
சைவத் தமிழ்த் தொண்டே தமது உயிர் மூச்சாகக் கொண்டு வாழ்ந்த துர்க்கா துரந்தரி, சிவத்தமிழ்ச்செல்வி, சித்தாந்த சாகரம் செல்வி தங்கம்மா அப்பாக்குட்டி அவர்களின் மறைவு சைவத்தமிழ் உலகை சோகத்தில் மூழ்க வைத்திருக்கிறது.
""என் கடன் பணி செய்து கிடப்பதே'' என்ற உயர் வாக்கிற்கொப்ப மக்கள் சேவையை மகேசன் சேவையாகக் கொண்டு வாழ்ந்திருந்த அப்பெருமாட்டியின் பெருமை அனைவருக்கும் முன்னுதாரணமான ஒன்றாகும்.
பொதுவாக பெண்ணின் வாழ்வு என்பது தனது குடும்பவட்டத்துக்குள் முடங்கிவிடும் ஒன்றாகவே இருப்பது வழமையானது. ஆனால், செல்வி தங்கம்மா அப்பாக்குட்டி அவர்களது வாழ்வு, தன் வாழ்வு தன் குடும்பம் என்றில்லாது ""எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே அல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே'' என்ற உயர் இலட்சியத்துடன், சமுதயத்துடன் ஒன்றிப்பிணைந்து விளங்கியதன் காரணமாக, ஈழசைவத் தமிழ் உலகம் புத்தொளி பெற்றதென்பது மிகையான கூற்றல்ல. மல்லாகத்தில் சாதõரண மத்திய தரக்குடும்பம் ஒன்றில், 1925 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 7ஆம் திகதி தங்கம்மா பிறந்தõர். இவரது தந்தையார் பெயர் அப்பாக்குட்டி, தாயார் பெயர் தையற்பிள்ளை.
கருவில் திரு என்பது போல சிறுவயதில் இருந்தே சரஸ்வதி கடாட்சம் பெற்றிருந்த தங்கம்மா கல்வியில் திறமை பெற்றவராக விளங்கி, முதல் பரிசுகளையும் வென்றவர். பாலபண்டிதர், பண்டிதர் பரீட்சைகளிலும் தேறி, பயிற்றப்பட்ட ஆசிரியராகவும் சித்திபெற்று, சைவத்தையும் தமிழையும் பிரதானமாகக் கற்பிக்கும் சிறந்ததோர் ஆசிரியராகவும் விளங்கினார்.
அம்மையாரின் சொற்பொழிவு ஆற்றல் இறைவனின் கொடையாகும். தேர்ந்த புலமையுள்ள சைவத் தமிழ் அறிஞராக விளங்கிய இவர், தமது சிறந்த பேச்சாற்றலால் சமுதாயத்தை, ஆன்மிகரீதியிலும், இலக்கியப் பண்பாட்டு ரீதியிலும் ஈர்த்து வழிநடத்தும் ஒருவராக மிளிர்ந்தமை யாவரும் அறிந்ததே. "பளிச்' சென்று தமிழ்ப் பண்பாட்டின் உருவமாக அறிவாற்றலின் கனிவோடு ஆற்றும் பிரசங்கம், நாடெங்கணும் ஒலித்தது. இலங்கையின் தமிழ் மக்கள் வாழும் பிரதேசங்களில் எல்லாம் புராணங்கள், சைவ சித்தாந்த விளக்கங்கள், சைவத்திருமுறைகள் கோவிற்கிரியைகள், விழாச்சிறப்புகள் உட்பட பல்வேறு சமய தலைப்புக்களில் உரையாற்றி பெரும்புகழ் பெற்றார். அதனால், ஒரு கால கட்டத்தில், தங்கம்மா அப்பாக்குட்டி அவர்களின் சிறப்புரையின்றி, ஆலய விழாவில்லை, மேடை நிகழ்ச்சியில்லை என்றதோர் நிலை ஏற்பட்டிருந்ததை மறக்க முடியாது.
கற்றார்க்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு என்பதற்கு இணங்க நாட்டில் சென்ற இடமெல்லாம் சிறப்புப்பெற்ற இச்சைவத்தமிழ்ப் பெருமாட்டிக்கு, தமிழ்நாட்டின், சைவ மன்றங்கள், திருத்தலங்கள், பல்கலைக்கழகங்கள் ஆகியவற்றில் இருந்தும் சிறப்புரைகளுக்கு அழைப்புகள் விடுக்கப்பட்டமை, அவருக்கு மட்டுமன்றி, இலங்கை சைவத் தமிழ்ப் பெண்குலத்திற்கும் கிடைத்த பெருமை என்றே கூறலாம்.
அந்த வகையில் அம்மையார் சிதம்பரம், சைவ சித்தார்ந்த சமாஜ வைரவிழா, அண்ணாமலைப் பல்கலைக்கழகம், திருவிடை மருதூர், திருமறைக் கருத்தரங்கு, கும்பகோணம் திருமுறை விழா, திருவிடை மருதூர் திருவாசகவிழா சிவகங்கை சைவத் சித்தாந்த மாநாடு, புதுக்கோட்டை உலக இந்துமாநாடு, வட ஆர்க்காடு, சைவ மங்கையர் மாநாடு உட்பட பல்வேறு நகரங்களிலும் அரிய உரைகளை ஆற்றிச் சிறப்புப் பெற்றார். அவரின் அரும் பெரும் உரைகளைக் கேட்டு புளங்காங்கிதம் அடைந்த அறிஞர் பெருமக்கள் அவருக்கு தக்க பட்டங்களை அளித்துப் பெருமை கொண்டனர். சிவத்தமிழ்ச்செல்வி. துர்க்கா துரந்தரி, சித்தார்ந்த ஞானாகரம், சிவமயச் செல்வி ஆகியன இவற்றுட் சிலவாகும்.தமிழ்நாடு தவிர சிங்கப்பூர், மலேசியா, லண்டன் ஆகிய நாடுகளிலும் அம்மையாரின் பேச்சுக்கு பெரும் வரவேற்புக் கிடைத்தது. ""என்னை நன்றாக இறைவன் படைத்தனன் தன்னை நன்றாகத் தமிழ் செய்யுமாறே'' என்ற துணிந்தார் திருமூலர். சிவத்தமிழ்ச் செல்வியோ, "என்னை நன்றாக இறைவன் படைத்தனன், "தன்னை நன்றாகச் சேவிக்கத் தானே'' என்று துணிந்தாரோ! அதன் பயனாய் தனது சொற்பெருக்கு வித்துவத்தின் மூலம் கிடைத்த பொருளை பயன்படுத்தி மிகவும் சாதாரண நிலையில் இருந்த தெல்லிப்பழை ஸ்ரீதுர்க்கா தேவி ஆலயத்தை புதுப்பித்து புனருத்தாபனம் செய்து சிறப்புற நிர்வகிக்கும் இறைபணியில் தம்மையும் இணைத்துக்கொண்டார்.
ஆலய அறங்காவலர் சபையின் தலைவராக பெண்கள் பதவி வகிப்பது என்பது மிகவும் அசாதாரணமான காரியம். இத்தகையதோர் பெரும் பொறுப்பை, அறங்காவலர் சபையார் நீண்டகாலம் அம்மையார் தலையில் சுமத்தினர் என்றால் அவர் சிறந்த நிர்வாகி என்பது மட்டுமல்ல, அவர் மீது கவிந்திருந்த ஸ்ரீதுர்க்கா தேவியின் அருட் கருணை என்பதைத் தவிரவேறில்லை.
1962 ஆம் ஆண்டு அறங்காவலர் சபைப் பொருளாளராகப் பதவியேற்று, ஆலய முன்னேற்றத்திற்கு உதவியதன் பயனாய் , 1965 ஆம் ஆண்டு ஆலய கும்பாபிஷேகம் சிறப்பாக இடம் பெற்றது. 1977 ஆம்ஆண்டு அறங்காவலர் சபையின் தலைமை பொறுப்பை ஏற்ற துர்க்கா துரந்தரியின் அயராத பணிகளின் காரணமாக இவ்வாலயம், ஏனைய பல ஆலயங்களுக்கு முன்னுதாரணமாக விளங்குவதாகப் பெரியோர்கள் பாராட்டி மகிழ்கின்றனர்.தவிரவும், 1987இல் போரின் காரணமாக பல்லாயிரக்கணக்கான மக்கள் ஆலயத்தை நோக்கி ஓடிவந்த வேளை, அவர்களுக்கு உணவும் தற்காலிக தங்குமிட வசதிகளும், வழங்க சிவத்தமிழ்ச்செல்வி காட்டிய பரிவை மக்கள் நன்றியுடன் நினைவு கூருகின்றனர். ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தானத்தின் தலையாய பணியாகக் கருதப்படுவது துர்க்காபுரம் மகளிர் இல்லப் பணியாகும். இவ்வில்லம்1982 இல் ஆரம்பிக்கப்பட்டு ஆதரவற்ற சிறுமிகள் மற்றும் மகளிருக்கு ஆதரவுக்கரம் நீட்டி பராமரித்து வருகின்றது. இன்று இவ்வில்லத்தில் நூற்றுக்கு மேற்பட்ட அநாதரவான சிறுமிகள், விவாகமாகாத பெண்கள் விதவைப் பெண்கள் ஆகியோர் பராமரிக்கப்படுகின்றனர். இதற்கு பொருள் வசதிபடைத்த பலர் உதவி வருகின்றனர். இவையும் தவிர அம்மையாரின் பிறந்தநாளை அர்த்தமுள்ளதாக்க நிறுவப்பட்ட அறக்கட்டளை மூலம், வைத்தியசாலைகளுக்கு அன்பளிப்புச் செய்தல், ஏழை மாணவர்களுக்கு உதவுதல், சிறந்த நூல்களை வெளியிடுதல், முதிய அறிஞர்களைப் பாராட்டுதல் போன்ற நற்பணிகளையும் ஆற்றிவந்தவர். இவை அம்மையாரின் சில முக்கிய பணிகள் மட்டுமே என்பதைக் குறிப்பிடல் வேண்டும்.
சுமார் நான்கு தசாப்தகாலமாக தெல்லிப்பழை ஸ்ரீதுர்க்காதேவி ஆலயத்தின் மூலமாக தன்னலமற்ற சைவத்தமிழ்ப் பணி ஆற்றிய துர்க்கா துரந்தரிக்கு சைவத்தமிழ் உலகம் காட்டிய மதிப்பும், நன்றியுணர்வும் அளப்பரியது. அம்மையாருக்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், கலாநிதிப் பட்டம் வழங்கிக் கௌரவித்தது. சிவத்தமிழ்ச் செல்வியின் தனித்துவமான பணிகள் பற்றி பேராசிரியர் கா.சிவத்தம்பி அவர்கள் குறிப்பிடுகையில், ""யாழ்ப்பாணத்தின் இந்து மதப் பண்பாட்டில், அண்மைக்காலத்தில் இரு முக்கிய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.
ஒன்று, இந்துக்களால் வழிபடப்பெறும் ஒருபெண் தெய்வத்தின் வழிபாடு பற்றியது. செல்வி தங்கம்மா அப்பாக்குட்டி என்ற ஒரு தமிழாசிரியையின் ஆன்ம யாத்திரையினூடாக அவரது புலமை முதிர்ச்சியின் வழியாக அவரை வழிநடத்தும் சமூக, மத தரிசனத்தினூடாக இந்த இரு மாற்றங்களும் நிறைவேறியுள்ளன'' என இங்கு குறிப்பிடுதல் சாலப்பொருத்தமே.எது நடக்க வேண்டுமோ அது நன்றாகவே நடந்தது, இனி எது நடக்க வேண்டுமோ, அது நன்றாகவே நடக்கும்'' என்று கீதையின் நாயகன் அருளியது போல, அம்மையாரின் பணிகள் சிறப்பாகவே நடந்தன.
இனி அவர் விட்டுச் சென்ற அறப்பணிகளை நல்ல முறையில் தொடர்ந்து கொண்டு நடத்துவதே அன்னாருக்குச் செய்யும் கைமாறாக அமையும்.
