Showing posts with label கிழக்குத்தேர்தல். Show all posts
Showing posts with label கிழக்குத்தேர்தல். Show all posts

Thursday, May 15, 2008

முதலமைச்சராக பிள்ளையான் பதவியேற்கும் சாத்தியம்

கிழக்கு மாகாண முதலமைச்சராக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் தலைவர் பிள்ளையான் (சிவனேசதுரை சந்திரகாந்தன்) நியமிக்கப்படவுள்ளார். இவர் இன்னும் சில தினங்களில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொள்வார் என நம்பகரமாக தெரியவருகின்றது. கிழக்கு மாகாண முதலமைச்சராக பிள்ளையானையா அல்லது ஹிஸ்புல்லாவையா நியமிப்பது என்பது தொடர்பில் கடந்த சில நாட்களாக பெரும் இழுபறி நிலை காணப்பட்டது. லண்டனுக்கு விஜயம் செய்திருந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று இரவு நாடு திரும்பியிருந்தார். நாடு திரும்பிய அவர் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் தலைவர் பிள்ளையானை சந்தித்து பேசியிருந்தார்.

இதனையடுத்து முதலமைச்சர் நியமனம் தொடர்பில் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் முஸ்லிம் அமைச்சர்கள், பிரதி அமைச்சர்களையும் இன்று மாலை அலரிமாளியையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சந்தித்து பேசியுள்ளது.

எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாவை முதலமைச்சராக நியமிக்க வேண்டுமென ஜனாதிபதியை வலியுறுத்தும் கடித்ததில் கையொப்பமிட்டிருந்த அமைச்சர்களான எம்.எஸ். அமீரலி, ஏ.எல்.எம்.அதாவுல்லா, றிசாட் பதியுதீன், ஏ.எச்.எம். பௌசி, நஜீப்.ஏ.மஜீத், எம்.எச்.மொஹமட் பிரதியமைச்சர்களான கே.ஏ.பாயிஸ், எஸ்.நிஜாமுதீன்,, மயோன் முஸ்தபா, பைசர் முஸ்தபா, ஹுசைன் பைலா மற்றும் மேல்மாகாண ஆளுநர் அலவி மொலானா, ஜனாதிபதி ஆலோசகர் ஏ.எச்.எம்.அஸ்வர் போன்றோர் கலந்து கொண்டதாக தெரியவருகிறது. ஆயினும் ஈரான் சென்றிருந்த அமைச்சர் பேரியல் அஷ்ரபும் கொழும்புக்கு வெளியேயிருந்த அமைச்சர் சேகு இஸ்ஸதீனும் இச்சந்திப்பில் கலந்து கொள்ளவில்லை.

இச்சந்திப்பின் போது ஏ.எல்.எம். ஹிஸ்புல்லாவை முதலமைச்சராக நியமிக்குமாறு முஸ்லிம் அமைச்சர்கள் கோரியுள்ளனர். ஆனால், கிழக்கு மாகாண முதலமைச்சராக பிள்ளையானை நியமிக்க வேண்டியுள்ளமைக்கான காரணங்களை ஜனாதிபதி, முஸ்லிம் அமைச்சர்களுக்கு எடுத்துக் கூறியதாக தெரிவிக்கப்படுகிது.

இதேவேளை, பிள்ளையானை முதலமைச்சராக்க வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் சிங்கள கட்சிகள் வலியுறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள் ஜனாதிபதி முன்னிலையில் நாளை பிற்பகல் பதவியேற்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முதலமைச்சர் யார்?என்பதற்கான விடை நாளை கிடைக்கும்


கிழக்கு மாகாண முதலமைச்சர் யார் என்பதை அரசாங்கம் நாளை அறிவிக்கும் என,அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான அனுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்துள்ளார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு இன்று பிற்பகல் அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்றபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.ஜனாதிபதி இன்று நாடு திரும்பியுள்ளார்.கிழக்கு மாகாண முதலமைச்சர் தெரிவு தொடர்பாக ஆராயும் முக்கிய கூட்டம் இன்று மாலை ஜனாதிபதி தலைமையில் நடைபெறும்.பாராளுமன்ற முஸ்லிம் உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் இக்கூட்டத்தில் கலந்துகொளவர்.கிழக்கு மாகாண முதலமைச்சர் யார் என்பது இக்கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்..

Tuesday, May 13, 2008

பிள்ளையான் முதலமைச்சரானால் எல்லா முஸ்லிம் அமைச்சர்களும் பதவி விலகுவர்

கிழக்கில் இயங்கிவரும் சிறிலங்கா இராணுவத்தின் துணை இராணுவக்குழுவின் பிள்ளையான், கிழக்கு மாகாண முதலமைச்சரானால் அரசில் அங்கம் வகிக்கும் எல்லா முஸ்லிம் அமைச்சர்களும் பதவி விலகுவார்கள் என்று "த மோர்ணிங் லீடர்" வார ஏடு தெரிவித்துள்ளது. இது தொடர்பில் அது மேலும் தெரிவித்துள்ளதாவது:

முஸ்லிம் வேட்பாளரான எம்.எல்.எம்.ஹிஸ்புல்லாவைப் புறக்கணித்து துணை இராணுவக்குழுவின் தலைவரான பிள்ளையான், கிழக்கு மாகாண முதலமைச்சரானால் அரசில் அங்கம் வகிக்கும் அனைத்து முஸ்லிம் அமைச்சர்களும் பதவி விலகுவார்கள்.

முஸ்லிம் காங்கிரசில் இருந்து பிரிந்து சென்று அரசில் இணைந்து கொண்டுள்ள இரு அமைச்சர்களும் பதவி விலகுவார்கள் என தெரியவந்துள்ளது. முஸ்லிம் தலைவர்களின் இந்த தீர்மானம் அரசுக்கு இன்று தெரிவிக்கப்படவுள்ளது.

எம்.எல்.எம்.ஹிஸ்புல்லாவை முதலமைச்சராக நியமிக்குமாறு அரச தலைவருக்கு அனுப்பப்படவுள்ள கடிதத்தில் முஸ்லிம் அமைச்சர்களான எம்.எச்.மொஹமட், ரிசார்ட் பதியுதீன், அமீர் அலி, எ.எல்.எம்.அதாவுல்லா, பேரியல் அஸ்ரப், கே.பசீர், எம். நிஜாமுடீன், குசேன் பைலா, பைசர் முஸ்தப்பா, அப்துல் மஜூட், மயோன் முஸ்தப்பா ஆகியோர் கையெழுத்திட்டுள்ளனர்.

கிழக்கில் நடைபெற்ற மாகாண சபை தேர்தலில் அரச கூட்டணியில் 8 முஸ்லிம் பிரதிநிதிகளும், 6 துணை இராணுவக்குழு உறுப்பினர்களும், 4 சிங்களவர்களும் தெரிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Muslim ministers to resign if Pillayan appointed CM

All Muslim Ministers in government have decided to resign their portfolios if newly elected provincial Councilor M.L.M. Hizbullah is not appointed Chief Minister of the Eastern Province, The Morning Leader learns.

Informed sources said several Muslim Ministers in Government including those who broke away from the Muslim Congress met yesterday at Resettlement Minister Rishard Bathiudeen’s ministry and arrived at this decision. The Morning Leader learns the decision of the Muslim Ministers will be communicated to the Government today.

Ministers M.H. Mohomad, Rishard Bathiudeen, Ameer Ali, A.L.M. Athaullah, Ferial Ashraff, K. Baiz, M. Nijamudeen, Hussein Bhaila, Faizer Mustapha, Abdul Mmajeed and Myown Mustapha have signed a letter to be sent to the President requesting him to appoint Hizbullah as the chief minister of the Eastern Province immediately in keeping with the assurance given by him that the community that returns the highest number of members to the council would be given the chance to appoint a chief minister to the province.

The Muslim Ministers who had several rounds of discussions with Hizbullah on the issue are making their case for a Muslim Chief Minister on the premise that the President and MP Basil Rajapakse had agreed before the election at a joint meeting with Pillayan and Hizbullah that a member of the community which returns the largest number of members will be appointed Chief Minister.

The UPFA returned eight Muslim members, six Tamils representing the TMVP and four Sinhalese.

The Morning Leader also learns that Minister Maithripala Sirisena had contacted newly elected provincial council member of the UPFA Trincomalee District Hassan Moulavi yesterday and requested for an affidavit recommending Pillayan to be appointed as Chief Minister. It is learnt Moulavi has refused the request stating he cannot let down his community.

Sirisena’s call to Hassan Moulavi followed an earlier call by the Governor of the Eastern Province Mohan Wijewickrema. Hassan Moulavi had told the Governor that he was supposed to be independent and should not make such requests.

themorningleader

தேர்தல் அமைதியானதும் நீதியானதும் சுதந்திரமானதுமாக இடம்பெற்றது

தேர்தலை கண்காணிப்பதற்கு எம்மிடம் போதியளவு கண்காணிப்பாளர்கள் இருக்கவில்லை. 17 கண்காணிப்பாளர்களும் மூன்று குழுக்களாக ஒவ்வொரு மாவட்டத்திலும் கண்காணிப்பை மேற்கொண்டோம். ஆனாலும், எமது அவதானிப்புகளின்படி கடந்த 10ஆம் திகதி இடம்பெற்ற கிழக்கு மாகாண சபை தேர்தல் அமைதியானதும் நீதியானதும் சுதந்திரமானதுமாக இடம்பெற்றது என்று ஆசிய தேர்தல் கண்காணிப்பு அமைப்பு தெரிவித்தது.

கிழக்கு மாகாண சபை தேர்தலில் மேற்கொண்ட அவதானிப்புக்கள் தொடர்பாக தெளிவுபடுத்தும் ஊடகவியலாளர் மாநாடு நேற்று முற்பகல் கொழும்பு கலதாரி ஹோட்டலில் நடைபெற்றது.

அதில் பிலிப்பைன்ஸின் முன்னாள் தேர்தல் ஆணையாளர் ரெறிசிற்றா லியாக்கோ புளோறஸ், ஆப்கானிஸ்தான் தேர்தல் ஆணையகத்தின் பிரதி தலைவர் ஜெனரல் அயூப் அஸில், நேபாள தேர்தல் ஆணையகத்தின் தலைவர் யூஷா ஆகியோரின் தலைமையில் பத்து ஆசிய நாடுகளைச் சேர்ந்த 17 கண்காணிப்பாளர்களும் கலந்து கொண்டனர்.

இங்கு ஆசிய தேர்தல் கண்காணிப்பு அமைப்பு வெளியிட்ட தேர்தல் கண்காணிப்பு அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: கடந்த பத்தாம் திகதி திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களை உள்ளடக்கிய கிழக்கு மாகாண சபைத் தேர்தல் அமைதியாகவும் நீதியானதும் சுதந்திரமானதுமாக நடைபெற்றது. அரசாங்கத்தின் ஒவ்வொரு மட்டத்திலும் உள்ளவர்கள் தேர்தலை சுமூகமாக நடத்துவதற்கு தமது பங்களிப்பை சிறப்பாக வழங்கினார்கள்.

வாக்களிப்பு நிலையங்களில் பணியாற்றியவர்கள் பிரதேசத்தில் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டவர்கள் உள்ளிட்ட தேர்தல் கடமைகளை மேற்கொண்ட அனைவரும் மிகுந்த பொறுப்புணர்வுடன் செயற்பட்டனர். தேர்தல் ஆணையாளரின் திறமையான வழிகாட்டுதலின் கீழ் அனைத்து தேர்தல் நடவடிக்கைகளும் சட்டம் ஒழுங்கிற்கு அமைவாக இடம்பெற்றது.

மேற்படி தேர்தல் வெற்றிகரமானதாக அமைவதற்கு கிழக்கு மாகாண மக்களின் ஒத்துழைப்பும் ஆர்வமுமே காரணமாகும். இறுதியாக கிழக்கு மாகாண தேர்தல் நீதியானதாகவும், சுதந்திரமானதாகவும் நடைபெற்றது என்பதே எமது இறுதிமுடிவாகும். ஊடகவியலாளர் கேள்வி இவ்வறிக்கையை வெளியிட்ட பின்னர் அது தொடர்பில் ஊடகவியலாளர்கள் காரசாரமாக வினாக்களை தொடுத்தனர்.

தேர்தல் முறைகேடுகளை ஊடகவியலாளர்கள் நேரடியாக கண்டுள்ளதாகவும் பவ்ரல் அமைப்பு வாக்களிப்பு தினத்தில் வன்முறைகள் இடம்பெற்றுள்ளதாகவும், கூறிய ஊடகவியலாளர்கள் அறிக்கை குறித்து தெளிவுபடுத்த வேண்டும் என கோரினர். எனினும் சில கேள்விகளுக்கு பதிலளித்த பின்னர் ஊடகவியலாளர் மாநாடு நிறுத்தப்பட்டது.

இதேவேளை இப்பிரச்சினை குறித்து கேசரிக்கு கருத்து தெரிவித்த பிலிப்பைன்ஸின் முன்னாள் தேர்தல் ஆணையாளர் ரெறிசிற்றா லியாக்கோ புளோறஸ் தேர்தல் ஆணையகத்தின் அழைப்பின் பேரிலேயே கிழக்கு மாகாண சபை தேர்தலை கண்காணிப்பதற்காக நாம் இலங்கைக்கு வந்தோம். கிழக்கு மாகாணம் தொடர்பாகவோ, மேற்படி தேர்தல் தொடர்பாகவோ எமக்கு எந்த பின்னணியும், அது தொடர்பான அறிவும் இல்லையென்பது உண்மையே.

அத்தோடு எம்மிடம் போதியளவு கண்காணிப்பாளர்கள் இருக்கவில்லை. 10நாடுகளை சேர்ந்த 17 கண்காணிப்பாளர்களே கடமையில் ஈடுபட்டனர். இதனால், நாம் மூன்று குழுக்களாக பிரிந்து ஒவ்வொரு மாவட்டத்திலும் கடமையில் ஈடுபட்டோம்.

இதனால் மாவட்டத்திலுள்ள சகல வாக்களிப்பு நிலையங்களையும் ஒரே நேரத்தில் கண்காணிக்க முடியவில்லை. நாம் எழுமாற்றாக பல்வேறு வாக்களிப்பு நிலையங்களுக்கு சென்று அவதானித்தோம். எமது அவதானிப்புக்களையே நாம் இங்கு தெரிவித்தோம்.

நாம் அரசாங்கத்துக்கோ அல்லது வேறுயாருக்குமோ சார்பானவர்கள் அல்ல. எமக்கு பல்வேறு நாடுகளில் தேர்தல்களை கண்காணித்த அனுபவமுண்டு.

இங்கு எமது அவதானிப்பின்போது எந்தவித தேர்தல் வன்முறையும் இடம்பெறவில்லை. தேர்தல் நீதியானதும் சுதந்திரமானதுமாக நடைபெற்றது என்று தெரிவித்தார்.

கிழக்கு மாகாண முதலமைச்சராக மௌனகுருசாமி?

கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவி தொடர்பாக பிள்ளையானுக்கும், ஹிஸ்புல்லாவிற்கும் இடையில் ஏற்பட்டுள்ள போட்டி நிலை இனப்பிரச்சினைக்கு வழியமைக்கக்கூடும் என்பதால் வேறொருவருக்கு முதலமைச்சர் பதவியை வழங்குவது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாகத் தெரியவருகிறது.

கிழக்கு மாகாணசபை முதலமைச்சர், 4 அமைச்சுப் பதவிகள், தவிசாளர் உள்ளிட்ட பிரதான 6 பதவிகளையும் இன விகிதாசார அடிப்படையில் மேற்கொள்ள ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளதாகத் தெரியவருகிறது.

ஜனாதிபதியின் சிரேஸ்ட ஆலோசகர் பெசில் ராஜபக்ஸ தலைமையில் இந்தப் பதவி நியமனங்கள் குறித்து விசேட கலந்துரையாடலொன்று நடைபெற்று வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் ஆலோசனைப்படி, இம்முறை தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் சார்பில் போட்டியிட்ட மௌனகுருசாமியை முதலமைச்சராக நியமிப்பது குறித்து ஆராயப்பட்டு வருவதாகத் தெரியவருகிறது.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பணிப்புரைக்கு அமைய மோனகுருசாமியை முதலமைச்சராக நியமிப்பது பற்றி ஆராயப்பட்டிருப்பதாக ஆங்கில இணையத்தளமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. விடுலைப் புலிகளுக்கு எதிரான தமிழர்கள் முன்னாள் மாவட்ட செயலாளரை முதலமைச்சராக நியமிக்குமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்திருப்பதாக அந்த இணையம் தெரிவித்துள்ளது.

கடந்த 10ஆம் திகதி நடைபெற்ற கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் முன்னாள் மாவட்ட செயலாளர் போட்டியிட்டபோதும் கணிசமான வாக்குகளைப்பெற்று தெரிவுசெய்யப்படவில்லை. எனினும், ஆளும் கட்சிக்குக் கிடைத்திருக்கும் இரண்டு மேலதிக ஆசனங்களில் ஒன்றின் மூலம் மோனகுருசாமியை மாகாணசபைக்குள் அனுப்புவதற்கு அரசாங்கம் ஆராய்ந்து வருவதாகக் கூறப்படுகிறது.

போனஸ் ஆசனங்களில் ஒன்றிற்கு மௌனகுருசாமியை நியமிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாணசபைத் தேர்தல்களில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் சார்பில் மௌனகுருசாமி போட்டியிட்ட போதிலும் உறுப்பினர் பதவி கிடைக்கப்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது பாதுகாப்பு அமைச்சின் பாதுகாப்பின் கீழ் மௌனகுருசாமி காணப்படுவதாகத் தெரியவருகிறது.

நானே முதலமைச்சர்;தட்டிப்பறிக்க விடமாட்டேன்

கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவியை பிள்ளையான் தட்டிப்பறிக்க ஒரு போதுமே இடமளிக்கப்படாதென தெரிவித்த எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா, நாளை புதன்கிழமை தான் முதலமைச்சராக பதவியேற்பது உறுதியென உறுதிபடத் தெரிவித்தார்.

இதுதொடர்பாக அவர் நேற்று திங்கட்கிழமை மேலும் தெரிவித்ததாவது;

கிழக்குத் தேர்தலில் தமிழ், முஸ்லிம் சமூகம் சார்பில் அதிக ஆசனங்களைப் பெறுபவரே முதலமைச்சராக நியமிக்கப்படுவாரென ஜனாதிபதி கூறியிருந்தார். அரசில் அங்கம் வகிக்கும் முஸ்லிம் கட்சிகளுடன் இதுபற்றிய ஒப்பந்தமும் கைச்சாத்திடப்பட்டது.

கிழக்கில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பில் 8 முஸ்லிம்கள் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர். 6 தமிழர்களும் தெரிவாகியுள்ளனர். முஸ்லிம் சமூகம் அதிக பிரதிநிதிகளை பெற்றிருக்கும் நிலையில், நானே முதலமைச்சராக வரவேண்டும். முஸ்லிம்கள் அதிக ஆசனங்களைப் பெற்றிருந்தால் ஹிஸ்புல்லாவே முதலமைச்சரெனவும் ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது.

இந்நிலையில், எவ்வாறு முதலமைச்சர் பதவியை பிள்ளையான் கோரமுடியும்? முதலமைச்சர் பதவியைக்கோர அவருக்கு எந்தவொரு அருகதையும், உரிமையும் கிடையாது.

அவர் முதலமைச்சர் பதவியை தட்டிப்பறிக்க முயல்கிறார். இதனை நாம் ஒருபோதுமே அனுமதிக்கமாட்டோம்.

கிழக்கு மாகாணத் தேர்தலில் 6 தமிழ் சகோதரர்களே தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இதனை பிள்ளையான் ஞாபகத்தில் கொள்ள வேண்டும். நாளை நான் முதலமைச்சராக பதவியேற்பேன். இதனை அவரினால் தடுக்கமுடியாது.

பிள்ளையானுக்காக எந்த விட்டுக்கொடுப்பையும் செய்வதற்கு நான் தயாரில்லை. நானும், முஸ்லிம் அமைச்சர்களும் உறுதியான நிலைப்பாட்டில் உள்ளோம் என்றார்.

இதேவேளை, கிழக்கு மாகாணத்தின் பல்வேறு பிரதேசங்களில் ஹிஸ்புல்லாவை முதலமைச்சராக்கப்பட வேண்டுமென்ற கோரிக்கை வலுப்பெற்றுள்ளதாகவும், வீதிகளில் பொதுமக்கள் பட்டாசு கொளுத்தி, வாகனப்பேரணி சென்று தமது ஆதரவை ஹிஸ்புல்லாவுக்கு தெரியப்படுத்தியிருப்பதாகவும் அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Monday, May 12, 2008

பிள்ளையானா? ஹிஸ்புல்லாவா?

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் முதலமைச்சர் தெரிவில் மூன்று முக்கிய விடயங்கள் கவனத்தில் கொள்ளப்படவிருப்பதாக அரசாங்கம் தெரிவித்திருக்கிறது.

சுதந்திர முன்னணி சார்பில் தமிழ், முஸ்லிம் சமூகங்களின் சார்பில் பிள்ளையானும் ஹிஸ்புல்லாவும் முதலமைச்சர் வேட்பாளர்களாக பிரேரிக்கப்பட்டிருந்தனர். வாக்களிப்பு முடிவுகளின் அடிப்படையில் பிள்ளையான் 41 ஆயிரத்து 936 வாக்குகளையும் ஹிஸ்புல்லா 35 ஆயிரத்து 949 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.சுதந்திர முன்னணி தேர்தல் பிரசார காலத்தில் தமது கட்சிசார்பில் யார் கூடிய வாக்குகளைப் பெறுகிறாரோ (பிள்ளையான் அல்லது ஹிஸ்புல்லா) அவர்களே முதலமைச்சர் எனப் பிரசாரம் செய்தது.

அத்துடன் சுதந்திர முன்னணி சார்பில் எந்த சமூகப் பிரதிநிதிகளுக்கு அதிக ஆசனங்கள் கிடைக்கிறதோ அவர்களின் சமூகத்தவரே முதலமைச்சரெனவும் இருவகையான பிரசாரங்களையும் முன்னெடுத்திருந்தது.

முஸ்லிம்கள் அதிக பிரதிநிதிகளையும் பிள்ளையான் அதிக விருப்பு வாக்குகளையும் பெற்றிருக்கும் நிலையில், யாருக்கு முதலமைச்சர் பதவி வழங்குவதென்ற புதுச்சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பிள்ளையானுக்கு முதலமைச்சர் பதவியை வழங்கி சர்வதேச மட்டத்தில் புலிகளுக்கெதிரான பிரசாரத்தை தீவிரப்படுத்த அரசாங்கம் முயலுமெனவும் தீவிர சிங்கள கடும் போக்குக்கட்சியும் ஆளும் கூட்டணியின் பங்காளியுமான ஜாதிக ஹெல உறுமய, பிள்ளையானே முதலமைச்சராக தெரிவு செய்யப்பட வேண்டுமென பிரசாரம் செய்தநிலையில், அவர் முதலமைச்சராகுவதையே அக்கட்சி விரும்புவதாகவே தெரிவிக்கப்படுகிறது.

மேலும் ஆளும் தரப்பு வெற்றிக்கு ஹிஸ்புல்லாவை விட பிள்ளையானே பெரும் பங்காற்றியுள்ளதாகவும் சிலர் சுட்டிக்காட்டினர்.

ஆனாலும் அரசின் 3 பங்காளி முஸ்லிம் கட்சிகள் ஹிஸ்புல்லா முதலமைச்சராக்கப்பட வேண்டுமென வலியுறுத்தியுள்ளன.

முதலமைச்சர் பதவிப் பகிர்வு போலவே மாகாண அமைச்சுப் பதவிகளிலும் சிக்கல் தீவிரமடையுமென அறியவரும் நிலையில் சிலர் பிள்ளையானுக்கும் ஹிஸ்புல்லாவுக்கும் தலா இரண்டரை வருட காலம் முதலமைச்சர் பதவியை வழங்கலாமெனவும் ஆலோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது பற்றி பசில் ராஜபக்ஷ எம்.பி.யுடன் தொடர்பு கொண்டு கேட்டபோது;

"கிழக்கின் முதலமைச்சர் யார் என்பதை நாம் இதுவரை தீர்மானிக்கவில்லை. ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி மற்றும் முன்னணி சார்பில் வெற்றியீட்டிய உறுப்பினர்களின் ஆலோசனையுடன், இவர்களையும் கவனத்திலெடுத்து முதலமைச்சரை தீர்மானிப்போம்" என்றார்.

அத்துடன் ரணில், பிரபா, ஹக்கீம் கூட்டணி இத்தேர்தலில் மண் கௌவியுள்ளதாகவும் அவர்கள் கிழக்கு மக்களினால் நிராகரிக்கப்பட்டுள்ளதாகவும் கிழக்கிலிருந்து புலிகளை விரட்டி அங்கு ஜனநாயகத் தேர்தலை நடத்த காரணமாகமைந்த முப்படையினருக்கு அரசாங்கம் வீர வணக்கம் செலுத்துவதாகவும் அவர் மேலும்



பிள்ளையானுக்கு அதிக விருப்பு வாக்கு ஹிஸ்புல்லாஹ் மூன்றாவது இடத்தில்



கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுத்திரக் கூட்டமைப்பின் முதன்மை வேட்பாளரான பிள்ளையானே (சிவநேசத்துரை சந்திரகாந்தன்) அதி கூடிய விருப்பு வாக்கைப் பெற்றுள்ளார்.
மற்றொரு முதலமைச்சர் வேட்பாளரான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் 3 ஆவது அதிகூடிய விருப்பு வாக்கையே பெற்றுள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து தெரிவு செய்யப்பட்ட 11 உறுப்பினர்களது விபரங்களும் அவர்களுக்கு கிடைத்த விருப்பு வாக்குகளின் எண்ணிக்கையும் இங்கு தரப்படுகிறது.

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு

1. பிள்ளையான் (இல.13). 41,931 2. ஜவாஹிர் சாலி முஹமட் (இல.1)- 36,419 3. எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் (இல.2) - 35,949 4. எம்.எஸ்.சுபைர் (இல.11)- 34,318 5. ஜெயம் (இல.08) - 23,456 6.பிரதீப் மாஸ்ரர் (இல.04)- 22,176

ஐ.தே.க.

1.பஷீர் சேகுதாவுத் (இல.01) - 23,342 2.அமீர் தீன் (இல.02) - 12,157 3. சசிதரன் (இல.03). 11,021 4. மாசிலாமணி (இல.10)- 8,042 தமிழ் தேசிய ஜனநாயக முன்னணி 1.துரைரெட்ணம் (இல.01)- 1,752.

Sunday, May 11, 2008

ஹிஸ்புல்லாவை விட பிள்ளையானுக்கு அதிக வாக்குகள்

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு சார்பில் போட்டியிட்ட தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி வேட்பாளர் குழுத்தலைவர் சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்), அந்த மாவட்டத்தில் விருப்பு வாக்குகளில் முதல்நிலை பெற்றிருக்கின்றார்.
எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா 3ஆவது இடத்தையே பெற்றார்.
ஆளும் தரப்பின் வேட்பாளர் பட்டியலில் பிள்ளையான் 41 ஆயிரத்து 936 வாக்குகளையும் அடுத்து ஜே.எஸ்.மொகமட் 36 ஆயிரத்து 419 விருப்பு வாக்குகளையும், எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா 35 ஆயிரத்து 949 விருப்பு வாக்குகளையும் பெற்றுள்ளனர்.

இதேவேளை, மட்டக்களப்பு மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் போட்டியிட்ட முதன்மை வேட்பாளரும் முஸ்லிம் காங்கிரஸ் தவிசாளருமான பஷீர் சேகுதாவூத் 23 ஆயிரத்து 342 விருப்பு வாக்குகளைப் பெற்று தனது கட்சி சார்பாக முதலிடத்தைப் பிடித்துள்ளார். இந்தப் பட்டியலில் போட்டியிட்ட வெள்ளத்தம்பி அமீர் டீன் 12 ஆயிரத்து 157 விருப்பு வாக்குகளைப் பெற்று 2ஆம் இடத்தையும், ஐ.தே.க. வேட்பாளர்களான அரசரட்ணம் சசிதரன் 11 ஆயிரத்து 21 விருப்பு வாக்குகளையும், ரி.ஏ.மாசிலாமணி 8 ஆயிரத்து 42 விருப்பு வாக்குகளையும் பெற்றுள்ளனர்.

முதலமைச்சர் பதவி எனக்குத்தான்

"கிழக்கு மாகாண சபைத் தேர்தலின் முடிவுகளின்படி மட்டு. மாவட்டத்தில் அதிகளவிலான வாக்குகளை எனக்கு மக்கள் அளித்திருக்கிறார்கள். அந்த வகையில் முதலமைச்சர் பதவி எனக்குக் கிடைப்பதற்கான சந்தர்ப்பம் மிக அதிகமாகக் காணப்படுகிறது."

இவ்வாறு கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் ஆளுங்கட்சி சார்பாகப் போட்டியிட்டு வெற்றியீட்டி விருப்பு வாக்குகளில் முதலிடம் பிடித்த தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் வேட்பாளர் குழுத் தலைவர் சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) நம்பிக்கை வெளியிட்டார்.

"இந்த விடயம் தொடர்பில் நாங்கள் எல்லோரும் இதயசுத்தியுடன் ஒன்றுகூடி கலந்தாலோசித்த பிற்பாடு காலத்திற்கேற்றவாறு முடிவு எடுப்போம். அந்த அடிப்படையில் இதில் நிச்சயமாக எங்களுக்குச் சார்பானதொரு முடிவு வரும் என்று நாங்கள் காத்திருக்கின்றோம்" என்றும் பிள்ளையான் குறிப்பிட்டார்.
பி.பி.ஸி. தமிழோசைக்கு கிழக்கு மாகாண சபைத் தேர்தல் முடிவுகள் தொடர்பாக நேற்றிரவு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

"தேர்தலில் வன்முறைகள் மற்றும் முறைகேடுகள் என்பன நடந்தன எனக்கூறி சில இடங்களில் மறுவாக்குப்பதிவு நடத்தவேண்டும் எனக்கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அவ்வாறு மறுவாக்குப் பதிவு இடம்பெறுமானால் அதை நீங்கள் முழு மனதோடு ஏற்றுப் பங்கேற்பீர்களா என்று பி.பி.ஸி. செய்தியாளர் கேட்டதற்கு,

"என்னையும் எனது கட்சியையும் பொறுத்தமட்டில் அப்படி முறைகேடுகள் நடந்ததாகத் தெரியவில்லை. அப்படி நடந்திருந்தால் ஒரு சாரார்தான் அதிகப்படியான ஆசனங்களைப் பெற்றிருக்கவேண்டும். எதிர்பார்த்ததைவிட எதிர்க்கட்சியினர் அதிக ஆசனங்களைப் பெற்றிருப்பதை மகிழ்ச்சியான விடயமாகத்தான் நான் பார்க்கின்றேன். இதனால், இங்கு மற்றுமொரு தேர்தல் நடத்துவதற்கான வாய்ப்புகள் இல்லை" என்றார்.

Saturday, May 10, 2008

கிழக்கில் ஆளும் தரப்பின் வெற்றியே பிரபாவின் மாபெரும் தோல்வியாகும்!

"தொப்பிகலவில் ஏற்பட்ட தோல்வியோ அல்லது கிளிநொச்சி, முல்லைத்தீவில் ஏற்படும் தோல்வியோ பிரபாகரன் சந்திக்கும் உண்மையான தோல்வியல்ல. கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் அரசு அடையப்போகும் வெற்றிதான் பிரபாகரனுக்கு ஏற்படப்போகும் மாபெரும் தோல்வியாகும்.''
இவ்வாறு அரசு நேற்று அறிவித்தது.

ஐ.தே.கட்சி முஸ்லிம் காங்கிரஸ் கூட்டணி இத் தேர்தலில் வெற்றிபெற்றால் வடக்கு கிழக்கை மீண்டும் இணைப்பதற்கான நடவடிக்கையில் அக்கூட்டணி ஈடுபடும் என்றும் அரசு அறிவித்துள்ளது. தேர்தலில் அரசுக்குக்கிட்டும் வெற்றி சமாதான முன்னெடுப்பில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் அரசு மேலும் அறிவித்துள்ளது.

அரசால் நேற்றுக் கொழும்பில் நடத்தப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய அமைச்சர் டலஸ் அழகப்பெருமவே இவ்வாறு கூறினார். அரசின் நிலைப்பாடு தொடர்பாக அவர் அங்கு மேலும் கூறியவை வருமாறு:

கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் நாம் வெற்றிபெறப் போவது உறுதி செய்யப்பட்டுவிட்டது. இந்த வெற்றிமூலம் இலங்கையில் புதிய அரசியல் கலாசாரம் ஒன்று தொடங்கப்போகிறது.
பிரபாகரன் தொப்பிகலவில் எதிர்கொண்ட தோல்வியோ அல்லது வடக்கில் எதிர்கொண்டு வருகின்ற தோல்வியோ உண்மையான தோல்வியல்ல. இத் தேர்தலில் நாம் அடையப்போகும் வெற்றிதான் பிரபாகரன் எதிர்நோக்கப்போகும் உண்மையான தோல்வியாகும்.

இத் தேர்தலில் இணைந்து போட்டியிடும் ஐக்கிய தேசியக் கட்சியும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும் வெற்றிபெற்றால் பிரிக்கப்பட்ட வடக்கு கிழக்கை மீண்டும் இணைக்க அவை நிச்சயம் நடவடிக்கை எடுக்கும்.

அவ்வாறானதொரு சதித்திட்டத்திற்கு இடமளித்துக் கிழக்கு மக்களை நாம் மீண்டும் சிக்கலில் மாட்டவைக்க மாட்டோம்.

பிரபாகரனுடன் ஒப்பந்தங்களைச் செய்தவர்கள் ரணிலும் ஹக்கீமும் மட்டும்தான். அந்த ஒப்பந்தத்தின்படி அவர்கள் வடக்கு கிழக்கை மீண்டும் இணைக்க நடவடிக்கை எடுப்பர்.
ஐ.தே.கட்சி முஸ்லிம் காங்கிரஸ் கூட்டணிக்கே வாக்களிக்க வேண்டும் என்று புலிகள் சார்பு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கிழக்கு மக்களைக் கேட்டுள்ளது.

இதன்மூலம் ஐ.தே.கட்சி இரகசிய ஒப்பந்தம் ஒன்றைப் புலிகளுடன் செய்துகொண்டே இத் தேர்தலில்போட்டியிடுகிறது என்பது தெளிவாகிறது.

ஐ.தே.கட்சியில் போட்டியிடும் தமிழர்க்கு முதலமைச்சர் பதவி வழங்கப்போவதாக ரணில் ஒருபோதும் சொல்லவில்லை. அவரது விருப்பம் ஹக்கீமை முதலமைச்சராக்குவதுதான். என்றார்.

இச்சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய அமைச்சர் நவீன் திஸாநாயக்க கூறியவை வருமாறு:

ஹக்கீம் இல்லாவிட்டால் ஐ.தே.கட்சியால் கிழக்கில் போட்டிபோட முடியாது. இதனால் ஹக்கீமுக்கு ரணில் எல்லாவற்றையும் விட்டுக்கொடுத்துள்ளார்.
அவர்கள் இருவருக்குமிடையில் இரகசிய ஒப்பந்தம் ஒன்று உள்ளது. அது என்னவென்று யாருக்கும் தெரியாது.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலிலும் அவர்களுக்கு இடையில் செய்துகொள்ளப்பட்ட இரகசிய ஒப்பந்தம் காரணமாகவே முஸ்லிம் காங்கிரஸுக்கு தேசிய பட்டியலில் நான்கு ஆசனங்களை ரணில் வழங்கினார்.

அந்த ஒப்பந்தம் கடைசியில்தான் எங்களுக்குத் தெரியவந்தது. அதுபோல் இந்தத் தேர்தலிலும் இரகசிய ஒப்பந்தம் இருக்கும். அதை ரணில் விக்கிரமசிங்க வெளிப்படுத்த வேண்டும். என்றார்.

அமைச்சர் நிமால் ஸ்ரீபால டி சில்வா உரையாற்றுகையில் கூறியவை வருமாறு:
கிழக்கு மாகாண சபைத் தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் இறுதி செய்யப்பட்டுவிட்டன. இத்தேர்தலில் எமக்கேதான் வெற்றி.

இத்தேர்தலில் நாம் அடையும் வெற்றியைத் தொடர்ந்து நாடு நல்லதொரு பாதையை நோக்கிப் பயணம் செய்யும். அது மாத்திரமின்றி, இந்த வெற்றி எமது சமாதான முன்னெடுப்பிலும் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும். என்றார்.

அமைச்சர்கள் தினேஷ் குணவர்தன மற்றும் சுசில் பிரேமஜயந்த ஆகியோரும் கிழக்குத் தேர்தல் தொடர்பாக அங்கு கருத்துத் தெரிவித்துள்ளனர்.

Friday, May 9, 2008

தமிழர்களின் 25 வருட ஆயுதப் போராட்டம் தோல்வி ஒரு அங்குல நிலத்தைக் கூட அவர்கள் பிடிக்கவில்லை

முஸ்லிம்களுக்கு இந்நிலை வேண்டாமென்கிறார் மயோன் முஸ்தபா
முஸ்லிம்களின் தனி அலகுக்கான எவ்வித உத்தரவாதமும் இல்லாத சூழ்நிலையில் வடக்கு- கிழக்கு இணைக்கப்பட வேண்டும் என்று ஷ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வலியுறுத்துவதானது முஸ்லிம் சமூகத்தை மீண்டும் அடிமைப்படுத்தும் முயற்சிகளுக்குத் துணைபோவதாகவே அமையுமென உயர் கல்வி பிரதி அமைச்சர் மயோன் முஸ்தபா தெரிவித்தார்.

கிழக்கு மாகாண சபைத் தேர்தல் தொடர்பாக அவரது கல்முனை அலுவலக வளவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே இதனைக் கூறினார்.

இங்கு பிரதி அமைச்சர் மேலும் பேசுகையில் கூறியதாவது,

வடக்கு-கிழக்கு மாகாணங்கள் பிரிக்கப்பட்ட பின் முதன் முறையாக இடம்பெறுகின்ற இத்தேர்தலில் முஸ்லிம்கள் நிதானமாக சிந்தித்து வாக்களிக்க வேண்டும். இனத்துவேஷத்தைத் தூண்டி விட்டு முஸ்லிம்களின் வாக்குகளைச் சூறையாடுவதற்கு ஷ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வரிந்து கட்டிக் கொண்டு களமிறங்கியுள்ளது.

பிள்ளையானை காட்டி முஸ்லிம் மக்களின் வாக்குகளை அபகரிப்பதற்கான பிரசாரங்களில் ஈடுபட்டு வருகின்ற ரவூப் ஹக்கீம் தலைமையிலான முஸ்லிம் காங்கிரஸ், மறுபுறம் விடுதலைப் புலிகளின் அனுசரணையுடன் தமிழ் மக்களின் வாக்குகளைச் சுருட்டிக் கொள்வதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.

புலிகளைத் திருப்திப்படுத்துவதற்காகவே வடக்கு-கிழக்கு மாகாணங்கள் மீண்டும் இணைக்கப்பட வேண்டும் என்று ரவூப் ஹக்கீம் வலியுறுத்தி வருகின்றார். முஸ்லிம் மாகாண சபைக்கு எந்தவித உத்தரவாதமும் அளிக்கப்படாத நிலையில் தனது சுய அரசியல் லாபத்திற்காக முஸ்லிம்களை மீண்டும் பொறிக்குள் மாட்டி விடுவதற்கு அவர் எத்தனிக்கின்றார்.

கிழக்கு விடுவிக்கப்பட்டதன் பின்னர் இப்பகுதி முஸ்லிம்கள் மிகவும் நிம்மதியாக வாழக்கூடிய சூழல் ஏற்பட்டுள்ளது. முஸ்லிம்கள் படுகொலை செய்யப்படும் அபாயகரமான சூழல் இப்போது கிடையாது. எமது வர்த்தகர்கள் கப்பம் செலுத்தும் சூழ்நிலையும் இப்போது இல்லை. கிழக்கில் சகல இனத்தவரும் அச்சமின்றி நிம்மதியுடன் நடமாடக்கூடிய சூழல் தோற்றுவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் ஹக்கீம் இத்தகைய அமைதிச் சூழலைக் குழப்பியடித்து முஸ்லிம்களை படுகுழியில் தள்ளி விடுவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றார். முஸ்லிம் காங்கிரஸையும், மக்களையும் அவர் தவறாக வழிநடத்திச் செல்கிறார். இளைஞர்களை உணர்ச்சிகளுக்கு அடிமைப்படுத்தி இந்த மண்ணில் மீண்டுமொரு இனக்கலவரத்துக்கு தூபமிடப்படுகிறது.

தமிழர்களின் 25 வருட கால ஆயுதப் போராட்டம் தோல்வியில் முடிவடைந்துள்ளது. ஒரு அங்குல நிலத்தைக்கூட அவர்களால் பெற்றுக் கொள்ள முடியவில்லை. அப்பாவித் தமிழ் மக்களின் உயிர்கள் காவு கொள்ளப்பட்டு, அவர்களது பொருளாதாரம் அழிக்கப்பட்டு, கல்வி நிலையும் பாதிக்கப்பட்டு, தொழில் வாய்ப்புகளுக்கும் வழியில்லாமல் அவர்களது கை சேதமடைந்துள்ளன.

இந்நிலை முஸ்லிம்களுக்கும் ஏற்பட வேண்டுமா? அவற்றைத் தாங்கிக் கொள்ளக்கூடிய சக்தி எம்மிடம் இருக்கின்றதா என்பதைச் சிந்தித்துப் பாருங்கள். போராட்டம் போராட்டம் என்று முஸ்லிம் காங்கிரஸ் போடும் கூச்சல் நம்மை எங்கு கொண்டு சென்று விடப்போகின்றது என்பதைச் சிந்தித்துப் பாருங்கள்.

தான் முதலமைச்சராவதன் மூலம் கிழக்கு முஸ்லிம்களின் ஏக தலைவர் நானே என்று பறைசாற்றுவதற்கே ரவூப் ஹக்கீம் இத்தேர்தலில் குதித்துள்ளார். அதற்கு எமது மக்கள் இடமளித்தால் அழிவுகளை சந்திப்பதற்கும் நாம் தயாராக வேண்டும் என்பதைக் கவனத்தில் கொள்ளுங்கள்.

வெற்றிலைக்கு வாக்களித்து அரசசார்பு ஆட்சியைக் கிழக்கில் ஏற்படுத்துவதன் மூலம் இன்றைய அமைதிச் சூழல் தொடரும் என்பதோடு முஸ்லிம்களும் நிம்மதியாக வாழமுடியும்.

Monday, May 5, 2008

வெற்றிலைக்கு வாக்களிக்காது விட்டால் வீட்டில் இருங்கள் யானைக்குமட்டும் ஒருபோதும் வாக்களித்துவிடாதீர்கள்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எமது கட்சியாகும். அதனை அழிக்க யாரும் உடந்தையாக இருக்கக்கூடாது. கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் சின்னமான யானைக்கு கிழக்கு முஸ்லிம்கள் வாக்களிப்பதனால் அக்கட்சியினை இப்பிரதேசத்தை விட்டே பூண்டோடு அழித்து விடுவதற்கான முஸ்தீபு நடந்துவிடும் . எனவே, மக்கள் அவதானமாக இருக்க வேண்டுமென அமைச்சர் பேரியல் அஷ்ரப் தெரிவித்தார்.

மாளிகைக்காட்டில் நடைபெற்ற கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் திகாமடுல்ல மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றிய போதே வீடமைப்பு பொது வசதிகள் அமைச்சர் திருமதி பேரியல் அஷ்ரப் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்;

கிழக்கு மாகாண முஸ்லிம் மக்கள் இன்று ஐக்கிய தேசியக் கட்சிக்காரர்கள் கூறிவரும் தவறான கருத்துகளால் ஒரு நிலை தடுமாறிய நிலையில் குழம்பிப் போய் இருக்கின்றார்கள். ஒரு குழப்பமும் கொள்ள வேண்டியதில்லை.

வெற்றிலைக்கு வாக்களிக்க விருப்பம் இல்லை என்றால் வாக்களிக்கச் செல்லாமல் வீட்டிலேயே இருங்கள். ஆனால், யானைக்கு வாக்குப் போட்டு விடாதீர்கள் . நீங்கள் யானைக்குப் போடும் ஒவ்வொரு வாக்கும் எமது எதிர்கால சந்ததியினரை ஒரு இருளான திசைக்கு செல்வதற்கு வழிவகுக்கும்.

கிழக்கு மாகாண மக்கள் குழப்பம் அடையக்கூடாது என்பதற்காகவே மறைந்த தலைவர் அஷ்ரப் எவ்வளவோ கதைகளையெல்லாம் உங்களுக்குச் சொல்லி இருப்பர். ஏனென்றால் சரியான நேரத்தில் சரியான முடிவுகளை எடுக்கக்கூடிய மக்கள் கிழக்கு முஸ்லிம் மக்கள் என்ற தைரியம் அவருக்கு இருந்தது. நிச்சயமாக 2000 ஆம் ஆண்டு எம்மை விட்டு எமது தலைவர் பிரிந்த போதும் கூட எம்மைப் பொறுத்தவரையில் தலைவர் நினைத்திருப்பார் சரியான பாடங்கள் அனைத்தையுமே நான் எனது மக்களுக்குச் சொல்லிக் கொடுத்துவிட்டேன் என்று. இனி நான் போனாலும் பரவாயில்லை. மக்கள் சிந்தித்துச் செயற்படுவார்கள் என்ற நம்பிக்கை நிச்சயம் அவருக்கு இருந்திருக்கும்.

கிழக்கு மாகாண முஸ்லிம் மக்களும் எதிர்வரும் 10 ஆம் திகதி நடைபெறவுள்ள கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் சிந்தித்துச் செயற்படுவார்கள் என்ற நம்பிக்கை எனக்குண்டு எனத் தெரிவித்தார்.

Thursday, May 1, 2008

ஜ.தே.க.வுக்கு அளிக்கும் வாக்குகள் பிரபாகரனுக்கு உரியனவாகும்


கிழக்கு மாகாணத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சிக்கு மக்கள் அளிக்கின்ற ஒவ்வொரு வாக்கும் புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு போடும் வாக்காகும். அரசாங்கத்திற்கு அளிக்கும் ஒவ்வொரு வாக்கும் படையினர் வடக்கிற்கு செல்வதற்கான வாக்காகவே அமையும். இதனால், எதிர்வரும் 10 ஆம் திகதி கிழக்கு மாகாண மக்கள் சரியான தீர்ப்பினை வழங்குவார்கள் என்ற நம்பிக்கை அரசாங்கத்திடம் உள்ளது என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

பிரபாகரனின் பயங்கரவாதத்திலிருந்து விடுதலை பெற்று சமையலறை யுத்தத்திற்கும் விரைவில் முடிவுகட்டுவோம். கிழக்கு மாகாண மக்களுக்கு ஜனநாயகத்தினை பெற்றுக்கொடுத்துள்ள அரசாங்கம் விரைவில் வடபகுதி மக்களுக்கும் விடுதலையினை பெற்றுக்கொடுக்கும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார். தெய்யத்தகண்டியில் இன்று நடைபெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மேதின கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இவ்வாறு தெரிவித்தார். தெய்யத்தகண்டி மகாவலி விளையாட்டு மைதானத்தில் இன்று பிற்பகல் நடைபெற்ற சுதந்திரக் கட்சியின் கூட்டத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர். தொப்பிக்கல மலைப்போன்று அமைக்கப்பட்ட மேடையிலிருந்து உரையாற்றிய ஜனாதிபதி, மேலும் தெரிவித்ததாவது:

உலக தொழிலாளர் தினமான மேதினக் கூட்டத்தில் புலிகளிடமிருந்து மீட்கப்பட்ட கிழக்கு மாகாணத்திலிருந்து மக்கள் மத்தியில் உரையாற்றுவதையிட்டு நான் பெருமகிழ்ச்சியடைகிறேன். கொடூர பயங்கரவாதிகளிடமிருந்து கிழக்கு மாகாணம் மீட்கப்பட்டு இந்த மக்களுக்கு ஜனநாயகம் மற்றும் வாழும் உரிமை என்பவற்றை பெற்றுக்கொடுத்த படையினருக்கு இந்த கூட்டத்தில் நான் கௌரவம் அளிக்கின்றேன்.

கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டத்தில் வாழும் பிரபாகரனின் பயங்கரவாத செயற்பாடுகளிலிருந்து திருகோணமலை, அம்பாறை, மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த அப்பாவி மக்களை மீட்டெடுத்தமை அரசாங்கத்திற்கு கிடைத்த விசேட வெற்றியாகும். பிரச்சினைக்கு அரசியல் தீர்வு பெற்றுக்கொடுக்க முயற்சித்தபோது மாவிலாறு அணையை மூடி தண்ணீரை நிறுத்தி புலிகளால் ஆரம்பிக்கப்பட்ட பாரிய முயற்சியை தடுத்து நிறுத்தி மக்களை மீட்டெடுத்தோம். மூதூரில் இருந்து முஸ்லிம் மக்கள் 24 மணித்தியாலங்களுக்குள் விரட்டியடிக்கப்பட்டு வெளியேற்றப்பட்டபோது அவர்களை மீளக் குடியேற்றுவோம் என்ற உறுதியளித்திருந்தோம். சம்பூரை மீட்டதன் பின்னர் அம்மக்களை 46 நாட்களுக்குள் மீளக் குடியேற்றினோம்.

வடக்கிலிருந்து விரட்டியடிக்கப்பட்ட சிங்கள, முஸ்லிம் மக்கள் இன்னும் அகதி முகாம்களில் வாழ்கின்றனர். கிழக்கு மக்கள் சுதந்திரமாக வாழவும் மாணவர்கள் பாடசாலைக்கு செல்லவும் விவசாயிகள் விவசாயம் செய்வதற்கும் இடமளிக்கப்பட்டதுபோல் வடக்கு மாகாண மக்களுக்கும் விரைவில் அதனை பெற்றுக்கொடுப்போம். கிழக்கு மாகாண மக்களுக்கு மாகாண சபை அதிகாரத்தை பெற்றுக்கொடுப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ள நிலையில் கிழக்கை பிரபாகரனுக்கு மீண்டும் வழக்கமாட்டோம் என்பதை மக்கள் இந்தத் தேர்தலின் மூலம் நிரூபிக்க வேண்டும்.

கிழக்கு மாகாண தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சிக்கு செலுத்துகின்ற ஒவ்வொரு வாக்கும் பிரபாகரனுக்கு போடும் வாக்குகளாகும். அதனால், எதிர்வரும் 10 ஆம் திகதி கிழக்கு மாகாண மக்கள் சரியான தீர்ப்பு வழங்குவார்கள் என்ற நம்பிக்கை அரசாங்கத்திடம் உள்ளது. கிழக்கின் உதயத்தின் மூலமாக கிழக்கில் பாரிய அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. அவற்றை மேலும் விஸ்தரிப்பதற்கு கிழக்கு மாகாண மக்களது ஒத்துழைப்பு தேவையாகும். வடக்கு மாகாண மக்களுக்கு சுதந்திரத்தை பெற்றுக்கொடுப்பதற்காக படையினர் நாளுக்கு நாள் முன்னேறி வருகின்றனர். வடக்கு மக்களை மீட்பதற்கும் மக்கள் ஒத்துழைப்பு வழங்கவேண்டும்.