தமிழகத்திலுள்ள இலங்கைத் தமிழர் தொடர்பாக கூறிய கருத்து குறித்து கருணாநிதி விளக்கமளிக்க வேண்டும்
* அமைச்சர் சந்திரசேகரன் கடிதம்; விபரீதமான விடயமெனவும் குற்றச்சாட்டு
தமிழகத்திற்கு அபயம் தேடி வரும் இலங்கைத் தமிழர்கள் தொடர்பாக தமிழக முதலமைச்சர் கருணாநிதி கூறியுள்ள கருத்து மிகவும் விபரீதமானதென்பதுடன் உலகத் தமிழர்களையெல்லாம் திகிலடையவும் வைத்துள்ளது. எனவே, இது தொடர்பில் விளக்கமளிக்க வேண்டிய பொறுப்பும் தேவையும் கருணாநிதிக்குண்டென மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் அமைச்சருமான பெ.சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் தமிழக முதலமைச்சர் கருணாநிதிக்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;
தமிழகத்திற்கு அபயம் தேடிவரும் இலங்கைத் தமிழர்களைப் பற்றி தாங்கள் கூறியதாக வெளிவந்துள்ள கருத்து சர்வதேச தமிழர்களையும் திகிலடைய வைத்திருக்கின்றது.
அதிலும் குறிப்பாக "மரத்திலிருந்து விழுந்தவனை மாடேறி மிதிக்கும் கதையாகவே' தங்களின் வாயிலிருந்து வந்த வார்த்தைகள் இலங்கைத் தமிழர்களின் மனதை நோகடிக்கச் செய்திருக்கின்றது.
1983 இலங்கையில் இனக்கலவரம் தோன்றிய காலத்திலிருந்து தமது உயிரைப் பாதுகாத்துக்கொண்டு தப்பிப் பிழைத்து தமிழகம் வருபவர்கள் அகதி முகாம்களிலேயே அடைக்கப்பட்டு வருகிறார்கள். இது இன்னொரு வடிவிலான திறந்தவெளி சிறைச்சாலைதான்.
தற்போது தமிழ்நாட்டிலேயே காலூன்றவும் முடியாமல் தமது தாயகத்திற்கு திரும்பி வரவும் முடியாமல் தங்களது எதிர்காலத்தை இவர்கள் கேள்விக்குறியாக்கிக்கொண்டிருக்கிறார்கள். அதேநேரத்தில் மேலைத்தேய நாடுகளுக்கு அகதிகளாக புலம்பெயர்ந்தோர் இன்று சொந்த சொத்துக்களுக்கு உரிமையானவர்களாக, தொழிலதிபர்களாக, தாராளமான வருவாயை பெறக்கூடிய தொழில் பெற்றவர்களாக தமது தனித்துவத்தையும், கலாசார பாரம்பரிய விழுமியங்களையும் தக்கவைத்துக் கொண்டுள்ளவர்களாகவும் தாம் வாழும் நாட்டின் பிரஜைகளாகவும் தமிழினம் பெருமைப்படக் கூடிய அளவுக்கு தமது வாழ்க்கையை அமைத்துக்கொண்டுள்ளார்கள்.
அவர்கள் குடியேறிய எந்த நாடும் அவர்களை சுமையாகக் கருதவில்லை என்பதோடு அவர்களின் மனித உரிமைகளை மதித்து கௌரவிக்கின்ற நிலையே அங்கெல்லாம் ஏற்பட்டிருக்கின்றது. இலங்கை வாழ் இந்திய வம்சாவளி தமிழர்கள் இந்தியாவில் முதலீடு செய்யவும் தமது தொப்புள்கொடி உறவுகளைப் புதுப்பித்துக்கொள்ளவும் வாய்ப்பை ஏற்படுத்தும் விதத்தில் "கோப்பியோ' என்ற அமைப்பு இந்திய மத்திய அரசின் ஏற்பாட்டின்படி செயற்படுவதோடு அதற்கான தனியான அமைச்சும் உருவாக்கப்பட்டுள்ளது.
இலங்கை வாழ் இந்திய வம்சாவளி மக்களோடு அனைத்து தமிழர்களும் இந்தியாவின் உறவுகளாய் தங்களை இனம்காட்டிக்கொள்ள ஏங்கிக்கொண்டிருக்கும் இந்நேரத்தில் தமிழகத் தலைமைகள் அதற்கு சார்பாக அழுத்தம் கொடுக்க வேண்டுமென்பதை நாங்கள் ஆவலோடு எதிர்பார்க்கின்றோம்.
இந்தியா தமது பக்கத்து நாடு என்பதால் மட்டுமல்ல வரலாற்று ரீதியாக இவர்களின் ஆணிவேர் இந்தியாவில் பதிந்துள்ளது என்ற உரிமையோடுதான் இந்திய நாட்டைப் பாசத்தோடு நேசிக்கின்றார்கள். இலங்கைத் தமிழர்கள் தமது உயிரையும் குடும்பத்தின் எதிர்காலத்தையும் பாதுகாத்துக்கொள்ளும் இயல்பான பய உணர்வோடுதான் தமிழ்நாட்டை நோக்கி கூட்டம் கூட்டமாக தம் உயிரைப் பணயம் வைத்து இன்றும்வந்து சேருகிறார்கள்.
பக்கத்து நாடு பாகிஸ்தானாகவோ பாரசீகமாகவோ இருந்திருந்தால் கூட ஈழத்தமிழர்கள் அந்நாடுகளை நோக்கித்தான் ஓட்டமெடுத்திருப்பார்கள். இனத்தாலும் உணர்வாலும் உணர்ச்சியினாலும் ஒன்றுபட்டவர்கள் என்ற உரிமையோடு தமிழ்நாட்டில் தஞ்சமடைந்தவர்கள் தமிழக அரசின் எந்த ஆதரவையும் விசேடமாக பெறவில்லை என்பதுதான் சரித்திர உண்மையாகும். ஒருசிலர் சொந்த முயற்சியினால் அல்லது பொருளாதார பலத்தினால் தலைதூக்கி இருக்கிறார்கள் என்பது கணக்கெடுப்பில் விசேடமாக கவனத்திலெடுக்கப்படக்கூடிய விடயமல்ல.
நிலைமை இவ்வாறு இருக்க, இலங்கைத் தமிழர்கள் தமிழ் நாட்டில் சொத்துடையவர்களாக இருக்கக் கூடாது என்று சம்பந்தப்பட்ட அதிகாரிகளைத் தூண்டி விடுகின்ற தோரணையில் அமைந்துள்ள தங்களின் கருத்தினை விசித்திரமானதாக மட்டுமல்ல விபரீதமானதாகவுமே உலகத் தமிழர்கள் கணிப்பார்கள்.
எனவே, தங்களின் உரை தவறாக வெளிப்படுத்தப்பட்டிருந்தால் அல்லது பிழையாக வியாக்கியானம் செய்யப்பட்டிருந்தால் அதுபற்றி விளக்கமளிக்க வேண்டிய பொறுப்பும் தேவையும் தங்களுக்கு இருக்கிறது என்பதை வருந்திய மனதோடு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.
உலகத் தமிழர்கள் அனைவரும் நிகரற்ற தமிழ் தலைவனாக தங்களை நினைக்க வேண்டிய இக்காலகட்டத்தில் அனைத்துத் தமிழர்களையும் அருவருப்போடு தலைகுனிய வைக்கின்ற ஒரு காரியம் தவறுதலாகவேனும் உங்களிடமிருந்து வெளிப்பட்டு விடக்கூடாது என்பதாலேயே இந்த பகிரங்க கடிதத்தினை அனைத்து தமிழர்களின் சார்பாகவும் தங்களுக்கு அனுப்புகின்றேன்.
Showing posts with label கருணாநிதி. Show all posts
Showing posts with label கருணாநிதி. Show all posts
Monday, June 23, 2008
Subscribe to:
Posts (Atom)