Showing posts with label India. Show all posts
Showing posts with label India. Show all posts

Thursday, August 7, 2008

தமிழகத்தில் புலிகளை ஒடுக்க அரும் பாடுபடும் நாராயணனுக்கு ஏற்பட்ட சம்பவம் சாதாரண விடயமல்ல

தீவிர கரிசனையுடன் கண்டிக்கிறார் லக்ஷ்மன் செனவிரத்ன
ஜீவா சதாசிவம்

நாட்டில் மனித உரிமை மீறல்கள் அதிகரித்து வருகின்ற அதேவேளை இது தொடர்பான கருத்துக்களை வெளியிடும் ஊடகங்கள் பல்வேறு அச்சுறுத்தல்களுக்கு முகங்கொடுக்க வேண்டிய நிலையிலுள்ளது என்று தெரிவித்துள்ள ஐக்கிய தேசியக்கட்சியின் பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் செனவிரத்ன, இந்நிலையில் பொலிஸ்மாஅதிபர் நித்திரையில் இருக்கின்றார் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற அவசரகாலச் சட்டத்தை மேலும் ஒருமாதம் நீடிப்பதற்கான பிரேரணையில் உரையாற்றுகையில் இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது;

பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கு சார்க் தலைவர்கள் ஒத்துழைப்பு வழங்கியுள்ளனர். பயங்கரவாதம் இலங்கையில் மாத்திரம் அல்ல, உலகளாவிய ரீதியில் காணப்படும் விடயமாகும். எது எவ்வாறாயினும், இந்நாட்டு மக்களின் பணத்திலேயே அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்திக்கு இடம்பெற்ற சம்பவமானது இலங்கைக்கு கறுப்புப் புள்ளியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் சார்க்கின் போது இந்திய பாதுகாப்பு ஆலோசகர் நாராயணனுக்கு ஏற்பட்ட நிலை குறித்து, பாதுகாப்பு அமைச்சர் வெளியிட்டுள்ள கருத்து வியப்பாக உள்ளது.

இலங்கையில் பாதுகாப்பு பிரச்சினை இல்லை என்பதை ஒரு மெய்யான கூற்றின் மூலம் நாராயணன் பிரச்சினையின்றி ரக்ஸியில் சென்றிருப்பதாக கூறி வெளிப்படுத்தியுள்ளனர். அப்படியாயின் இந்தியப் பிரதமருக்கு அவ்வாறான பாதுகாப்பு வழங்கப்பட வேண்டிய அவசியம் இல்லையா? அவரும் வாடகைக் காரில் வந்து கொழும்பில் இறங்கலாம் தானே?

தவறுகள் இடம் பெறுமாயின் அதற்கு மன்னிப்பு கேட்க வேண்டுமே தவிர அதனை சமாளிப்பதற்கென பொய்யான காரணங்களை கூறி எதனையும் மூடி மறைப்பதற்கு முற்படக்கூடாது.

தமிழ் நாட்டில் புலிகளை ஓரம் கட்டுவதற்கு அரும் பாடுபடும் இந்தியப் பாதுகாப்பு ஆலோசகருக்கு இவ்வாறு இடம்பெற்ற சம்பவமானது சாதாரண விடயமல்ல. இதேவேளை இந்நாட்டு மக்கள் மூன்று வேளை உணவை, உண்ண முடியாத நிலையில் சார்க்கின்போது ஒரு நாள் உணவுக்கு மாத்திரம் 10ஆயிரம் ஒதுக்கப்பட்டது. இது ஏற்றுக் கொள்ளமுடியாததொன்று,சார்க்கின் வெற்றி ஆண்டவனின் சாட்சி என்றே கூறவேண்டும்.

அத்தோடு இன்று பல்வேறு சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றது. இதனை தட்டிக் கேட்பதற்கு யாரும் இல்லாதுள்ளனர். இந்நிலையில் பொலிஸ்மா அதிபரோ நித்திரையில் உள்ளார்.

தற்போது அரசாங்கத்தின் முழுமையான அனுசரணையிலேயே அநுராதபுரம், சப்ரகமுவ பகுதிகளில் பல்வேறு தாக்குதல் சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றது. ஆனால், இது தொடர்பாக பொலிஸார் எவ்வித நடவடிக்கைகளையும் எடுக்காதுள்ளனர். சம்பவங்கள் தொடர்பாக புகார் செய்வதற்கு வரும் மக்களை கண்டு பொலிஸார் வாயில் கதவுகளை மூடி விடுகின்றனர்.

வடக்கு யுத்தம், வடமத்திய மாகாணத்திற்கும் வந்துவிட்டது. இதனை வழி நடத்துபவர்களுக்கு அரசே முன்னின்று தலைமைதாங்கி செயற்படுகின்றது. இப்பிரதேசங்களில் இடம்பெறும் சம்பவங்களுக்கு அரசே முழுப்பொறுப்பையும் ஏற்றுக் கொள்ள வேண்டும். இந்நிலையில், வடமத்திய, சப்ரகமுவ தேர்தலை ஜனநாயக ரீதியில் முன்னெடுக்க முடியாது. ஏனென்றால், மக்கள் பல்வேறு அடக்கு முறைக்கு உட்படுத்தப் பட்டுள்ளனர். பெரும் அச்சமடைந்துள்ளனர். இந்நிலையில் அவர்களால் சுதந்திரமாக வாக்களிக்க முடியாது. நீதியான சுதந்திரமான தேர்தல் இல்லை. இவ்வாறு தாக்குதல்கள் அதிகரித்துவரும் போது இந்நாட்டின் நிலை என்ன ஆவது?

சிரச ஊடகவியலாளர் தாக்கப்பட்டுள்ளார். அவரது கமரா பறிக்கப்பட்டுள்ளது. இது ஒரு அமைச்சரால் நடந்ததென்பது யாவரும் அறிந்த விடயம்.

ஆனால், இது தொடர்பாக, அரசோ அல்லது ஜனாதிபதியோ எவ்வித நடவடிக்கையும் எடுக்காதுள்ளனர். இவ்வாறே பல்வேறு சம்பவங்கள் இடம் பெறுகின்றன.

அத்தோடு, அரசின் அனுசரனைணயுடன் பிள்ளையான் குழு ஆயுதங்களுடன் பொலநறுவை பகுதிகளில் நடமாடி வருகின்றனர். இதனால், மக்கள் பெரும் அச்சத்துடன் இருந்து வருகின்றனர். மக்கள் அச்சம் அடைந்துள்ள நிலையில் குறித்த பகுதியில் நீதியான தேர்தலை நடத்த முடியாது. இதேவேளை இப்பகுதி பொலிஸாரும் இதற்கு உறுதுணை வழங்கி வருகின்றனர்.

இவ்வாறான சம்பவங்கள் தொடர்பாக அரசு எவ்வித நடவடிக்கையையும் எடுக்காதுள்ளது.நாம் அவசரகால சட்டத்துக்கு எந்த வகையிலும் அனுமதி வழங்க மாட்டோம் என்றும் தெரிவித்தார்.

நாராயணனின் பாதுகாப்பில் பாரதூரமான குறைபாடு

உறுதிப்படுத்துகிறது இந்திய தூதரகம்
சார்க் உச்சி மாநாட்டு வேளையின்போது இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணனின் பாதுகாப்பு ஏற்பாடுகளில் இடம்பெற்ற பாரதூரமான குறைபாட்டுக்காக இலங்கைப் பாதுகாப்பு அதிகாரிகள் மன்னிப்பு கேட்டதாகவும் அந்த விடயம் தற்போது முடிவுக்கு வந்துவிட்டதொன்று என்று தாங்கள் கருதுவதாகவும் இந்திய உயர்ஸ்தானிகராலயம் நேற்று புதன்கிழமை தெரிவித்தது.

இது தொடர்பாக உயர்ஸ்தானிகராலயம் விடுத்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது;

அண்மையில், நடந்துமுடிந்த 15 ஆவது சார்க் உச்சி மாநாட்டின் போது இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணனுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து வெளியான பல்வேறுபட்ட ஊடக அறிக்கைகள் தொடர்பாக தூதரகம் கவனத்திற்கு எடுத்துள்ளது.

முன்கூட்டியே கலந்தாராயப்பட்டு இணக்கம் காணப்பட்ட சில பாதுகாப்பு ஏற்பாடுகள் அமுல்படுத்தப்படவில்லையெனவும் பாரதூரமான குறைபாடுகள் காணப்பட்டதாகவும் தூதரகம் தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றது. இந்த விடயம் குறித்து உடனடியாக இலங்கை பாதுகாப்பு தரப்பினரிடம் ஆராயப்பட்டு கூட்டாக பரிகாரம் காணப்பட்டது.

பாதுகாப்பு விவகாரங்கள் தொடர்பாக விரிவான முறையில் கருத்து தெரிவிக்கப்பட்டது. உயர் ஸ்தானிகராலயத்தின் நடைமுறை விடயமல்ல. இலங்கை பாதுகாப்பு அதிகாரிகள் நாராயணனிடம் மன்னிப்பு கேட்டுள்ளனர். இப்போது இந்த விடயம் முடிவுற்றதொன்று என்று நாம் கருதுகிறோம்.