Showing posts with label தொலைந்து போனவர்கள். Show all posts
Showing posts with label தொலைந்து போனவர்கள். Show all posts

Tuesday, June 17, 2008

இலங்கை தமிழ் திரைப்பட துறை செயற்பாட்டாளர் தேவதாஸன் கடத்தப்பட்டார்

‘சலனம்’ சித்திர அமைப்பின் ஸ்தாபகர்களுள் ஒருவரும் தேசியத் திரைப்படக் கூட்டுத்தாபனத்தின் பணிப்பாளர் சபையின் முன்னாள் உறுப்பினருமான கனகசபை தேவதாஸன் காணாமல் போயிருப்பதாகக் கூறப்படுகின்றது. புலனாய்வுப் பிரிவினராக தம்மை இனம்காட்டிய சிலர், வெளியிடம் ஒன்றில் இருந்து கொழும்பு, ஜம்பட்டா வீதியில், உள்ள அவரது தங்குமிடத்துக்குக் கடந்த சனியன்று அழைத்துச் சென்று தங்குமிடத்தை ஆராய்ந்த பின் தம்முடனேயே அவரை அழைத்துச் சென்றதாகக் கூறப்படுகின்றது. இச்சம்பவத்தின் பின்னர் அவர் தொடர்பில் இல்லை என அவரது உறவினர்கள் நன்பர்கள் தெரிவித்துள்ளனர். எனினும் காவற்துறையிளரோ, குற்றப் புலனாய்வுப் பிரிவினரோ அவரைத் தாங்கள் கைது செய்யவேயில்லை எனத் தெரிவித்துள்ளனர். திரைப்படத் துறையில் அதிக ஈடுபாடு கொண்டுள்ள தேவதாஸன், தற்போது உள்நாட்டில் தயாரிக்கப்படும் ஒரு தமிழ் சினிமாவுடன் சம்பந்தப்பட்டிருந்தவர். இதற்காக பலதடவைகள் தமிழகம்; சென்று வருபவர் எனத் தெரிவிக்கப்படுகிறது. அவரின் குடும்பம் யாழ்ப்பாணத்தில் உள்ள நிலையில் அவர் கொழும்பு, கொட்டாஞ்சேனையில் தனி அறை ஒன்றில் தங்கியிருந்ததாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

Monday, June 9, 2008

சிவபாலன் தொலைந்து போய்விட்டார்

தெஹிவளை அத்துபத்து வீதியில் வசித்து வந்த இளைஞர் ஒருவர் நேற்று மாலை முதல் காணாமல் போயுள்ளார் என உறவினர்களால் தெஹிவளை பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

தெஹிவளையிலுள்ள சிகையலங்கார நிலையமொன்றில் பணி புரிந்து வந்த சிவபாலன் என்ற இளைஞரே காணாமல் போயுள்ளார் எனவும், இது தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

Thursday, May 15, 2008

பரமலிங்கம் சந்திரகாந்தன் தொலைந்து போனார்

வெள்ளவத்தையை வசிப்பிடமாகக் கொண்ட இளம் வர்த்தகர் ஒருவர் தனது பிள்ளையை பாடசாலைக்கு சேர்த்து விட்டு திரும்பும் வழியில் காணாமல் போயிருப்பதாக பிரதி அமைச்சர் பெ.இராதாகிருஷ்ணனிடம் உறவினர்கள் புகார் செய்துள்ளனர்.

வெள்ளவத்தை நெல்சன் பிளேசில் வசித்து வந்த 47 வயதுடைய பரமலிங்கம் சந்திரகாந்தன் என்ற குடும்பஸ்தரே காணாமல் போயிருப்பதாக வெள்ளவத்தை பொலிஸ் நிலையத்தில் மனைவி புகார் செய்துள்ளார்.

கடந்த 13 ஆம் திகதி காலை 8.30 மணியளவில் தனது பிள்ளைகளை அதே வீதியிலுள்ள பாலர் பாடசாலைக்கு அழைத்துச் சென்ற பின்னர் அவர் இதுவரை வீடுதிரும்பவில்லை. இவர் இனந்தெரியாத நபர்களால் கடத்தப்பட்டிருக்கலாம் என்று குடும்பத்தினர் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.

செட்டியார் தெருவின் பிரபல நகை வியாபாரியான இவர் காணாமல் போயிருப்பது புறக்கோட்டைப் பகுதியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Wednesday, May 14, 2008

செபஸ்தியானும் சிராஜுதினும் தொலைந்து போனார்கள்

மன்னார் முருங்கனை சேர்ந்த இருவர் காணாமல் போயுள்ளதாக தெரியவருகிறது.இது தொடர்பில் அவர்களது உறவினர்கள் முருங்கன் பொலிஸ் நிலையத்திலும்,மன்னார் சுகவாழ்வு மன்றத்திலும்,மன்னார் பிரஜைகள் குழுவிலும்,முறையிட்டுள்ளதாகவும் தெரிவிக்கபட்டுள்ளது.

காணாமல் போனோர் செபஸ்தியான் (வயது-44)எம்.ஏ.சிராஜுதின்(வயது-52)ஆகியோர் என தெரிவிக்கபட்டுள்ளது.இவர்கள் இருவரும் கடந்த 7 ஆம் திகதி முருங்கன்பிட்டி என்ற இடத்திலிருந்து,காலை 6.00 மணியளவில் துவிசக்கரவண்டியில் சென்றுகொண்டிருந்த சமயமே காணாமல் போயுள்ளதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

Tuesday, May 13, 2008

தங்கத்துரை திவாகரன் தொலைந்து போனார்

யாழ்ப்பாணம் பண்டத்தரிப்பு, பிரான்பற்றுப் பகுதியில் வசிக்கும் 17 வயதுடைய தங்கத்துரை திவாகரன் என்ற ஜி.சீ.ஈ. சாதாரணதர மாணவனை கடந்த வியாழக்கிழமை முதல் காணவில்லை என்று அவரது பெற்றோர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.
இந்த மாணவன் சம்பவதினம் தனது வீட்டுக்கு அருகில் உள்ள கடை ஒன்றிற்குச் சைக்கிளில் சென்ற பின்னர் இதுவரை வீடு திரும்பவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.

தேன்கிளி சங்கீதா தொலைந்து போனார்

கடந்த 10 வருடங்களுக்கு மேலாக புத்தளம் பகுதியில் வசித்து வந்த யாழ்ப்பாணம் உடுவிலைப் பிறப்பிடமாகக் கொண்ட 26 வயதுடைய பட்டதாரியான தேன்கிளி சங்கீதா என்னும் இளம் பெண்ணை வெள்ளை நிற வாகனத்தில் வந்த இனந்தெரியாதவர்கள் கடத்திச் சென்றதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இச்சம்பவம் நேற்று முன்தினம் மாலை 6.30 மணியளவில் பாலாவியிலுள்ள தனது அலுவலகத்திலிருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது இடம்பெற்றுள்ளது. மேற்படி பெண் ஐக்கிய நாடுகள் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகராலய அலுவலகத்தில் சமூக இணைப்பு அதிகாரியாக பணியாற்றி வந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. இவரது கடத்தல் சம்பவம் தொடர்பாக உறவினர்கள் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம், யு.என்.எச்.சீ.ஆர் மற்றும் பொலிஸ் நிலையம் என்பவற்றில் முறைப்பாடு செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Sunday, May 11, 2008

பொருளியல் ஆசிரியர் வரதராஜன் நேற்று தொலைந்து போனார்

பிரபல பொருளியல் பாட ஆசிரியரான வரதராஜனும் அவரின் மைத்துனரான சிறிதரனும் நேற்றுக் கொழும்பில் கடத்தப் பட்டிருக்கின்றனர். வெள்ளவத்தையில் உள்ள கொழும்பு தமிழ் சங்கத்தில் வகுப்பு எடுத்துவிட்டு புறக்கோட்டையில் உள்ள தனியார் கல்வி நிறுவனத்துக்கு வகுப்பு எடுக்கச் சென்றபோது நேற்று ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 11.30 மணியளவில் வரதராஜன் காணாமல் போயுள்ளார்.

முற்பகல் 11.00 மணியளவில் புறக்கோட்டையில் தாம் நிற்பதாகவும் எனவும் வீட்டுக்கு விரைவில் வருவார் எனவும் தொலைபேசியில் தனது மனைவிக்கு வர தராஜன் தெரிவித்துள்ளார் என்று கூறப்படுகிறது.

இதன் பின்னர் முற்பகல் 11.30 மணியளவில் பொலிஸ் சீருடையில் 7 பேர் வரதராஜனின் வீட்டுக்குச் சென்றுள்ளனர்.

அவர்கள் மேல் மாடிக்குச் சென்று வரதராஜன் கீழே நிற்கின்றார் என்றும் வீட்டைச் சோதனையிடப் போகின்றனர் என்றும் தெரிவித்துள்ளனர்.
வீட்டில் நின்ற வரதராஜனின் மனைவியும் அவரின் சகோதரரான சிறிதரனும் கீழே வரதராஜனைப் பார்க்க வந்தபோது, அவர்கள் இருவரையும் இழுத்து வாகனத்துக்குள் தள்ளிய சீருடையினர் அங்கிருந்து சென்றனர்.

இவர்களில் வரதராஜனின் மனையியை நுகேகொடையில் அவர்கள் இறக்கிவிட்டு 100 ரூபாவைக் கொடுத்து தெஹிவளைப் பொலிஸ் நிலையத்துக்கு வருமாறு தெரிவித்துள்ளனர். சிறிதரனை மட்டும் அவர்கள் கொண்டு சென்றனர்.
வரதராஜனின் மனைவி வெள்ளவத்தைப் பொலிஸ் நிலையத்தில் இது குறித்து முறைப்பாடு செய்துள்ளார்.

வெள்ளவத்தைப் பொலிஸ் நிலையத்திலிருந்து வருகின்றனர் எனத் தெரிவித்தே அவர்கள் தமது வீட்டுக்கு வந்தனர் என வரதராஜனின் மனைவி தெரிவித்துள்ளார்.
வெள்ளவத்தைப் பொலிஸ் நிலையத்தில் மனைவி இவ்வாறு முறையிட்டபோது தமது நிலையத்திலிருந்து எவரும் இப்படி அவர்களின் வீட்டுக்கு வரவில்லை என்று அங்குள்ள பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வரதராஜன் குடும்பத்தினர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.