Wednesday, July 16, 2008

தலைவர் 75அகவையைப் பூர்த்தி செய்த நேரத்தில் ஒரு வேண்டுகோள்!

தமிழர் விடுதலைக் கூட்டணியும் தலைவர் வீ.ஆனந்தசங்கரியும் அவசியம் செய்ய வேண்டிய இரண்டு விடயங்கள்.

- வன்னியத்தேவன்

தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர் வீ.ஆனந்தசங்கரி, அண்மையில் ஜனாதிபதிக்கு அனுப்பிவைத்த கடிதம் ஒன்று, அரசியல் அரங்கில் சிறு சலசலப்பொன்றை ஏற்படுத்தியிருக்கின்றது. அவர் அந்தக் கடிதத்தில், வடமாகாணத்திற்கு அரசாங்கத்தால் அமைக்கப்பட்ட செயலணிக்குழுவுக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை நியமித்ததிற்கு ஆட்சேபனையும் கண்டனமும் தெரிவித்திருந்தார். திரு.வீ.ஆனந்தசங்கரியின் இந்த நிலைப்பாடு, புலிகளுக்கு எதிரான ஜனநாயக சக்திகள் மத்தியில் பெருத்த கவலையையும் அதிருப்தியையும் ஏற்படுத்தியதை அவதானிக்கக் கூடியதாகவிருந்தது. திரு.வீ.ஆனந்தசங்கரி முன்வைத்த நியாயங்களில் சில உண்மைகள் இருப்பினும், இலங்கை அரசாங்கத்தைப் பொறுத்தவரை, அவரைவிட டக்ளஸ் தேவானந்தாவே பொருத்தம் எனக்கருதுகையில், திரு.வீ ஆனந்தசங்கரி சற்று விட்டுக்கொடுத்து ஒதுங்கியிருந்திருக்கலாம் என்பதே பலரின் அபிப்பிராயமாக உள்ளது. அதிலும் குறிப்பாக புலிகளையும் விட ஈ.பி.டி.பியே மோசமானவர்கள் என்ற திரு.வீ ஆனந்தசங்கரியின் கூற்று பலரை முகத்தைச்சுழிக்க வைத்துவிட்டது. சிலர் ‘இவருக்கு என்ன நடந்துவிட்டது?’என ஆவேசப்பட்டதையும் காணமுடிந்தது. மேலும் சிலர் திரு.வீ.ஆனந்தசங்கரிக்கு எதிராக மிகமோசமான விமர்சனங்களையும் கூட முன்வைத்தனர். இவையெல்லாவற்றையும் இங்கு குறிப்பிடுவதின் நோக்கம், திரு.வீ.ஆனந்தசங்கரியை தாழ்த்துவதற்கோ அல்லது டக்ளஸை தூக்கிவைப்பதற்கோ அல்ல. திரு.வீ.ஆனந்தசங்கரி ஜனாதிபதிக்கு எழுதிய கடிதம் குறித்து மக்கள் என்ன கருதுகிறார்கள் என்பதை அவருக்கு தெரிவிப்பதற்காகவே.

திரு.வீ.ஆனந்தசங்கரி ஒரு மூத்த தமிழ் அரசியல்வாதி. அவர் தன்னுடைய அரசியல் வாழ்வை லங்கா சமசமாஜக் கட்சியில் ஆரம்பித்தாலும், பின்னர் நீண்டகாலம் தமிழ் அரசியல்வாதியாக இருந்ததுடன், இரு தடவைகள் (1970 ஆண்டுத் தேர்தலிலும் 1977 ஆண்டுத் தேர்தலிலும் கிளிநொச்சித் தொகுதியில் வெற்றி பெற்றார்) கிளிநொச்சித் தொகுதி பாராளுமன்ற உறுப்பினராகவும் இருந்துள்ளார். அதுமாத்திரமின்றி ஆர்.சம்பந்தன், மாவை சேனாதிராஜா போன்ற ஏனைய கூட்டணி ஆட்கள் பதவிக்காக புலிகளின் வாலில் தொங்கியதுபோல, புலிகளின் வாலில் தொங்காதவர். வருங்காலத்தில் தமிழர்களின் உண்மையான வரலாறு எழுதப்படும்போது, திரு.வீ ஆனந்தசங்கரி மேற்கொண்ட சரியான நிலைப்பாட்டுக்காக அவரது பெயர் தமிழர் வரலாற்றில் பொன்னெழுத்துகளால் பொறிக்கப்படும் என்பது நிச்சயம். இன்றைய சூழ்நிலையில் ஒரு மூத்த அரசியல்வாதி என்ற முறையிலும், தமிழர் விடுதலைக் கூட்டணித தலைவர் என்ற வகையிலும் திரு.வீ. ஆனந்தசங்கரி அவர்களுக்கு முன்னால் இரண்டு முக்கியமான பணிகள் காத்துக்கிடக்கின்றன.

ஒன்று, திரு.வீ. ஆனந்தசங்கரி அவர்கள் தமிழ் ஜனநாயக சக்திகள் மத்தியில் இருக்கின்ற குழுவாத அரசியலில் சிக்காமல், ஒரு பரந்த கண்ணோட்டத்துடனும் தீர்க்கதரிசனமிக்க பார்வையுடனும் எல்லா தமிழ் ஜனநாயக சக்திகளுடனும் நட்புறவைப்பேணி, அவர்களை ஓரணியில் திரட்டி சக்திமிக்கதாக்குவது. ஏனெனில் புலிப் பாசிசவாதிகளுக்கெதிரான ஜனநாயக சக்திகள் பெருமளவில் இருந்தும், அவர்கள் மத்தியிலுள்ள தேவையற்ற முரண்பாடுகளால், அவர்கள் பலத்துடன் முன்னேறிச்செல்ல முடியாதிருக்கின்றது. அதன் வெளிப்பாடுகளை கிழக்குமாகாணசபைத் தேர்தலின்போது தெளிவாகக் காணக்கூடியதாக இருந்தது. அந்தத் தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணி, ஈ.பி.டி.பி., தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள், புளொட், ஈ.பி.ஆர்.எல்.எப், ஈரோஸ் என்பனவும் இடதுசாரிக் கட்சிகளும் ஓரணியில் நின்று போட்டியிட்டிருந்தால், கிழக்குமாகாணசபைத் தேர்தல் முடிவு வேறுவிதமாகவும், ஆரோக்கியமானதாகவும், கிழக்கு மாகாணத் தமிழ் - முஸ்லிம் மக்களுக்கு நன்மையானதாகவும் இருந்திருக்கும். எனவே வருங்காலத்தில் இந்த நிலையை மாற்றுவதானால், திரு.வீ.ஆனந்தசங்கரி ஒரு குறிப்பிட்ட கட்சியைச் சேர்ந்த அரசியல்வாதி என்ற வரையறையைத்தாண்டி, தமிழ் ஜனநாயக சக்திகளின் ஜக்கியத்துக்காக செயல்படுவது காலத்தின் தேவையாகும்.

இரண்டாவது விடயம், தமிழர் விடுதலைக் கூட்டணியின்; 1976 ஆண்டு வட்டுக்கோட்டை மாநாடுத் தமிழீழ தீர்மானத்தை தவறென பகிரங்கமாக ஒப்புக்கொள்வது. இது மிகமிக முக்கியமானது. இன்று புலிகளைத்தவிர மற்றைய எல்லாத்தமிழ்கட்சிகளும் தனித்தமிழ்நாடு என்ற கொள்கையைக் கைவிட்டுவிட்டன. அவர்கள் அதைக்கைவிட்டதற்கான காரணங்களும், சூழ்நிலைகளும் பல்வேறு வகைப்பட்டதாக இருப்பினும், அந்த அழிவுகரமான கொள்கையைக் கைவிட்டதை ஒரு வரலாற்றுத் திருப்பம் என்றுதான் சொல்லவேண்டும். ஏனெனில் அந்த மதியூகமற்ற கொள்கையால் தமிழினம் இதுவரை அனுபவித்த துன்பங்கள் கணக்கிலடங்கா. இதில் ஒரு முக்கியமான விடயம் என்னவென்றால், தமிழ் இளைஞர்களை இந்த அழிவுப்பாதையில் தள்ளிவிட்ட தனித்தமிழ்நாட்டு; முடிவை எடுத்தவர்கள் தமிழர் விடுதலைக் கூட்டணியினரே. அவர்கள் தான் 1976ம் ஆண்டு வட்டுக்கோட்டையில் மாநாடு கூடி இந்தத் தவறான முடிவை எடுத்தனர். இலங்கைத்தமிழ் மக்களின் பிரச்சனையைத் தீர்ப்பதற்கு வேறு வழியின்றியோ அல்லது தமிழீழத்தை அடையலாம் என்ற நம்பிக்கையுடனேயோ அவர்கள் அந்த முடிவை எடுக்கவில்லை. தமது சுயநல அரசியலைப் பாதுகாக்கவே தமிழர் விடுதலைக் கூட்டணியினர் இந்த அபாயகரமான முடிவை எடுத்தனர். ஏனெனில் தமிழர்களின் மூத்த அரசியல் கட்சி என வர்ணிக்கப்படும் ஜீ.ஜீ.பொன்னம்பலத்தின் தலைமையிலான அகில இலங்கை தமிழ் காங்கிரசிலிருந்து பிரிந்து சென்று, எஸ்.ஜே.வி.செல்வநாயகம் தலைமையில் இலங்கைத் தமிழரசுக்கட்சியை உருவாக்கிய நாளிலிருந்தே, அவ்விரு கட்சிகளும் நாய் - பூனைச் சண்டையில் தான் காலத்தைக் கழித்தன. ஒருவர் காகம் கறுப்பு என்றால், மற்றவர் வெள்ளை என்பார்! அவ்வாறுதான் அவர்களது அந்தக்கால அரசியல் நடைபெற்று வந்தது. தேர்தல்களில் அவர்களை மாறிமாறி தெரிவுசெய்து அலுத்த தமிழ்மக்கள், இருகட்சிகளினதும் முக்கிய தலைவர்களை 1970 தேர்தலில் தோற்கடித்துப் பாடம் புகட்டினர். இது அவர்களுக்கு ஒரு அபாய எச்சரிக்கையாக அமைந்தது.

இனியும் தாம் பிரிந்து நின்றால் மக்கள் தம்மை முற்றுமுழுதாக நிராகரித்து விடுவார்கள் என்ற பயம் அவர்களை திடீரென விழித்துக்கொள்ள வைத்தது. எனெனில் இந்த இரு தமிழ்கட்சிகளும் 1965ல் அமைந்த டட்லி சேனநாயக்கவின் ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தில் இணைந்திருந்த நேரத்தில், வடபகுதி தாழ்த்தப்பட்ட மக்களின் தீண்டாமைக்கு எதிரான போராட்டத்தை வடபகுதி புரட்சிகர கம்யூனிஸ்ட்டுகள் ஒனறு திரண்டு தீவிரமாக முன்னெடுத்திருந்தனர். அதன் காரணமாக தாழ்த்தப்பட்ட மக்களிடம் மட்டுமின்றி, அனைத்து தமிழ்மக்களிடமும் அவர்களுக்கு ஆதரவு பெருகியிருந்தது. தமிழ்த் தலைவர்கள் 1970 ஆண்டுத் தேர்தலில் தோற்றதிற்கு அதுவும் ஒரு காரணம். அதுவுமல்லாமல் 1972ம் ஆண்டில் சிறீமாவோ பண்டாரநாயக்க அரசு கொண்டுவந்த குடியரசு அரசியல் சாசனம் தமிழ்மக்களுக்கு பாதுகாப்பாக இருந்த 29வது சரத்தை நீக்கியதை எதிர்த்தும், இனரீதியான மாணவர் தரப்படுத்தலை எதிர்த்தும், கம்யூனிஸ்ட்டுகள் பிரச்சார இயக்கமொன்றையும் ஆரம்பித்திருந்தனர். அதற்காக தமிழ் மக்கள் எல்லோரையும் ஒன்றுபடுத்தும் நோக்குடன் ‘தமிழ் மக்கள் ஜனநாயக முன்னணி’என்ற அமைப்பையும் வடபகுதி புரட்சிகர கம்யூனிஸ்ட்டுகள் உருவாக்கியிருந்தனர். இவையெல்லாம் இரண்டு தமிழ் கட்சிகளின் தலைமைகளையும் பெரும் அச்சத்திற்கு உள்ளாக்கியிருந்தன. (அந்தக் காலகட்டத்தில் வெளிவந்த தமிழரசு, தமிழர் கூட்டணியின் பிரச்சார ஏடான ‘சுதந்திரன்’இதழ்களை எடுத்துப் பார்த்தால், கம்யூனிஸ்ட்டுகளுக்கு எதிரான எண்ணற்ற கட்டுரைகளைக் காணமுடியும்.) எனவே இரண்டு தமிழ் கட்சிகளின் தலைமைகள் இரண்டு முடிவுகளுக்கு வந்தார்கள். ஒன்று, தமிழ் பிற்போக்கு சக்திகள் எல்லாவற்றையும் ஓரணியில் திரட்டுவது. மற்றது, கம்யூனிஸ்ட்டுகளின் பிராந்திய சுயாட்சி கொள்கையை கீழே தள்ளும் வகையில் தனித்தமிழ் நாட்டுக் கொள்கையை பிரகடனம் செய்வது.

அதன் அடிப்படையில் தமிழரசு, தமிழ்காங்கிரஸ் கட்சிகளை மட்டுமின்றி வ.நவரத்தினம் தொடங்கிய ‘தமிழர் சுயாட்சி கழகம்’, மாவிட்டபுரம் கந்தசாமி கோவில் ஆலயப்பிரவேசப் போராட்டத்தின்போது சாதிவெறியாட்டம் போட்ட வவுனியா முன்னாள் எம்.பி சி.சுந்தரலிங்கம் தொடங்கிய ‘அடங்காத்தமிழர் ஒற்றுமை முன்னணி’, மலையகத்தின் பிற்போக்கு கட்சியான ‘இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ்’என்பவற்றை இணைத்துக் கொண்டு ‘தமிழர் விடுதலைக் கூட்டணி’என்ற அமைப்பை உருவாக்கினர். இந்த புதிய கூட்டணியின் பிற்போக்குத்தன்மையைப் புரிந்து கொண்ட ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ஜே.ஆர்.ஜெயவர்த்தன, தனது பங்கிற்கு அதனை ஆதரிக்கும் முகமாக, தனது கட்சியின் சிரேஷ்ட தலைவர்களில் ஒருவரான கே.டபிள்யூ.தேவநாயகத்தை தமிழர் விடுதலைக் கூட்டணியில் இணைய வைத்தார். அவ்வாறு உருவாக்கப்பட்ட தமிழர் விடுதலைக் கூட்டணிதான் 1976ல் வட்டுக்கோட்டையில் மாநாடு கூட்டி தமிழீழ தீர்மானத்தை நிறைவேற்றியது. ஆனால் கூட்டணியின் மூன்று இணைத்தலைவர்களில் ஒருவரான சௌமியமூர்த்தி தொண்டமான், ஆரம்பத்திலேயே தமிழீழத் தீர்மானத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து, அதன் கூட்டங்களில் பங்குபற்றாமல் ஒதுங்கிக் கொண்டார். தமிழர் விடுதலைக் கூட்டணியின் இன்னொரு இணைத்தலைவரான ஜீ.ஜீ.பொன்னம்பலம், தான் மரணிக்கும்வரை கூட்டணியின் ஒரு கூட்டத்திலாவது பங்குபற்றவில்லை. அவர் இறந்தபின்னர், அவரது உடலைத்தான் யாழ் பிரதான வீதியிலிருந்த கூட்டணிக் காரியாலயத்தில் கொண்டுவந்து வைத்து அஞசலி செலுத்தினர். தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட தலைவர்களில் ஒருவரான முன்னாள் அமைச்சர் மு.திருச்செல்வம் கூட தமிழீழத் தீர்மானத்தை ஏற்கவில்லை. உண்மையில் தமிழீழம் அமைப்பது சாத்தியமில்லை என்பது கூட்டணியின் ஏனைய தலைவர்களுக்கும் நன்கு தெரிந்தே இருந்தது. ஆனால் தாம் அடுத்த பொதுத்தேர்தலில் பாதுகாப்பாக வெற்றிபெறுவதற்கும், கம்யூனிஸ்ட்டுகள் தமிழ்மக்கள் மத்தியில் செல்வாக்குப் பெறாமல் தடுப்பதற்காகவுமே, வலிந்து இந்தத் தீர்மானத்தை எடுத்தனர்.

குறிப்பாக, 1970 ஆண்டுத் தேர்தலில் தோல்வியுற்றிருந்த காலஞ்சென்ற திரு.அ.அமிர்தலிங்கம், காலஞ்சென்ற திரு மு.சிவசிதம்பரம் போன்றோருக்கு இத்தீர்மானம் அத்தியாவசியமாக இருந்தது. ஆனால் குறுகிய அரசியல் ஆதாயங்களுக்காக எடுத்த தீர்மானம், பின்னர் அந்தத் தீர்மானங்களை எடுத்தவர்களையே பலி எடுத்து, அதன் பாரதூரமான தவறான போக்கை நிரூபித்துவிட்டது. இருந்தும் அத்தவறான தீர்மானத்தை நம்பி தமிழ் இளைஞர்கள் ஆயுதம் ஏந்தியதால், தமிழர்களின் இரண்டு தலைமுறைகள் நாசமாகியதுடன் பெரும் அழிவும் ஏற்பட்டுவிட்டது. இன்று அது விடுதலைப்புலிகள் என்ற வடிவத்தில், பாசிசமாக உருவெடுத்து தமிழினத்தையே அழித்து வருகின்றது. தமிழீழத்திற்காக ஆயுதமேந்திப் போராடிய பல இயக்கங்கள் அத்தவறிலிருந்து மீண்டுவிட்டாலும், அந்த தவறான கருத்தோட்டம் இன்னும் தமிழர் வாழ்வில் கணிசமான ஆதிக்கத்தைச் செலுத்துவதைக் காணக்கூடியதாகவுள்ளது.

இந்த இடத்தில்தான் தமிழர் விடுதலைக் கூட்டணிக்கும்;, அதன் தலைவர் என்ற ரீதியில் திரு.வீ.ஆனந்தசங்கரிக்கும் பாரிய பொறுப்பு ஒன்று உள்ளது. ஏனெனில் அக்கட்சியும் அதன் தலைவரும் ஜக்கிய இலங்கைக்குள் இனப்பிரச்சினைக்கு தீர்வுகாணப்படவேண்டும் என பேசி வருகின்ற போதிலும், அவர்கள் இன்றுவரை தாம் முன்னர் எடுத்த தமிழீழத் தீர்மானத்தை கைவிட்டதாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கவில்லை. அந்த பகிரங்க அறிவிப்பினை அவர்கள் உடனடியாச் செய்வது அவசியமானது. இல்லாவிடின் பிறிதொரு சமயத்தில், திரு.வீ.ஆனந்தசங்கரிக்குப் பின்னர் யாராவது ஒருவர் தன்னைத் தமிழர் கூட்டணிக்காரர் என்று சொல்லிக் கொண்டு தமிழீழத் தீர்மானத்தைத் தூக்கிப்பிடிக்க முடியும். அத்துடன் தமிழீழத் தீர்மானம் ஏன் தவறானது, அது எவ்வாறு குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக உருவாக்கப்பட்டது என்பதையும், தமிழ்மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டிய கடப்பாடும் தமிழர் விடுதலைக் கூட்டணிக்கும் வீ.ஆனந்தசங்கரிக்கும் உண்டு. இந்தப்பொறுப்பை அவர்கள் தட்டிக்கழித்துவிடமுடியாது. எனவே இனியும் காலம் தாழ்த்தாது, தமிழர் விடுதலைக் கூட்டணியினர் தமது உறுப்பினர்களின் தேசிய மாநாடொன்றைக் கூட்டி, முறைப்படி வட்டுக்கோட்டைத் தமிழீழத் தீர்மானம் தவறு என்பதையும், அதைத்தாம் கைவிட்டுவிட்டோம் என்பதையும் பகிரங்கமாக மக்களுக்கு அறிவிக்க வேண்டும். அதன் மூலம் தமிழ் மக்களை தவறான வழியிலிருந்து மீட்டெடுக்க முடிவதுடன், சிங்களமக்கள் மத்தியிலும் நம்பிக்கையை ஊட்டமுடியும். தமிழர் விடுதலைக் கூட்டணியும் ஆனந்தசங்கரியும் அதைச்செய்வார்களா?

தேணி இணையம்

No comments: