Tuesday, June 10, 2008

அண்ணன் ஆனந்தசங்கரி அவர்களுக்கு பகிரங்க அழைப்பு விடுக்கின்றேன்!

த.வி.கூ தலைவர் ஆனந்தசங்கரி அவர்களுக்கு
ஈ.பி.டி.பி செயலாளர் நாயகம் தோழர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள்
விடுத்திருக்கும் பகிரங்க அழைப்பு!
08.06.08

அன்பின் அண்ணை!

நீங்கள் கௌரவ ஐனாதிபதி மகிந்தராஐபக்ச அவர்களுக்கு என் மீது சேறு பூசி இரு பகுதிகளாக எழுதியிருந்த கடிதங்களை ஊடகங்கள் ஊடாக வாசித்திருந்தேன். நான் இம்மடலை எழுதத்தூண்டியது உங்கள் கடிதத்தில் உள்ள விடயங்கள் அல்ல. 2001 இல் புலிகளின் முகவர் கட்சியான தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் நீங்கள் தேர்தலில் போட்டியிட்ட போது முன்னாள் ஐனாதிபதி சந்திரிகா குமாரணதுங்க அவர்களுக்கு எழுதிய கடிதத்தினை சிறு சிறு மாற்றங்களுடன் ஒரு மீள் வெளியீடாகவே இம்மடலை எழுதியுள்ளீர்கள். இதுவே இம்மடலை எழுவதற்கு என்னை தூண்டியுள்ளது. தங்களால் மீள் வரைவு செய்யப்பட்ட இம்மடலுக்கு புலிகள் சார்ந்த ஊடகங்கள் முக்கியத்துவம் அளித்து பிரச்சாரப்படுத்தியிருந்தமை எனக்கு ஆச்சரியமில்லை.

அண்ணை!... நீங்கள் பக்கம் பக்கமாக என்னை பற்றி எழுதியிருந்த கடிதம் குறித்து சில வார்த்தைகளை நான் எழுத நினைத்து பேனாவுடன் அமர்ந்த போது என் ஞாபகத்தில் ஒரு திருக்குறள் தோன்றியது.

அறங்கூறான் அல்ல செயினும் ஒருவன்
புறங்கூறான் என்றால் இனிது!..... இதுவே அந்த குறள்!

அண்ணை!.... நானும் நீங்களும் அண்மைய சில காலங்களாக நல்லுறவை பேணி வந்ததுடன் அடிக்கடி தொடர்பிலும் இருந்துள்ளோம். நீங்கள் பாசத்துடன் என்னை தம்பி என்று அழைப்பீர்கள். நானும் பாசத்துடன் கூடிய மதிப்புடன் உங்களை அண்ணன் என்று அழைப்பதுண்டு!

ஒரு வருடத்திற்கு முன்பு நாம் இருவரும் தென்னாபிரிக்காவிற்கான பயணத்தை மேற்கொண்டிருந்தோம். அங்கு பல முன்னணி மந்திரி சபை உறுப்பினர்கள், அரசியல் கட்சி தலைவர்கள், இந்திய வம்சாவழி தமிழ் அமைப்புகள் என பலரையும் சந்தித்திருந்தோம். புலிகளின் தவறானதும், பொய்யானதுமான பிரச்சாரங்களுக்கு எடுபட்டிருந்த அவர்களுக்கு இலங்கையின் உண்மை நிலவரங்களை எடுத்து விளக்கியிருந்தோம். இவைகள் இன்னமும் என் நினைவலைகளில் இருந்து மங்கிப்போயிருக்கவில்லை. இந்நிலையில் திடீரென என் மேல் உங்களுக்கு வெறுப்புணர்வை ஊட்டியமை என்னவென்று எனக்கு விளங்கவில்லை.

தென்னாபிரிக்காவில் 25.04.2007

உங்கள் மடலில் என்னைப்பற்றி நீங்கள் குறிப்பிட்ட குற்றச்சாட்டுக்கள் எனக்கு புதியவை அல்ல. இவைகள் கடந்த பல வருடங்களாக வீசி எறியப்பட்ட சேற்றில் எஞ்சிய பாகங்களாகும்.அவற்றினுள் இரு தசாப்தங்கள் பழமை வாய்ந்தமை.இச்சேறடிப்புகளை எல்லாம் நான் கடந்து வந்து பல காலங்கள் ஆகிவிட்டன.இச்சேற்றுத்துகள்களை அகழ்ந்தெடுத்து என் மீது வீசும்படி தற்போது தூண்டி விட்டிருப்பது என்னவாக இருக்கலாம் என்பது எனக்கு வியப்பை தந்துள்ளது.

வடக்கின் வஷேட செயலணிக்குழுவின் தலைவராக என்னை ஐனாதிபதி மகிந்த ராஐபக்ச அவர்கள் நியமித்திருந்தமையையே தங்களின் விசனத்திற்குரிய காரணியாக காட்டியுள்ளீர்கள்.

அண்ணை!....இவ் விஷேட செயலணிக்குழுவின் தலைவராக நான் ஐனாதிபதி அவர்களால் நியமிக்கப்பட்டு அதற்கான அமைச்சரைவை பத்திரத்திற்கான அங்கீகாரமும் வழங்கப்பட்டவுடன் நான் உங்களுடனும் புளொட் தலைவர் தோழர் சித்தார்த்தன் அவர்களுடனும் ஈ.பி.ஆர்.எல்.எவ் செயலாளர் தோழர் சிறீதரன் அவர்களுடனும் தொடர்பு கொண்டு இவ்விடயத்தை தெரிவித்திருந்தேன்.அத்துடன் இச்செயலணிக்குழுவின் மூலம் வடக்கில் வாழும் மக்களின் துயர் துடைக்கும் சேவையை செய்ய முன்வருமாறும் அழைப்பும் விடுத்திருந்தேன்.

இக்குழு நியமிக்கப்பட்டு ஊடகங்களுக்கு அறிவிக்கப்படுவதற்கு முன்னரே நான் உங்களின் ஆதரவையும் ஆலோசனைகளையும் கோரியிருந்தேன்.

நாம் எல்லோரும் தமிழ் பேசும் மக்களை புலிகளின் பாசிசப்பிடியில் இருந்து விடுவிப்பதுடன் ஒரு சுமுகமான சூழலை ஏற்படுத்துவது ஐனநாயகத்தை மீளக்கட்டியமைப்பது எமது மக்களை அன்றாட அவலங்களில் இருந்து மீட்டெடுப்பது போன்ற நோக்கங்கங்களுக்காக செயற்பட்டு வருபவர்கள். நாம் எமது நாட்டில் வாழும் தமிழ் பேசும் மக்களின் பிரச்சினைக்கு கௌரவமான ஒரு அரசியல் தீர்விற்காக ஆர்வத்துடன் உழைத்து வருபவர்கள்.இம்முயற்சியில் ஈடுபட்டமைக்காக தமிழர் விடுதலை கூட்டணி பெறுமதி மிக்க தலைவர்களை இழந்திருக்கின்றது.அ.அமிர்தலிங்கம் வே. யோகேஸ்வரன் சறோஐpனியோகேஸ்வரன் போன்றவர்களை குறிப்பிட்டு சொல்ல முடியும்.

இது போலவே நான் தலைமை வகிக்கும் ஈ.பி.டி.பி யும் பல முன்னணி உறுப்பினர்களை பறிகொடுத்திருக்கின்றது.இந்த நீண்ட பட்டியலில் இறுதியாக நிகழ்ந்த இழப்புத்தான் மகேஸ்வரி வேலாயுதம் அவர்களின் இழப்பாகும்.புளொட் மற்றும் ஈ.பி.ஆர்.எல்.எவ் அமைப்புகளும் இது போலவே பல இழப்புகளை சந்தித்திருக்கின்றன.

அண்ணை!.... நான் பதவிக்காகவும் பிரசித்திக்காகவும் அரசியலில் ஈடுபட்டிருக்கவில்லை.
பிரபாகரன் உண்மையாகவே பயங்கரவாதத்தை கைவிட்டு ஐனநாயக நீரோட்டத்தில் குதிப்பாரேயானால் நான் அரசியலில் இருந்து விலக்கொள்ள தாயார் என்று நான் மீண்டும் மீண்டும் பல தடவைகள் கூறிவந்திருக்கின்றேன். எனது அரசியல் நிலைப்பாட்டில் என்றும் மாற்றம் இல்லை. நீங்கள் எழுதியதைப்போல் கடுமையான வார்த்தைப்பிரயோகங்களால் என்னாலும் பதிலளிக்க முடியும். ஆனால் நான் அப்படி செய்ய விரும்பவில்லை. நீங்கள் தமிழ் பேசும் மக்களுக்கு செய்திருக்கும் சேவைகளை நான் மதிக்கின்றேன். எமக்கிடையில் அரசியல் முரண்பாடுகள் இருக்கலாம். அதற்காக நாம் இருவரும் மாறி மாறி ஒவ்வொருவர் முகத்திலும் துப்ப வேண்டிய அவசியம் இல்லை. வேற்றுமைக்குள் ஒற்றுமைதான் தேவையானது.

எங்கள் சமூகத்தையே தாண்டவமாடிக்கொண்டிருக்கும் ஒரு பொது எதிரிக்கு நாங்கள் முகம் கொடுத்து வருகின்றோம். நாம் எந்தளவிற்கு பிரிந்து நிற்கின்றோமோ அந்த அளவிற்கு புலிப்பாசிசம் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் இன்னமும் வேரூன்றிவிடும்.எமது சமூகத்தை இ;ன்னமும் அதிகமாக அது வலுவிழக்க செய்து விடும்.கோடிப்புறத்தில் கிடக்கும் சாக்கடைக்குழிகளை கிளறுவதை தவிர்த்துவிட்டு தமிழ் பேசும் மக்களை சொல்ல முடியாத துயரங்களில் இருந்து மீட்பதற்கு நாம் அனைவரும் முன்னின்று உழைக்க வேண்டும்.

எமது சமூகத்திற்கான சேவையினை முன்னெடுத்து செல்வதற்கான தங்களது ஒத்துழைப்பையும் ஆலோசனைகளையும் நான் தங்களிடம் கோரி நிற்கின்றேன்.

தங்களது 75 ஆவது பிறந்ததினத்திற்கான முன்கூட்டிய வாழ்த்துக்களுடன் விடை பெறுகின்றேன்!

நன்றி!

செயலாளர் நாயகம்
கே. என். டக்ளஸ் தேவானந்தா
ஈழ மக்கள் ஐனநாயக கட்சி ஈ.பி.டி.பி!

No comments: