Tuesday, July 22, 2008

முல்லைத்தீவு மேற்கை நோக்கி படையினர் முன்னேற்றம்

கிழக்கு மாகாணத்தினை முழுமையாக மீட்டுள்ள படையினர் வடக்கிலும் பல பகுதிகளைக் கைப்பற்றியுள்ளதுடன் தற்போது முல்லைத்தீவு மேற்குப் பகுதியினை நோக்கி முன்னேறி வருகின்றனர். இப்பகுதியும் இன்னும் சில தினங்களில் படையினரின் முழுக் கட்டுப்பாட்டுக்குள் வந்து விடும் என்று இராணுவப்பேச்சாளர் பிரிகேடிய உதய நாணயக்கார தெரிவித்தார்.
தேசிய பாதுகாப்பிற்கான ஊடக மத்திய நிலையத்தில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில் மேலும் கூறியதாவது; மன்னார், இலுப்பைக்கடவை பகுதியை தமது முழுமையான கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்துள்ள படையினர் அங்கிருந்து இரண்டு கிலோமீற்றர் தொலைவை நோக்கி முன்நகர்ந்துகொண்டிருக்கின்றனர்
படையினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் தொடர்ச்சியாக இடம்பெற்ற மோதல்களையடுத்து விடத்தல்தீவு மற்றும் இலுப்பைக்கடவை போன்ற பகுதிகள் படையினரால் கைப்பற்றப்பட்டு அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. 53 ஆம் படையணியினரின் தீவிர படை நடவடிக்கை காரணமாக 2007ஆம் ஆண்டு தொப்பிகலைப் பகுதி கைப்பற்றப்பட்டதை அடுத்து கிழக்கு முழுவதும் படையினரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
கிழக்குப் பிரதேசம் முழுமையாக கைப்பற்றப்பட்டதை அடுத்து யோதவாவிக்கருகே அமைந்துள்ள உயிலங்குளம், ஆந்தன்குளம், பரப்பாங்கண்டல், பரப்புக்கடந்தான், மனனாரின், விடத்தல் தீவு, இலுப்பைக்கடவை, என்று விடுதலைப் புலிகளின் இதயமாக விளங்கிய அனைத்தப் பகுதிகளும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டன. தற்போது இலுப்பைக்கடவைப் பகுதியிலிருந்து இரண்டு கிலோமீற்றர் தொலைவை நோக்கி படையினர் தற்போது முன்னகர்வு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments: