- அகதித்தமிழன்
இறுதியாக விடத்தல் தீவு புலிகளின் பிடியிலிருந்து விடுவிக்கப்பட்டது என்ற செய்தி வெளியாகிவிட்டது. புலிகளின் அரசியல், இராணுவ வறுமையின்வெளிப்பாடிது. வியட்னாம்- அமெரிக்கப்போரில் டனாங் வீழ்ந்தது, நொம்பென் வீழ்ந்தது என்ற செய்திகள் வியட்கொங்கின் வெற்றிச்செய்திகளாக 1970களின் நடுப்பகுதியில் வெளிவந்த வீரகேசரியின் முற்பக்கங்களை அலங்கரித்திருந்தன. ஆனால் இங்கு நடந்து கொண்டிருப்பது ஒரு விடுதலைப்போராட்டத்தின் வீழ்ச்சி என பல தமிழர்கள் குழம்பிப்போயிருப்பார்கள். உண்மையில் இது தமிழ் பாசிசத்தின் வீழ்ச்சி.
மக்களின் அபிலாசைகள் மீதல்லாமல் தமது அதிகார அகங்கார நப்பாசைகளைக் கொண்ட இயக்கத்தின் வரலாறு எவ்வாறான துன்பியலில் முடிவுறும் என்பதற்கு தற்போதைய நிகழ்வுகள் சாட்சி. முதலில் துன்பத்தில் உழலும் மக்கள் பற்றி கொஞ்சமேனும் பிரக்ஞை வேண்டும். ஒன்றிரண்டு ஆண்டுகளல்ல 30 ஆண்டுகள் இந்த மக்களின் வாழ்வு பந்தாடப்பட்டு வந்திருக்கிறது அல்லது பகடைக்காயாக பாவிக்கப்பட்டிருக்கிறது. எத்தனைஆயிரம் உயிர்கள் காவுகொள்ளப்பட்டன. எத்தனை லட்சம் மக்கள் புலம்பெயர்ந்தும் இடம்பெயர்ந்தும் சென்றார்கள். வாழிடங்களுக்கும் சொத்துக்களுக்கும் நேர்ந்த நாசங்கள் இங்கு கணக்கிடமுடியுமா. போராட என்று புறப்பட்டவர்களுக்கு கொஞ்சமேனும் மக்கள் பற்றிய அக்கறை இருந்திருக்குமானால் தமிழ் சமூகம் இன்றைய அவல நிலையை எய்தியிருக்காது.
இன்றும் தமிழ்மக்களின் வாழ்வுப்பரிமாணங்கள் பற்றி நூற்றுக்கணக்கான ஆய்வுரைகள் ஆவணச்சித்தரிப்புக்கள் வெளிவருகின்றன. ஆனால் சொந்த நிலத்தில் தமிழ் சமூகம் நொந்து நூலாகிவிட்டது. இன்னும் ஒரு தசாப்தத்திற்கு பின்னர் தமிழ் சமூகத்தின் நிலை என்னவாகும் என்பது நினைவுகளை நெருடுகிறது.போராட்டம் என்பது சுதந்திரம் சுயமரியாதையுடன் கூடியகௌரவமான வாழ்விற்காகவே. ஆனால் இங்கு நடந்திருப்பது என்னவோ இருந்த சுதந்திரத்தையும் இழந்த நிலையே. இதற்கு சிங்களவர்கள் மீதோ அல்லது பௌத்த சிங்கள மேலாண்மையின் மீதோ மாத்திரம் குற்றம் சொல்வதை விட பாசிசமாக மாறிய தமிழ் தேசியத்தின் குரூரம் மீதும் தான் குற்றம் சொல்ல முடியும்.
சமூகம் என்ற ரீதியல் அதன் பெறுமதியான அத்தனை விடயங்களையும் அவர்கள் அழித்தார்கள். இறுதியாக சமூகத்தை குற்றுயிராக நிறுத்தினார்கள் .இந்த நிலையில் தன்னும் அவர்களால் ஆக்கப+ர்வமாக சிந்திக்க முடியவில்லை அல்லது சிந்திக்க மறுக்கிறார்கள். இதற்கு மேலும் சமூகம் துன்புறமுடியாது. மீள் கட்டியெழுப்பமுடியாத அளவிற்கு வாழ்வாதாரங்கள் அழிக்கப்பட்டு விட்டன. எனவே சர்வதேச அணுசரணையுடன் இணக்கப்பாடு விட்டுக்கொடுப்புடன் தமிழ்மக்களின் குறைந்த பட்ச அடிப்படை அபிலாசைகளைத் தன்னும் அடைவதற்கான செயற்பாடு;களை முன்னெடுப்பதற்கான திராணியோ நேர்மையோ அறிவோ அற்றவர்களாகவே காணப்படுகிறார்கள் .
ஆக்கபூர்வமாக யாரேனும் சிந்திப்பார்களால் அவர்கள் உடல் மீதியின்றி அழிக்கப்படுகிறார்கள்.அவ்வாறு சிந்திப்பவர்கள் “கொல்லப்படக் கடவர்” என்பதே எமது சமூகத்தில் நிலவும் எழுதப்படாத விதியாகும். எனவே எமது சமூகத்தில் புதியதேடலுடன், சமூக பிரக்ஞையுடன் யாரும் வெளிக்கிளம்பி வருவது உயிரைப்பணயம் வைக்கும் , ஊரை குடும்பத்துடன் துறக்கவேண்டிய தியாகத்திற்குரிய செயலாகும் .எமது சமூகப்பிரஜை ஒருவன் சிந்திக்குமாற்றல் கொண்டவனாக மனித உரிமைவாதியாக கவிஞனாக ,இலக்கிய வாதியாக இருப்பது மிக மிக ஆபத்தானதாகும் .வன்னியின் தெய்வங்களை சிரமேற்கொள்பவனாகவும் அதன் விருப்பங்களுக்கேற்ப தாளம் தப்பாமல் ஆடுபவனாகவும் இருக்கவேண்டும். அவ்வாறு ஆடுவதற்கு சன்மானமாக சில போகப்பொருட்கள், வழங்கப்படும். சில பொற்காசுகள் விட்டெறியப்படும். புலிகளின் உறுப்பினர்கள் மத்தியகால ரோமானிய அடிமைகள்போல வாழப்பழக்கப்படுத்தப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் சண்டையிட்டு மடிவதை இந்த போகித்தொண்டரடிப்பொடிகள் ஐரோப்பிய வடஅமெரிக்க நாடுகளில் பிரசாரம் செய்து செகரியங்களை அனுபவித்துக்கொண்டு திரிகிறார்கள்.பலாத்காரமாக பிடிக்கபட்டு பங்கர் பொறியில் வைக்கபட்ட எமது மக்களின் பிள்ளைகள் மரணிப்பதற்கு நியாயம்சொல்லித் திரியும் சிவாஜிங்கம் ,ஜெயானந்தமூர்த்தி, கஜேந்திரன் வகையறாக்களைதான் யாம் இங்கு குறிப்பிடுவது. யுத்தமுனை காப்பரண்களில் பலாத்காரமாக சிறைவைக்கப்பட்ட- பொறியாக மாற்றப்பட்ட சிறுவர் சிறுமியரின் எதிர்காலத்தை விற்று ஐரேப்பாவில் சுதி பண்ணித் திரியும் இந்த திருக்கூட்டத்தை தமிழர்கள் முதலில் விளங்கிக் கொள்ளவேண்டும்.
'பொங்குதமிழ் என்று ஹிட்லர் பாணிச் சத்தியப்பிரமாணம் செய்யும் உலகத் தமிழர் கூட்டம் நேர்த்தியாக உடையணிந்து பொழுதுபோக்காக இதனை நடத்துகிறது. ஆனால் உருவழிந்து மனம் பேதலித்து மரணிக்கும் எம் சின்னஞ்சிறுசுகள் பற்றி இந்த பிரகிருதிகளுக்கு கொஞசமேனும் கருணை உண்டா. புலி போல் வேசமணிந்து வருவது இந்த பிரகிருதிகளுக்கும் இவற்றின் பெண்டுபிள்ளைகளுக்கும் உற்றசுற்றத்திற்கும் டிஸ்னிலாண்ட- மிக்கிமௌஸ-; ரெடிபியர் விளையாட்டு. இங்கு வாழ்க்கை கந்தலாகிப் போன பெற்றோரின் பிள்ளைகளின் அவலமானதும் அனாதரவானதுமான மரணம். இந்த மரணங்களில் தனது அதிகார அகங்காரத்தை நிலை நிறுத்த முயலும் பாசிசத் தலைவனின் படத்தை இவர்கள் காவித் திரிகிறார்கள் .இங்கு தமிழர்களின் வாழ்வில் விடிவென்று எதுவும் கிடையாது. அது குற்றுயிராய் மரணப்படுக்கையில் கிடக்கிறது.
இந்த அவலவாழ்வை எள்ளி நகையாடும் புலம்பெயர்ந்த வண்ண விளையாட்டே பொங்கு தமிழ" ஊரிலுள்ள தமிழர்கள் தாம் வாழ்வது போல் இல்லாவிட்டாலும் கொஞ்சமாவது சுதந்திரமாக கௌரவமாக வாழ்வதற்கு தாம் ஏதாவதுசெய்கிறோமா என்பதை தம் மனச்சாட்சியிடம் இவர்கள் கேட்கவேண்டும்.தனித்து விடப்பட்ட வதை கூடங்களில் போல் தொடர்பின்றி வாழும் எம்மக்கள் ஹிட்லர்கால யூதர்கள் போன்று மஞ்சள் நட்சத்திரங்களை அணியவில்லையே தவிர, மற்றப்படி சகல துன்பங்களையும் அனுபவித்துக்கொண்டு அழிவின் விழம்பில் நிறுத்தப்பட்டிருக்கும் இந்த சமூகத்தைப்பற்றி கொஞ்சமேனும் நெஞ்சில் ஈரத்துடன் சிந்திப்பீர்களானால் நீங்கள் மனிதர்கள்.
தமிழ்நியூஸ்வெப்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment