Sunday, June 22, 2008

தரிசனம் குறித்த செய்தி: ஒரு ஆச்சரியப்பார்வை

தரிசனம் தொலைக்காட்சி பற்றிய தங்களின் செய்தி ஆச்சரியத்தை தந்தது.ஏதோ புலம்பெயர் மண்ணில் தமிழ்மக்களின் குரலை சிறிலங்கா அரசாங்கம் நசுக்கிவிட்டது போன்ற புலிகளின் பிரச்சாரத்தை தாங்களும் முன்னெடுக்க முயன்றது செய்தியில் தெரிந்தது.தரிசனம் தொலைக்காட்சி என்பது புலிகளின் உத்தியோகபூர்வ வர்த்தகத் தொலைக்காட்சி என்பதும் அதன்மூலம் புலம்பெயர் தமிழர்கள் மத்தியில் புலிப்பிரச்சாரம் முன்னெடுக்கப்பட்டதுடன், மாதம் ஒன்றுக்கு அதன் சந்தாதாரர்கள் மூலம் 3 லட்சம் யூரோக்களை புலிகள் வருமானமாகப் பெற்றார்கள் என்பதும் ஒன்றும் இரகசியமானதல்ல.

ஊடகங்களின் சுதந்திரத்தை நசுக்குவதற்கு அரசாங்கம் முயல்வதை ஏற்றுக்கொள்ள முடியாதுதான். ஆனால் வன்னியிலோ ஏன் புலம்பெயர் மண்ணிலோ புலிகளுக்கு எதிரான கருத்துக்களைக் கொண்ட ஊடகம் ஒன்றை தடைசெய்யக்கூடிய சக்தி புலிகளுக்கு இருந்தால் அதனை தடைசெய்ய அவர்கள் முயற்சி செய்யமாட்டார்கள் என்று நீங்கள் நம்பினால், இந்த ஊடக அடக்குமுறையை எதிர்ப்பதும் சரியானதுதான்.ஐரோப்பாவில் ஈழத்தமிழர்களுக்குச் சொந்தமான ஒரேயொரு தொலைக்காட்சியை தொடரமுடியாத நிலை ஏற்பட்டிருப்பதாக தாங்கள் குறிப்பிட்டிருப்பது ஆச்சரியத்திற்குரியது.

தரிசனம் தோன்றுவதற்கு பல வருடங்களுக்கு முன்னரே தோன்றிய டான் தமிழ்ஒளி தொலைக்காட்சியும் ஈழத்தழிழருக்குச் சொந்தமானதுதான் என்பதும், அது இப்போது ஐரோப்பாவில் மாத்திரமன்றி இந்தியா போன்ற ஆசிய நாடுகளிலும் ஒளிபரப்பாகிவருவதும் தெரியாதவையல்ல.

அதுமாத்திரமல்ல, தமிழ்மக்கள் தரப்பில் இருக்கும் நியாயங்களையும் உண்மைகளையும் ஏற்றுக்கொள்ள மறுக்கும் இலங்கை அரசின் செயற்பாடுகள் மீண்டும் ஒருதடவை வெற்றிபெற்றிருப்பதாக அவர்கள் தெரிவித்திருப்பதை அப்படியே தாங்கள் வெளியிட்டிருப்பது, அவர்கள் சொல்வதை நீங்களும் ஏற்றுக்கொள்வது போல அல்லவா இருக்கின்றது.புலிகள் எப்போது தமிழர்கள் தரப்பு நியாயங்களை தமது ஊடகங்கள் மூலம் வெளிப்படுத்தினார்கள்?.

- வித்தி

குறிப்பு. தரிசனம் குறித்து தேனீயில் 22.06.08 வெளியான செய்தி தரிசனம் நிறுவனம் தெரிவித்த கருத்துக்களே ஒழிய தேனீயின் கருத்துக்கள் அல்ல.

தேணி இணையம்

No comments: