பிரித்தானியாவிலுள்ள 'ப்ரிமார்க்' எனப்படும் மிகப் பெரிய ஆடம்பர ஆடை விற்பனை நிறுவனத்திற்கான ஆடை தயாரிப்பு பணிகளில் தமிழ்நாட்டு அகதி முகாமிலுள்ள இலங்கைச் சிறுவர்கள் ஈடுபடுத்தப்படுவது தொடர்பான விபரங்கள் பி.பி.சியின் பனோராமா நிகழ்ச்சியில் இன்று 23 ஆம் திகதி திங்கட்கிழமை இரவு ஒளிபரப்பப்படவுள்ளதாக பிரித்தானியாவின் 'த ஒப்சேவர்' செய்தி வெளியிட்டுள்ளது.
பிரித்தானியாவின் 'ப்ரிமார்க்' எனும் ஆடம்பர ஆடை விற்பனை நிறுவனத்திற்காக மிகக் குறைந்த செலவில் ஆடைகளைத் தயாரிக்கும் பணியில் தென்னிந்திய அகதிமுகாம்களிலுள்ள சிறார்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதை பி.பி.சி கண்டறிந்துள்ளது.
அத்துடன் இவர்கள் மிக மோசமான சூழலில், நீண்ட நேரம் வேலைக்கமர்த்தப்பட்டுள்ளதாகவும் த ஒப்சேவர் தெரிவித்துள்ளது.
இந்த விவகாரம் குறித்து பி.பி.சி, த ஒப்சேவர் ஆகிய ஊடகங்கள் இந்திய அகதி முகாம்களில் புலனாய்வில் ஈடுபட்டதையடுத்து ‘ப்ரிமார்க்’ நிறுவனம் தனது மூன்று விநியோகஸ்தர்களை கடந்த வாரம் வேலையிலிருந்து நீக்கியிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
ப்ரிமார்க்' நிறுவனம் மிகக் குறைந்த உற்பத்திச் செலவில் ஆடைகளைத் தயாரித்து பிரித்தானியாவில் சந்தைப்படுத்துவதன் மூலம், அந்நாட்டில் தற்போது ஆடம்பர ஆடை விற்பனையில் முன்னணி வகிக்கும் மார்க்ஸ் அன்ட் ஸ்பென்சர் நிறுவனத்தின் சந்தையை 2009 ஆம் ஆண்டில் கைப்பற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அச்சந்தையை ப்ரிமார்க்' கைப்பற்றுமானால் பிரித்தானியாவில் ஆடைக்காக செலவிடப்படும் ஒவ்வொரு 10 பவுண்ஸ்களிலும் 1 பவுண்சினை 'ப்ரிமார்க்' சம்பாதிக்கும் எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது.
மேற்படி 'ப்ரிமார்க்' நிறுவனத்தின் சொத்து மதிப்பு 5 பில்லியன் பவுண்ஸ்கள் எனவும், அந்நிறுவனத்துக்கு 3 நாடுகளில், 4.8 மில்லியன் சதுர அடி பரப்பளவில் 177 விற்பனை நிலையங்கள் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இந்நிறுவனத்தின் மொத்தமாக 25,000 பேர் தொழில்புரிகின்றனர்.
அதேவேளை, இந்நிறுவனத்தைப் பின்பற்றி மேலும் பல ஆடை தயாரிப்பு நிறுவனங்களும் மிகக் குறைந்த செலவில் ஆடைகளை உற்பத்தி செய்ய முயற்சிப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
பிரித்தானியாவில் இன்று கொள்வனவு செய்யப்படும் ஒவ்வொரு 10 ஆடைகளிலும் ஒரு ஆடை இவ்வாறான இந்திய அகதி முகாம்களில் வாழும் சிறுவர்களைப் பயன்படுத்தி தயாரிக்கப்பட்டது எனவும் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, இவ்வாறு சிறுவர்களை வேலைக்கமர்த்தியுள்ள நிறுவனங்களுக்கு எதிராக பிரித்தானிய அரசாங்கம் உரிய நடவடிக்கைளை எடுக்க வேண்டும் என மனித உரிமை ஆர்வலர்கள் குரல்கொடுக்க ஆரம்பித்துள்ளனர்.
இருப்பினும், இந்தக் குற்றச்சாட்டுக்கள் குறித்து உடனடியாகக் கவனம் செலுத்தியுள்ளதாகவும், அவ்வாறு சிறுவர்கள் வேலைக்கமர்த்தப்பட்டுள்ளமை கண்டுபிடிக்கப்படுமானால் இந்தியாவிலுள்ள ஆடை தயாரிப்பு தொழிற்சாலைகளை மூடிவிடத் தயார் எனவும் 'ப்ரிமார்க்' நிறுவனத்தின் பேச்சாளர் த ஒப்சேவர் பத்திரிகையிடம் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், தமிழ்நாட்டின் பாவனசாகர் அகதி முகாமிலுள்ள இலங்கைச் சிறார்கள் இவ்வாறு வேலைக்கமர்த்தப்பட்டமை தொடர்பான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் தமிழ்நாடு தொழிலாளர் திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் இறுதியாகக் கிடைத்த தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழ் நாட்டிலுள்ள 102 முகாம்களில் சுமார் 76,000 இலங்கை அகதிகள் வறுமை நிலையில் வாழ்கின்றனர்.
இவர்களில் ஒரு குடும்பத்தினருக்கு இந்திய அரசாங்கம் மாதாந்தம் ஒரு நிவாரணப் பொதியினையும், குடும்பத்தலைவருக்கு 200 இந்திய ரூபாய்களையும் வழங்குவதாக தரவுகள் தெரிவிக்கின்றன.
முரசம்
Showing posts with label இலங்கைச் சிறுவர்கள். Show all posts
Showing posts with label இலங்கைச் சிறுவர்கள். Show all posts
Monday, June 23, 2008
Subscribe to:
Posts (Atom)