Showing posts with label மங்கையற்கரசி அமிர்தலிங்கம். Show all posts
Showing posts with label மங்கையற்கரசி அமிர்தலிங்கம். Show all posts

Friday, June 20, 2008

நீங்கள் சுட்டுவிரலை நீட்டி யார் யார் துரோகிகள் என வரையறுத்தீர்களோ......

திருமதி மங்கையற்கரசி அம்மையாரின் கருத்திற்கு பதில் கருத்தாக இக்கட்டுரை அமைகிறது

திருமதி மங்கையற்கரசி அம்மையாரின் கருத்து




பட்டினி கிடந்து பசியால் மெலிந்து பாழ்பட நேர்ந்தாலும்” -திருமதி மங்கையற்கரசி அம்மையார்

நீங்கள் சுட்டுவிரலை நீட்டி யார் யார் துரோகிகள் என வரையறுத்தீர்களோ வீராவேசப் பேச்சில் நரம்பு முறுக்கேற உணர்ச்சிப் பிழம்பாக்கி இரத்தத்திலகமிட்டு தம்பிகளை அண்ணன் அமிர் தளபதியாக விடுதலைக்களத்தில் முளைத்தெழுந்த ”களைகளை” துடைத்தெறிந்து விடுதலையை வென்று வாருங்கள் சிங்களவன் தோலைக் கொண்டு வாருங்கள் செருப்பாய் அணிகின்றேன் என்றெல்லாம் வெறியூட்டி ” ”ஓடையிலே என் சாம்பல் ஓடும்போதும் ஒண் தமிழே சலசலத்து ஓட வேண்டும்” ”பட்டினி கிடந்து பசியால் மெலிந்து பாழ்பட நேர்ந்தாலும்” என கீதங்கள் பாடி அனுப்பி வைத்து எதைச் செய்யச் சொன்னீர்களோ தூண்டினீர்களோ அவற்றையே தான் அவர்கள் இன்றும் தொடர்கிறார்கள். அன்று உங்கள் ஆணையில் இருந்தார்கள். இன்று இல்லை.

உங்கள் சுட்டுவிரல் ஏவியது. ”உங்கள் பெடியள்” சுட்டுவிரல்கள் நீங்கள் காட்டிய திசையில் துப்பாக்கியை இயக்கியது. இயக்கி உங்கள் அரசியல் எதிரிகளை துடைத்தெறிந்தார்கள். இதுவே தான் ஆரம்பம் என்பது நீங்கள் புரியாததல்ல. அன்று சுடும் உத்தரவை ”பிறப்பிக்கும்” உங்கள் மேடைப் பேச்சுக்கள் உருவாக்கிய ”வளர்த்த கடாக்கள்” இன்று வேலி தாண்டி விட்டனவே என்ற ஆதங்கமா உங்களுக்கு. உங்கள் வார்த்தைகளில் சொல்வதானால் நீங்கள் ”வளர்த்த கடா உங்கள் மார்பில் பாய்ந்தது” மட்டுமல்லாமல் விடுதலை என்றும் தோட்டப்பயிரை துவம்சம் செய்து நிற்பதிலும் உங்களுக்கு பங்குண்டு என்பதும் உங்களுக்கு சொல்லித் தெரிய வேண்டியதில்லை. ஆனால் அவற்றையெல்லாம் பேசிக் கொள்ளாமல் மூடி வைத்துவிட்டு மீண்டும் அரசியல் மேடைக்கு வரும் கரிசனை இப்போது தங்களுக்கு ஏற்பட்டது ஏனோ?



ஒருவேளை உங்களுக்கு அதே அரசியல் மேடை இன்றும் இருந்திருந்தால் உங்கள் கட்டளைக்கு அவர்கள் துப்பாக்கிகள் குறிபார்க்கும் நிலைமையும் இருந்திருந்தால் இன்று நடப்பவை யாவும் ” வெறும் களையெடுப்புகளாவும் விடுதலைப் பாதையில் முளைத்த தடைக்கற்கள் எனவும் உங்கள் பாசையில் துரோகிகளாகவும் நீங்கள் தளபதிகளாகவோ விடுதலை வீராங்கனையாகவோ வலம் வந்திருப்பீர்கள். நதியின் ஊற்று ஓடும் நதியை பார்த்து நீ எங்கிருந்து பிறப்பெடுத்தாய் என்று கேட்க முடியுமா?



தேசமும் ராஜேஸ் பாலாவும் மீண்டும் உங்களை தூசு தட்டி தூய்மையானவர்களாக ஏன் தூக்கி நிறுத்துகிறார்கள் ?



காலம் கடந்து ஞானம் பிறந்தது என்றெல்லாம் சொன்னால் தவறு. காலம் கனிந்திருக்கிறது அதனால் ”ஞானம்” பிறந்திருக்கிறது. அடுத்த பொங்கல் தமிழீழத்தில் தான் அணிதிரளுங்கள் என்றீர்கள். தேர்தலில் தமிழர் கூட்டணியின் வாக்கு வேட்டைக்கு ”வட்டுக்கோட்டைத் தீர்மானம்” வழிசமைத்தது. மக்களை விற்று பாராளுமன்றக்கதிரைகளை நிரப்பிய பின்னால் ” தமிழீழம் ” மாவட்டசபையானது. பொய்யும் புரட்டுமாக நீங்கள் நடத்திய சதிகளின் வரலாறு ”கூட்டணியை எதிர்த்தவர்களின் கொலைப்பட்டியலின் வரலாறன்றி வேறெந்த விதத்திலிருந்தது என்று கூறமுடியுமா?.



தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் உங்கள் கொள்கை முழக்கக் கூட்டங்களில் எல்லாம் நீங்கள் தயாரித்தளித்த துரோகிகள் பட்டியலில் ”இயற்கை மரணம் இவர்களுக்கு இல்லை என்றீர்கள்”. இவர்கள் அழிக்கப்பட வேண்டியவர்கள் என்று இளைஞர்களுக்கு ஆவேச அறைகூவல் விடுத்தீர்கள். அன்றைக்கு அந்தப் பட்டியலோடு ஆரம்பித்த அழித்தொழிப்பு தான் இன்று வரைக்குமான கலாச்சாரம். இன்றும் அவர்கள் அதே பட்டியலோடு தான் திரிகின்றார்கள்.



அல்பிரட் துரையப்பா – துரோகி – காக்கை வன்னியன்- நீங்கள் சொன்னீர்கள்
அவர்கள் கதையை முடித்தார்கள்.



குமாரசூரியர், ஆ.தியாகராசா, அருளம்பலம் வி. பொன்னம்பலம் என நீங்கள் வரிசைப்படுத்திய நபர்களை எல்லாம் துப்பாக்கி நபர்கள் துரத்தினர். ஒழித்தனர்.



அன்று மட்டும் இந்தக் கொலைகள் எல்லாம் உங்கள் இதயங்களுக்கு குளிர்ச்சியும் மகிழ்சியும் தந்த விடயங்கள். இவற்றையெல்லாம் நீங்கள் கண்டு கொண்டதுமில்லை. கண்டனங்கள் செய்ததும் இல்லை. பாலபாடம் நடத்தியது நீங்கள் அன்றி வேறு யார் ? அன்று ஆரம்பித்து வைத்த கொலைப் பள்ளிக்கூடம் இன்று பல்கலைக்கழகமாக விரிந்து பரந்திருக்கின்றது. வளர்த்த கடா மார்பில் பாய்ந்தும் விட்டது.



உங்களுக்கு இன்னும் மேடை இருக்கின்றது. பாடுங்கள். கவிஞர் காசி ஆனந்தன் இன்றும் அவர்களோடு தான் இருக்கின்றார். பாடுங்கள் ” பட்டினி கிடந்து பசியால் மெலிந்து பாழ்பட நேர்ந்தாலும்…...


ஏமாற தமிழ்மக்கள் இன்றும் இருக்கின்றார்கள் இன்னும் இருக்கின்றார்கள் உங்கள் அரசியலுக்கு இன்னும் விலை இருக்கின்றது. மேடைக்கு வாருங்கள். நீங்கள் வளர்த்தெடுத்த இனவெறித் தூபம் இன்னும் மடியவில்லை. எனவே வாருங்கள்.

தமிழ்மக்கள் "பட்டினி கிடந்து பசியால் மெலிந்து பாழ்படுகிறார்கள்" எனவே வாருங்கள்.

சிறி

Tuesday, June 17, 2008

”படுகொலைகளைச் செய்யும் புலிகள் யாரின் விடுதலைக்குப் போராடுகிறார்கள்”


”படுகொலைகளைச் செய்யும் புலிகள் யாரின் விடுதலைக்குப் போராடுகிறார்கள்” மங்கையற்கரசி அமிர்தலிங்கம் : இராஜேஸ் பாலா

07.06.08ல் லண்டனில் நடத்தப்பட்ட மஹேஸ்வரி ஞாபகார்த்தக்கூட்டத்தில் திருமதி அமிர்தலிங்கமும் ஒரு பேச்சாளாராக எதிர்பார்க்கப்பட்டார். ஆனால் அவர் கடந்த ஒருமாதத்திற்கு மேல் தனது உறவினர்களைப் பார்க்க வெளிநாடு சென்றிருந்ததால் கூட்டத்திற்கு வரமுடியவில்லை என்று தெருவித்தார். லண்டனுக்கு வந்ததும் முதற் கண்ணாக, மஹேஸ்வரியின் கொலைக்கெதிரான தனது கண்டனத்தைத் தெரிவித்தார். அவரின் குறிப்பில் பின்கண்ட விடயங்களை அறிவித்தார்.

” மனித உரிமை எழுத்தாளர் இராஜேஸ் பாலாவினால் ஒழுங்கு செய்யப்பட்டு லண்டனில் நடத்தப்பட்ட மகேஸ்வரி ஞாபகார்த்தக் கூட்டத்திற்கு வரமுடியாமல் போனதற்கு எனது துக்கத்தைத் தெரிவித்துகொள்கிறேன். மஹேஸ்வரியின் கொலை ஒரு பாதகமான செயலாகும். உற்றார் உறவினர் முன்னிலையில் ஈவிரக்கமின்றிக் காட்டு மிராண்டித்தனமாகக் கொலை செய்யப்பட்டிருக்கிறார் மஹேஸ்வரி. சுவீனமான தாயைப் பார்க்கப்போன மகளுக்கா இந்தக்கதி? என்று எங்கள் தமிழ் மக்கள் இந்தக் காட்டுமிராண்டிகளைக் கண்டித்துத் துரத்தப் போகிறார்கள், தூக்கியெறியப் போகிறார்கள் என்று தெரியாது. இப்படிக் கொடுமையான வன்முறைகளைத் தெடர்ந்து செய்பவர்களுக்கு மக்கள் மத்தியில் இடமில்லை என்பதைத் தமிழ் மக்கள் இக்கொலைகாரர்களுக்குச் செயலில் காட்டவேண்டும். மஹேஸ்வரி, ஒரு தனிப்பட்ட அரசியற் தளத்துக்கு அப்பாற் சென்று மக்களுக்கு உதவியவர். தன்னலமற்ற மக்கள் சேவைக்குப்பரிசு இந்தக் கொலையா?

புலிகள் யாரின் விடுதலைக்குப் போராடுகிறார்கள்? தமிழ் மக்களினதும், புலிகளுக்குப் பிடிக்காத எந்த மனிதர்களினதும் உயிர்களை, அம்மக்களின் உடலிலிருந்து அநியாயகமாகப் பறித்து எடுக்கும் ‘விடுதலை’ வேலைகளைத்தான் செய்கிறார்கள். இவர்களிடமிருந்து தமிழர்களுக்கு எப்போது விடுதலை கிடைக்கும்?”

திருமதி மங்கையற்கரசியின் கணவர் திரு அமிர்தலிங்கம் அவர்களும் புலிகளால் வீடு தேடிவந்து கொலை செய்யப்பட்ட தமிழர்களின் பட்டியலில் அடங்குவர். வீடு தேடிவந்து தேனிரும் சிற்றுண்டியும் வாங்கிச் சாப்பிட்டு விட்டு, சாப்பாடு தந்தவர்களையே கொலை செய்யும் கலையில் வல்லுனர்கள் புலிகள். இவர்களிடம் மனித உரிமைபற்றிப் பேசுவது காலம் கடந்த விடயம் என்கிறார்கிறார்கள் ஒருசிலர்.

அரசியற் சரித்திரம் என்பது ஒரு மாய விளையாட்டு மாதிரி. யாருக்கு யார் சினேகிதம் யாருக்கு யார் எதிரி என்பது ஒரு சில கணங்களில் மாறிக் கொண்டுவரும் யதார்த்தங்கள். இவ்வவு காலமும் எத்தனையோ தோல்விகளைக் கண்டபின்னும் ‘கனவு’ இராசியத்தில் வாழும் மனநோயாளிகளைக்கொண்ட சமுதாயத்தில் ஒரு சிறு பகுதியான மக்கள் என்றாலும் யதார்தநிலையை உணர்ந்து ‘ஜனநாயக’ வழிக்கு வருவார்கள் என்ற நம்பிக்கை இருப்பதாற்தான் மனித உரிமைபற்றிப் பேசவேண்டியிருக்கிறது.

-------------
மகேஸ்வரி வேலாயுதம் அவர்களின் மற்றுமொரு நினைவு நிகழ்வு யூலை 13ல் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. கொன்வே மண்டபம் ரெட் லயன் சதுக்கத்தில் மாலை 5 மணியிலிருந்து இரவு 10 மணி வரை இந்நினைவு நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. மகேஸ்வரி வேலாயுதம் அவர்களுக்கு லண்டனில் நடைபெறும் இரண்டாவது நினைவு நிகழ்வு இதுவென்பது குறிப்பிடத்தக்கது. இதில் இலங்கையில் இருந்தும் பிரித்தானிய உரிமை அமைப்புகளில் இருந்தும் பேச்சாளர்கள் கலந்து கொள்கின்றனர்.