"இப்போது நாட்டில் இடம்பெறுவது யுத்தமே அல்ல. அப்பாவித் தமிழர்களைப் புலிகளின் பயங்கரவாதப் பிடியிலிருந்து மீட்டெடுக்கும் அரசின் மனிதாபிமான நடவடிக்கையே அது. சிலருக்கு அதுவே யுத்தம் போல் தெரிகிறது." இப்படி அறிவித்திருக்கின்றது இலங்கை அரசு.
கொழும்பில், அரச தகவல் திணைக்களத்தில் நேற்று இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கின்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து அரசுப் பேச்சாளரும் ஊடகத்துறை அமைச்சருமான அநுர பிரியதர்ஷன யாப்பா இவ்வாறு அரசின் நிலைப்பாட்டை வெளிப்படுத்தி விளக்கமளித்தார்.
வடக்கில் புலிகளுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைகள் இடம்பெறுகின்ற போதிலும் இனப்பிரச்சினைக்கு இராணுவ ரீதியில் தீர்வு இல்லை என்பதில் இலங்கை அரசு தெளிவாகவே உள்ளது. பேச்சு மூலமான அரசியல் தீர்வின் ஊடாகவே இலங்கைப் பிரச்சினையைச் சுமுகமாகத் தீர்த்துவைக்க முடியும். யுத்தம் மூலமாக அல்ல என்ற நிலைப்பாட்டில் இந்தியாவும் இலங்கையும் தெளிவாகவே உள்ளன.
தற்போது வடக்கில் இடம்பெறுவது புலிகளின் பிடியிலிருந்து அப்பாவித் தமிழ் மக்களை மீட்கும் புலிகளின் பயங்கரவாதத்தை ஒழித்துக் கட்டும் மனிதாபிமான நடவடிக்கைதான். அது யுத்தமே அல்ல.எனவே, இங்கு ஒரு பெரிய யுத்தம் நடப்பது போலவும், அந்த யுத்தத்தை நிறுத்த இந்திய அரசு இலங்கை மீது அழுத்தத்தைப் பிரயோகிக்கின்றது என்பது போலவும் வீண் வாதம் பேசுவதில் அர்த்தம் இல்லை.
புலிகள் பயங்கரவாதத்தைக் கைவிடும்வரை அவர்களுக்கு எதிரான நடவடிக்கைகள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கும். அவை நிறுத்தப்படமாட்டா.
இப்படி அந்தச் செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர் யாப்பா மேலும் தெரிவித்தார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment