Wednesday, June 11, 2008

ஆபிரிக்காவை ஆட்கொண்டிருக்கும் ஒபாமா "பித்து"

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் ஒபாமா தேர்தலில் வெற்றிபெறுவாரா? இல்லையா? என்பது ஒருபுறமிருக்க, ஆபிரிக்காக் கண்டம் முழுவதும் பராக் ஒபாமா தொடர்பான எதிர்பார்ப்பும் பித்தும் பரவலாக அதிகரித்துக் காணப்படுகிறது.

கென்யாவில் பிறக்கும் குழந்தைகளுக்கு ஒபாமாவின் பெயரை சூட்டி மகிழ்கின்றனர். ஆவலுடன் பருகும் பியருக்கு "செனட்டர்' ரகப் பியரென குறிப்பிட்டு அவரைக் கௌரவிக்கின்றனர். கிராமப்புறத்திலிருக்கும் ஒபாமாவின் பாட்டியின் வீட்டிற்கு வெளிப்புறத்திற்கு உலக தொலைக்காட்சி நிறுவனங்கள் படையெடுத்துள்ளன.

உகண்டாவிலுள்ள நகரமொன்றின் வீதிக்கு "ஒபாமா பவுலீவார்ட்' என்று மறுபெயர் சூட்டப்பட்டிருக்கிறது.

ஒபாமாவைப் புகழ்ந்து பாராட்டி நைஜீரியாவின் போராளிகள் குறுகியகால யுத்தநிறுத்த அறிவிப்பை மேற்கொண்டுள்ளனர்.

ஆண்டு பூராவும் ஆபிரிக்காவை "ஒபாமா பித்து' பிடித்து ஆட்டுகின்ற போதும் கடந்தவாரம் அமெரிக்க ஜனநாயகக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராவதற்கு ஒபாமா தகுதி பெற்றதையடுத்து ஆபிரிக்கர்கள் அடைந்திருக்கும் மகிழ்ச்சி நியாயப்படுத்த முடியாத அளவுக்கு அபரிமிதமாக அதிகரித்துள்ளது.

ஆபிரிக்கரை தந்தையாகக் கொண்ட ஒருவர் உலகில் மிகவும் அதிகாரமுடைய பதவிக்கு செல்லப்போகிறாரென்ற எதிர்பார்ப்பு எங்கும் பரவலாகக் காணப்படுகிறது.

தமது வேட்பாளராக கறுப்பினத்தவர் ஒருவரை வெள்ளையினத்தவர்கள் தெரிவுசெய்ய முடியுமென்ற யதார்த்தமானது அமெரிக்காவில் ஏற்பட்டிருக்கும் உளரீதியான புரட்சி என்று வர்ணித்திருக்கிறார், செனகல் ஜனாதிபதி அப்டவுலாயே வேட்.

ஆனால், வெள்ளை மாளிகைக்குள் ஒபாமா பிரவேசம் செய்தால் அவரால் ஆபிரிக்காவுக்கு கணிசமான அளவுக்கு அனுகூலங்களை தேடித்தருவாரா என்பது சந்தேகம் தான்.

ஒபாமா ஜனாதிபதியானால் உலகின் வறிய கண்டமான ஆபிரிக்காவுக்கு உதவி, வியாபாரம், அரசியல் ஆதரவு கிடைக்குமென பல இலட்சம் ஆபிரிக்கர்கள் எதிர்பார்க்கின்றனர். ஆனால், இது அளவுக்கு அதிகமான எதிர்பார்ப்பென வேறு பலர் எச்சரிக்கின்றனர்.

"இந்தக் கொண்டாட்டங்கள் முன்முதிர்வற்றவை, அவர் ஜனாதிபதியாகும் விடயம் இன்னமும் பூர்த்தியடையாததொன்று' என்று கென்யாவின் தினசரியான "நேசன்' நினைவூட்டியிருக்கிறது.

ஒபாமாவின் மறைந்த தந்தையார் கென்யநாட்டவராகும். இரண்டு வருடங்களுக்கு முன்பு ஒபாமா கென்யாவுக்கு வருகை தந்தபோது உற்சாகமான வரவேற்பு அளிக்கப்பட்டது. தனது மூதாதையரை சந்திக்க அவர் வருகை தருவதற்கு அப்பால் ஆபிரிக்காவில் அவருக்கு ஆர்வத்துடனான வரவேற்புகள் இடம்பெற்றதற்கான பதிவுகள் இல்லை.

தந்தையார் கென்ய நாட்டவராக இருந்தாலும் சர்வதேச ரீதியாக வாஷிங்டன் முன்னுரிமை கொடுக்கும் பட்டியலில் ஆபிரிக்காவுக்கு ஒபாமா முன்னுரிமை கொடுப்பாரென்பதற்கு உத்தரவாதம் இல்லை. ஆபிரிக்க வர்த்தகத்துக்கு மிகவும் பாதிப்பை ஏற்படுத்தும் பண்ணை சட்டமூலத்துக்கு ஒபாமா ஆதரவளித்தமையையும் மக்கெய்ன் ஆதரவளிக்காததையும் ஞாபகத்தில் கொள்ளுமாறும் லண்டனை தளமாக கொண்டு செயற்படும் ரோயல் ஆபிரிக்க சங்கத்தின் பணிப்பாளர் ரிச்சர்ட் டவுடன் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஜனாதிபதிகளை முழுமையான அதிகாரங்களை கொண்டவர்களெனவும், சகலவற்றையும் அறிந்தவர்களெனவும் ஒரே நேரத்தில் எங்கும் பிரசன்னமாகி இருப்பவர்களெனவும் ஆபிரிக்கர்கள் நினைக்கின்றனர். ஆனால், அமெரிக்க ஜனாதிபதி பதவி என்பது இதற்கு முரண்பட்டதொன்றாகும். சூழ்நிலைக்கு ஏற்புடையதாக செயற்படும் பதவி அதுவென்று கென்யப்பத்தி எழுத்தாளர் மக்காவு முட்டுவா கூறியுள்ளார்.

No comments: