Thursday, June 26, 2008

குட்டிரேவதிக்கான பதில்

அம்மணமாய் நிற்பவர்களே!

சினிமாக் குப்பைகளிலும் சின்னத்திரை குழறல்களிலும்
சிந்தனையைத் தொலைத்துவிட்டு குழாயடிகளிலேயே வீரங்காட்டும்
விவஸ்தையில்லா வீணர்களுக்கு தாய்மண் காத்தலையே
விரதமாக்கி வித்தைகள் புரிவது வீணானதாய்ப் படலாம்

கட்டிளம் காளைகளின் கடைக்கண் பார்வைக்காய்
காலமெல்லாம் காத்திருப்பதும் களியாட்டங்களில் கரைவதுமே
கன்னியர்க்கு விமோசனம் என்றெண்ணும் சிங்காரிகளுக்கு
களத்துத் தியாகங்களும் தீரங்களும் ஏளனங்களாகலாம்.

அந்நிய மொழியும் அடுத்தவன் கலாச்சாரமுமே கண்ணில் தெரிய
அடுத்தவனின் அழுக்குகளையே அரவணைத்து ஆராதித்து
அடுக்களையும் அரட்டையுமே அகிலமான ஆரணங்குகளுக்கு
அடுத்தவனுக்காய வாழ்வதென்பதும் அர்த்தமற்றதாய் படலாம்

பெண்களின் அந்தரங்கங்களையும் ஆபாசங்களையும் பேசுபொருளாக்க
பேனாவைப் பிடித்துள்ள எழுத்துலக விபச்சாரிகளுக்கு
மண்ணையும் மக்களையுமே மனத்தில் வைத்துள்ள
மகளிரின் மகத்துவம் மலினமாய்த் தெரியலாம்

பெண்ணடிமை எதிர்ப்பினை பேச்சுக்கு மட்டுப்படுத்திப்
போதனைகள் செய்கின்ற பேதைகளுக்கும் பெருச்சாளிகளுக்கும்
சமர்க்களத்தில் சமமாய் சரித்திரம் சமைக்கும்
சாதனை நாயகிகளும் சாதாரணமாய்த் தெரியலாம்

தண்ணீருக்குக்கூட அடுத்தவனை இரந்து நின்றாலும்
தமிழன் பொங்கக்கூடாது என்றெண்ணும் தந்திரக் காரருக்குத்
தலையாட்டிக் கொண்டு சங்கப் பெண்ணின் வீரத்தை
தாலாட்டுக்கே மட்டுப்படுத்தியவருக்கும் தற்கொடை பரிகாசமாயிருக்கலாம்

அம்மணமாய் நிற்பதே அழகென்று அடம்பிடிப்பவர்களுக்கு
ஆடையின் அவசியத்தை உரைப்பதிலே என்ன பயன்?
அவர்கள் அம்மணமாகவே நிற்கட்டும் - ஆனால்
அடுத்தவன் இகழாமல் வாழநினைப்பவர்கள் ஆடைகளை நெய்வோம்.

(தமிழுக்காய், தமிழ்மண்ணுக்காய் தற்கொடை தந்த தமிழ்
சகோதரியின் தியாகத்தைக் கொச்சைப்படுத்திய இந்தியாவைச் சேர்ந்த
குட்டிரேவதிக்கான பதில்)


- காவியா

No comments: