Tuesday, June 24, 2008

ஆளப்போவது யார் என்பதல்ல வாழப்போவது யார் என்பதுதான் பிரச்சினை

தமிழ்பேசும் மக்களுக்கான அரசியல் தீர்வு நோக்கிய பாதை இன்று திறந்து விடப்பட்டிருக்கின்றது.மாகாணசபைகளுக்கான அரசியல் அதிகாரங்களை நடைமுறைப்படுத்துவதே அரசியல் தீர்வுக்கான பாதையை திறந்துவிடுவதற்கான வழிமுறையாகும்.

20 வருடங்களாக தொடர்ந்து வந்த கடின உழைப்பின் வெற்றியும் இரத்தமும் தசையும் கலந்த சேர்வையும் தான் இன்று பிறந்திருக்கும் இந்த மாகாணசபையும் வடக்கில் தேர்தல் நடக்கும் வரையிலான ஒரு சிறப்பு நிர்வாகமும் கிடைத்திருப்பது.எமது மக்களுக்கு ஒரு நிம்மதியை கொடுத்திருக்கின்றது.நாம் நினைத்தது வேறாக இருப்பினும் இன்று கிடைத்திப்பது இதுதான் என்ற நடைமுறை சாத்தியங்களின் அடிப்படையில் கிடைத்ததை எடுத்துக்கொண்டு முன்னோக்கி செல்வதே சிறந்த வழிமுறை.

எமது மக்களுக்கு கிடைத்திருக்கும் இந்த அரிய வாய்ப்பை நடைமுறைப் படுத்துவதற்கு தடையாக இருக்கும் தீய சக்திகளே இன்று கிழக்கு மக்கள் மத்தியில் சகோதர மோதலை தூண்டிவிட்டு வருகின்றார்கள்.
பழிக்குப்பழி இரத்தத்திற்கு இரத்தம் என்று மனித உயிர்களை குருதியில் சரிப்பதற்கு சதித்திட்டங்கள் தீட்டப்பட்டு வருகின்றன. நடந்து கொண்டிருக்கும் உயிர்ப் பலிகள் நெஞ்சில் நெருப்பை சுமக்கும் வலியை எமக்கு தந்து கொண்டிருக்கின்றது.

ஆளப்போவது யார் என்பதல்ல பிரச்சினை வாழப்போவது யார் என்பதுதான் பிரதானம். அடுத்தவன் அரசியல் அதிகாரத்திற்கு வந்துவிடக்கூடாது என்ற சுயலாப அரசியல் கணக்குத்தான் எமது அரசியலுரிமை பிரச்சினை தீராப் பிரச்சினையாக நீடித்து வந்திருப்பதற்கு பிரதான காரணம்.

தாம் மட்டுமே ஆளவேண்டும் என்ற தனித்தலைமை வெறியும் அழிவு யுத்தத்தின் மூலம் அதிகாரங்களை கைப்பற்றி விடலாம் என்ற புலித்தலைமையின் கனவு கற்பனைகளும் தான் இன்று கிழக்கு மக்களிடையே பகைமையை தோற்றுவித்துள்ளது. இது குறித்து கிழக்கு மக்கள் விழிப்புடன் செயலாற்ற முன்வர வேண்டும்.

திட்டமிட்டு பரப்பிவிடப்படுகின்ற வதந்திகளை நம்பாதீர்கள்! வதந்திகளை நம்பி வன்முறையில் ஈடுபடாதீர்கள்! சகோதர இன சமூக மக்களிடையே தூண்டி விடப்படுகின்ற பகைமை உணர்வுகளுக்கு பலியாகி விடாதீர்கள்.
கிடைத்திருக்கின்ற இந்த அரசியல் அதிகாரத்தை அனுபவிக்கப்போவதும், அதில் நிம்மதியாக வாழப்போவதும் மக்களாகிய நீங்கள்தான்.மக்களாகிய உங்களது மகிழ்ச்சிக்கு எதிரான தீயசக்திகள் எதை விரும்புகிறார்களோ அதற்கு நீங்கள் துணையோகப்போய் விடாதீர்கள்.

மக்களாகிய உங்களது மகிழ்ச்சிக்கு தடையாக இருக்கும் தீயசக்திகள் அரசியல் அதிகாரங்களை நீங்கள் அனுபவிக்கக்கூடாது என்று திட்டமிட்டு செயலாற்றி வருகின்றார்கள். இதை உணர்ந்து கொண்டு இந்த சதிவலையில் நீங்கள் சிக்கிவிடாமல் சுயமாக சிந்திக்க வேண்டும். இன்று கிடைத்திருக்கும் இந்த அரிய சந்தர்ப்பத்தினை சரிவரப் பயன்படுத்த முன்வர வேண்டும்.

இதேவேளையில் ஜனாதிபதி கிழக்கு மாகாண முதலமைச்சர் முஸ்லிம் சகோதரர்களான கிழக்கு மாகாணசபை அமைச்சர்களும் மற்றும் உறுப்பினர்களும் இது குறித்த விழிப்புணர்வுகளை கிழக்கு மாகாண மக்களிடையே இன்னமும் அதிகமாக உருவாக்க உழைப்பார்கள் என நான் நம்புகிறேன்.

வேற்றுக்குள் ஒற்றுமை வேண்டும்.இது ஒரு இன சமூக மக்களின் வலி. இந்த வலி தீர வேண்டும்.வலி தீரும் சந்தர்ப்பத்தில் பழிக்குப் பழி என்ற சதித்திட்டங்களுக்குள் மூழ்கி விடாமல் விழிப்புடன் செயலாற்ற முன்வரவேண்டும் என அனைத்து இன சமூக மக்களையும் அனைத்து அரசியல் சக்திகளையும் தயவன்புடன் கேட்கிறேன்.

No comments: