பெறாமல் காலம் கடத்தப்படும் நிலைமைகளும் சர்வதேசம் இன்னமும் மறந்த விடயங்களல்ல.
பாலமீன்மடு புதைகுழியின் மனித எச்சங்களை ஆராய்ந்த பகுப்பாய்வுக் குழுவினர் இவை நான்கு அல்லது ஐந்து வருடங்களுக்கு முன்பு கொல்லப்பட்டவர்களுடையது என தமது பூர்வாங்க அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.
கடந்த பல வருடங்களாக, ஒரு தசாப்தத்திற்கு மேலாக பாலமீன்மடு பிரதேசம் சிறீலங்கா பொலிஸ், இராணுவம் மற்றும் அதிரடிப்படையின் பூரண கட்டுப்பாடடில் இருந்து வருவதாக அப்பகுதி வாழ் மக்கள் தெரிவிக்கின்றனர்.
ஆகவே இங்கே புதைக்கப்பட்டவர்கள் யார் என்ற கேள்வி எழுகிறது. 2002ம் ஆண்டு யுத்தநிறுத்த ஒப்பந்தம் கைச்சாத்திட்டதன் பின்னர் புலிகள் அமைப்பு இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் மிகவும் சுதந்திரமாக தமது நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தனர் என்பது யாவரும் அறிந்ததே.
ஆட்கடத்தல், கப்பம், கட்டப்பஞ்சாயத்து என்று ஒருவிதமான ரவுடி ராஜ்யம் ஒன்று சமாதான முன்னெடுப்பு என்ற பெயரில் புலிகள் இயக்கத்தால் மெல்ல மெல்ல உருவாக்கப்பட்டிருந்தது. மாற்று அமைப்புகளின் முன்னாள் உறுப்பினர்களை கடத்துவது, கொலை செய்வது போன்ற செயல்களிலும் புலிகள்; அக்காலத்தில் ஈடுபட்டு வந்தனர். புலிகளின் இந்த அடாவடித்தனங்களை எல்லாம் மிக அண்மையில் இருந்தும்கூட சிறீலங்காவின் பாதுகாப்பு தரப்பினர் கண்டும் காணாதிருந்தனர்.
2004 ல் புலிகளின் மட்டக்களப்பு பிரதேசபொறுப்பாளர் கருணா புலிகளில் இருந்து வெளியேறிய அல்லது வெளியேற்றப்பட்ட காலப் பகுதியில் மிகவும் மோசமான முறையில் வன்முறைச் சம்பவங்கள் மட்டக்களப்பு மாவட்டத்தில் இடம் பெற்றிருந்தன. வன்னிப் புலிகள் என்று கருணாவால் முத்திரை குத்தப்பட்ட உறுப்பினர்கள் ஏராளமானோர் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர். பலர் படுகொலை செய்யப்பட்டனர். இன்னும் பலர் இயக்கத்தில் இருந்து வெளியேறி செல்ல அனுமதிக்கப்பட்டனர்.
பொட்டம்மானுக்கு விசுவாசமாக இருந்த புலனாய்வுப் பொறுப்பாளர் நீலன் உட்பட ஏராளமான புலனாய்வுப் பிரிவு உறுப்பினர்கள் கொலை செய்யப்பட்டதாகவும் தெரியவருகிறது. தவிர, புலிகள் இயக்கத்திற்கென்று முன்பு உதவிவந்த பல வடபகுதித் தமிழர்களும் காணாமல் போயிருந்தனர்.
பல்கலைக்கழக உபவேந்தர் இரவீந்திரநாத் மற்றும் தமிழர் புனர்வாழ்வுக்கழக ஊழியர்கள் உட்பட பலர் இன்னமும் தேடப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
படுகொலைகளிலும் ஏராளமான தமிழர்கள் மட்டக்களப்பு மாவட்டத்தில் காணாமல் போயிருந்தனர். 2002ம் ஆண்டில் இருந்து 2006ம் ஆண்டு வரையிலும் மிகவும் மோசமான வன்முறைச் சம்பவங்கள் அதிகளவில் பதிவு செய்யப்பட்டிருந்த தமிழ் பிரதேசமாக மட்டக்களப்பு மாவட்டமே விளங்கியது.
புலிகள் அமைப்பில் இருந்தவர்கள், புலிகள் அமைப்பில் இருந்து விலகி வீடுகளில் தங்கியிருந்தவர்கள், புலிகளுக்கு உதவியவர்கள் என்று பரந்தளவிலான மனிதப் படுகொலை சம்பவங்கள் புலிகள் அமைப்பின் இரு பிரிவினராலும் அரங்கேற்றப்பட்டிருந்தது. மட்டக்களப்பில் ஆரம்பித்த பழிவாங்கும் படுகொலைக் கலாச்சாரம் பின்பு அம்பாறை, திருகோணமலை, கொழும்பு மாவட்டங்களுக்கும் பரவியிருந்ததுடன் இப்பிரதேசங்களிலும் ஏராளமான தமிழர்கள் குறிப்பாக தமிழ் இளைஞர்களின் கொலைகளுக்கும் கடத்தல்களுக்கும் காரணமாய் இருந்தது.
புலிகளின் இரண்டு தரப்பினரும் காட்டிய வழியிலேயே அரசு படையினரும் ,புலனாய்வுத் துறையினரும் படுகொலை மற்றும் கடத்தல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுவருகின்றனர்.
அரச படைகளின் கொடூரமான பதில் நடவடிக்கையில் புலிகளின் ஆதரவாளர்கள் மட்டுமன்றி, அப்பாவிகளும் படுகொலை செய்யப்படுவது மிகவும் வேதனையான விடயமாகும்.
ஆக, அரச பகுப்பாய்வாளர்களின் கால அளவு உறுதியானது என்றால் பாலமீன்மடு பகுதியில் புதைக்கப்பட்டவர்கள் யாராக இருக்கும் என்பதை அறிய சிரமப்படவேண்டியிராது.
அவர்கள் புலிகளாக இருக்கவேண்டும்,அல்லது புலிகளுக்கு உதவியவர்களாக இருக்கவேண்டும்,அல்லது வடபகுதி தமிழர்களாக இருக்கவேண்டும். அதுவுமில்லை என்றால் புலிகளில் இருந்து விலகியவர்களாக இருக்கவேண்டும்.
அவர்களைக் கொன்றவர்கள் புலிகளாக இருக்கவேண்டும் அல்லது கருணா குழுவினராக இருக்கவேண்டும். அல்லது அவர்களின் பெயரில் படுகொலைகளை தொடரும் அரச படையின் புலனாய்வுத் துறையாக இருக்கவேண்டும்.
கடந்தகால படுகொலைச் சம்பவங்கள், விசாரணைக் குழுக்கள், நீதிமன்ற நடவடிக்கைகள் போலவே பாலமீன்மடு படுகொலைகளுக்கும் முடிவு வரும், அதாவது கிடப்பில் போடப்பட்டுவிடும் என்பதை மட்டும் நாம் உறுதியாக நம்பலாம்.
தேணி இணையம்
Showing posts with label பாலமீன்மடு - கொன்றது யார்? கொல்லப்பட்டது யார்?. Show all posts
Showing posts with label பாலமீன்மடு - கொன்றது யார்? கொல்லப்பட்டது யார்?. Show all posts
Thursday, July 24, 2008
Subscribe to:
Posts (Atom)